FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Anu on August 29, 2012, 10:20:38 AM

Title: கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு!
Post by: Anu on August 29, 2012, 10:20:38 AM
கிருஷ்ண தேவராயரின் அரசவையில் விதூஷகனாக இருந்த தெனாலி ராமனின் திறமையையும், புத்திக்கூர்மையையும் மெச்சி, மன்னர் அவனை மிகவுமே மதித்தார். ஒருமுறை, அவனைப் பாராட்டி, தங்கக் காசுகள் நிறைந்த ஒரு பெரிய பானையைப் பரிசளித்தார். தெனாலி ராமன் மிகவும் மகிழ்ந்து, அந்தப் பானையைத் தூக்கினான். அதனுடைய
பாரத்தால், அது அவன் கைகளில் இருந்து நழுவிக் கீழே விழுந்து, பொற்காசுகள் சிதறின. தரையில் குனிந்து காசுகளைப் பொறுக்கத் தொடங்கினான். சபையிலிருந்த அனைவரும் அந்த வேடிக்கையான காட்சியைக் கண்டு பெரிதாகச் சிரித்தனர்.

சமயோசிதமாக, தனது தோளில் இருந்த மேலாடையில் சிலவும், தனது சட்டைப் பைகளில் சிலவுமாகப் போட்டு, பானையின் பாரத்தைக் குறைத்தான். மீதமிருந்தவற்றைப் பானையில் நிரப்பினான். மூளையை உபயோகித்து அவன் செய்த இந்தச் செயலைக் கண்ட ராஜா மேலும் மகிழ்ந்தார்.

மன்னரை வணங்கியபின், தெனாலி ராமன் திரும்பிச் செல்லும்போது, அவனது சட்டைப்பைகளில் இருந்து சில காசுகள் கீழே விழுந்தன. அவற்றையும் பொறுமையாகப் பொறுக்கத் துவங்கிய அவனது செயலைக் கண்ட சபையோர், 'இப்படி ஒரு காசு கூட விடாமல் இவ்வளவு கஞ்சத்தனமாகப் பொறுக்குகிறானே' எனத் தங்களுக்குள் ஏளனமாகப் பேசிக் கொண்டனர்.' இதைப் பார்த்த மன்னராலும், 'ஏனிப்படி பேராசை பிடித்து அலைகிறாய். அதுதான் வேண்டிய அளவுக்குப் பானையிலும், மேலாடையிலும், பைகளிலும் நிறையக் காசுகள் இருக்கின்றனவே' எனக் கேளாமல் இருக்க முடியவில்லை.

தெனாலி ராமன் அமைதியாக மன்னரைப் பார்த்து, ' மஹாராஜா, இந்தக் காசுகளிலெல்லாம் தங்களது திருவுருவச் சின்னம் பதித்திருக்கிறது. சபை கலைந்து செல்லும்போது, அதை எப்படி நான் மற்றவர் கால்களில் மிதிபடும்படி விட்டுச் செல்ல முடியும்? நீங்களே சொல்லுங்கள்!' என்றான். சமயோசிதமான இந்தப் பதிலைக் கேட்ட மன்னர், அவனது புத்திக்கூர்மையைப் பாராட்டி, இன்னுமொரு பானைத் தங்கக் காசுகளைக் கொடுத்து அனுப்பினார்.

நீதி: நிலைமையை அனுசரித்து, தக்க செயல் செய்வது மேலும் பயனளிக்கும்.