FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 27, 2012, 06:27:06 PM
-
முதுகில் ஆழப்பாய்ந்த
வலியோடு இரத்தம் சுவைத்திருந்தது
துரோகத்தின் கத்தி ஒன்று..
நேற்று
இதே கத்தி
எவரின் முதுகிலேயோ
உயிர்க் குடித்திருந்திருக்கலாம்..
நாளை
யாரோ ஒருவரின்
முதுகில் பாய
குறி வைத்துக்கொண்டிருக்கலாம்..
யாதொரு நேரத்திலும்
யாதொரு இடத்திலும் இருந்து
இந்த கத்தி பாய்ந்து வரலாம்
நம் நம்பிக்கைகளை
மணல் துகளாக்கியவாறு..
மற்றக் கத்திகள் போலில்லை
துரோகத்தின் கத்தி..
இது குத்தப்பட்டப் பிறகு
வெறுப்பை கக்குபவை..
உறவுகளின் மீதான நம்பிக்கையை
மறுப்பரிசீலனைக்கு உட்படுத்தி
சந்தேகத்தை உள்ளூற வைப்பவை..
யாவரும் ஏதாவது ஒரு தருணத்தில்
எவராவது ஒருவரால் குத்தப்பட்டு
இதன் கசப்பை அனுபவித்திருந்தாலும்
தம் மனதுக்குள் மறைமுகமாய்
வைத்திருக்கின்றனர் இதனை..
பயன்படுத்தியவர்
பயன்படுத்தாதவர் யாவரும் இதனை
கூர் தீட்டி தயார் நிலையில்
வைத்திருக்கின்றனர்
ஒரு முதுகை எதிர்பார்த்து..
பின் வரும் நாளின்
கோர கணமொன்றில்
எவரின் முதுகிலாவது
இதே கத்தி செருகப்படலாம்
கொடும் வன்மத்தின் அடையாளமாய்
என் கைரேகைகளுடன்..
-
யாதொரு நேரத்திலும்
யாதொரு இடத்திலும் இருந்து
இந்த கத்தி பாய்ந்து வரலாம்
நம் நம்பிக்கைகளை
மணல் துகளாக்கியவாறு..
தத்ரூபமான வரிகள் ... துரோகத்தின் கத்தி ... துரோகம் நிஜமாகவே கத்தி போல கூரானது ... அதன் வலிகள் வேதனைகள் அனுபவிப்பவர்கட்கு மட்டுமே புரியும் ... மிகவும் அருமை ஆதி