FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 29, 2012, 08:54:37 PM

Title: தலைப்பற்ற கவிதை
Post by: ஆதி on August 29, 2012, 08:54:37 PM
திறந்து உள்ளே
நுழைய முயலுகையில்
இழுத்து சாத்துகிறாய் மனதை

எல்லயற்ற மனதுக்கு எல்லை வகுகிறாய்
சுற்றுச்சுவர் எழுப்புகிறாய்
கதவு வைக்கிறாய்

யாரும் தாண்டி உள்வந்துவிடும்
சாத்தியங்கள் உணரும் தருணத்தில்
பலவீனங்களை கண்டறிய
பலகோண பரிசீலனை செய்கிறாய்
கூரையீட்டு மூட முடிவெடுத்து
கனத்த கம்பிகள் மேல் கலவை படர்த்தி
தடித்த மேல்தளம் அமைக்கிறாய்

தனித்த வெற்றறையின் புழுக்கத்தில்
உள்ளிருக்க இயலாமல்
கதவை திறந்து
அகமும் புறமும் வருவது போவதுமாய் இருக்கிறாய்

மிதமிஞ்சிய தனிமையின் கணங்களில்
தட்டப்படாத கதவுகளை திறந்து
யாரும் காத்திருக்கிறார்களா என்று பார்க்கிறாய்

யாரும் இல்லாததால் தொற்றிக் கொள்ளும் சோர்வில்
தொய்ந்து உள் திரும்புகிறாய்
யாரும் இருந்திருந்தால் தொற்றிக் கொண்டிருக்கும்
மகிழ்ச்சியென திட்டவட்டமாய் உரைக்கிறாய்

சுமக்க முடியாத உனது
தனித்த அறையை தூக்கி கொண்டு
ஊரூராய் போகிறாய்
கோவில் கோவிலாய் திரிகிறாய்
ஏதோ ஒரு ஆஸ்ரமத்தில் குருஜி சொன்ன‌
அமுத மொழிகளின் உபயத்தில்
சுவரை கொஞ்சம் பேர்த்து
குளிர்சாதனம் பூட்டுகிறாய்
வெளிப்புறம் கேமிராக்கள் பொருத்தி
கணினி மூலம் கண்காணித்தவாறு
உட்புறமே அமர்த்து கொள்கிறாய்

வெளியே உன்னை யாரும் பார்த்ததாக‌
சொல்லுவதே இல்லை
Title: Re: தலைப்பற்ற கவிதை
Post by: Global Angel on August 29, 2012, 10:23:25 PM


ஆதி எதோ ஒரு மனக்குழப்பம் இந்த கவிதை எனக்கு புரியவே மாட்டேங்குது ... இந்த கவிதை பணம் படைத்த  மக்களுக்கான  கவிதைதானே
Title: Re: தலைப்பற்ற கவிதை
Post by: ஆதி on August 29, 2012, 11:00:16 PM
இந்த கவிதையை நீங்கள் எப்பது அணுகுகிறீர்களோ அப்படி பொருள் தரும்

அண்டைவீட்டுக்காரன் பெயர் கூட தெரியாத அடுக்கக(ப்ளாட் இஸ்டம்) வாழ்க்கையில் மனிதர்களோடான நெருக்கமிழந்து தனிமை வெளியில் சாம்ராஜியம் அமைத்து கொண்டுவிட்டோம், அந்த தனிமையை உணரும் போது அதைவிட்டு வெளிவற சரியான செயலை செய்யாமல் மற்ற பிறவற்றை செய்து கொண்டிருக்கிறோம்

ஒரு தெளிவான ஆரம்பமோ, தெளிவான முடிவோ இல்லாமல், மையமும் இல்லாமல்( அதனால்தான் தலைப்பு வைக்கவில்லை) பின்னவீனத்துவம் தோய்ந்து எழுதிய கவிதை

படிமங்களை இல்லாமல், யார் யாரை பற்றி சொல்கிறார்கள், அல்லது நானே என்னை பற்றி பேசுகிறேனா ? அல்லது ஒரு பெண்ணுடன் பேசுகிறேனா ? அல்லது யாரையும் திட்டுகிறேனா ? அல்லது ஒரு நோயாளியிடம் பேசுகிறேனா ? என்று மையமில்லாமல் எழுதியது

சூழல் கிடையாது, ஆன்மிக குருக்களின் போதனை மன அமைதியை தரவில்லை மனிதனை இன்னும் மனிதனிடம் இருந்து பிரிக்கிறது எனும் தர்கத்தையும், தொழிநுட்பங்கள் நம்மை சமூக வாழக்கையை இழக்க வைக்கிறது எனும் தர்கத்தையும், குருக்களையும், தொழில்நுட்பத்தையும் கேள்விக்குள்ளாகி நாம் சரியான திசையில் செல்கிறோமா எனும் சந்தேக‌த்தையும், கடைசி பத்திக்கு முந்தைய பத்தியில் பதிவு செய்திருக்கிறேன்
Title: Re: தலைப்பற்ற கவிதை
Post by: Global Angel on August 29, 2012, 11:05:03 PM
நன்றி ஆதி ... புரிந்து கொண்டேன் ... அப்போது ஏதோ மனக்குழப்பம் தீர்ந்ததும் எல்லாம் புரிந்தது இப்பொது உங்கள் விபரிப்பும் விளக்கமும் நன்கு புரிய வைத்தது நன்றிகள் அருமை ,.