FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 28, 2012, 12:52:59 PM

Title: முகிலும் நானும்
Post by: ஆதி on August 28, 2012, 12:52:59 PM
மந்தாரமிட்டு பெய்த
பால்ய முகல்கள்
அறியும்
மழை மீதான
என் காதலை

பள்ளிப் போதுகளில்
பால்முகில் ஏதேனும்
சூல்கொண்டிருப்பதாய்
பாவனை செய்தாலும்
பரவசமாகிவிடும் மனம்.

இருப்பினும்
நனைதலுக்கான என் காத்திருப்பை
நசுக்கி ஏறியும் மழையாடையோடு
வந்திடுவாள் அம்மா..

பிற்பகல் ஒன்றில்
தாழ்வாரத்தில்
சரிந்திருந்த சரங்களுடன்
சரசமாடி கொண்டிருந்ததால்
சட்டுவத்தால் புடைக்கவும் செய்தாள்..

அடைமழை நாட்களில்
குடையை மறுதலிக்க முயல்கையில்
தன் அதட்டல் வேட்டால்
என் குதூகலக் கனவுகளை
அடியோடு தகர்த்திடுவார் அப்பா..

முற்றத்தில் பின்பொருநாள்
முடிப்பவிழ்த்த முகிலை
பொறுக்க முனையாமல்
புறக்கணித்துவிட்டேன் நானும்
தேர்வின் காரணமாய்..

இன்றோ
மறுக்கப்பட்ட மழைக்கும் சேர்த்து
முகிலாடி மகிழ்ந்தாலும்
மனதின் ஆழத்தில்
உலாவிக் கொண்டுதான் இருக்கிறது
நனைதல் பொருட்டான
என் முந்தைய ஏக்கங்கள்..
Title: Re: முகிலும் நானும்
Post by: Global Angel on August 28, 2012, 12:58:36 PM

Quote
இன்றோ
மறுக்கப்பட்ட மழைக்கும் சேர்த்து
முகிலாடி மகிழ்ந்தாலும்
மனதின் ஆழத்தில்
உலாவிக் கொண்டுதான் இருக்கிறது
நனைதல் பொருட்டான
என் முந்தைய ஏக்கங்கள்..

மழை என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது ... மழை பற்றி அருமையான கவிதை வரிகள் ...