FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Anu on August 27, 2012, 07:52:00 AM

Title: யாரோ ஒருவனாக...
Post by: Anu on August 27, 2012, 07:52:00 AM
வளர்வதும், தேய்வதும் மாற்றமே. வாழ்க்கையில் ரசிக்கத்தக்க மாற்றம் என்பது இருக்கும் நிலையில் இருந்து ஒரு அங்குலம் அளவேனும் உயர்வதுதான். அப்படி உயர்வை நோக்கிய மாற்றம் வேண்டுமென்று நினைத்தால், இதுவரை செய்து கொண்டிருந்த செயல்களை, இதுவரை செய்தது போலவே தொடர்ந்து செய்தால் உயர்வு என்பது வெறும் கானல் நீரே. செய்து கொண்டிருந்த செயல்பாடுகளில் இருந்து, இயங்கிக் கொண்டிருந்த தளத்தில் இருந்து புதிய செயல்களைத் துவக்குவதும், புதிய தளத்தில் தடம் பதிப்பதும் மிக மிக முக்கியம்.

ஆனால், இயங்கும் தளத்தில் இருந்து, புதியனவற்றிற்கு தடம் மாறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வாழ்க்கையில் மிக அதிகமான மனப்போராட்டங்களைச் சந்திப்பதும், ஆர்வமும் மற்றும் தோல்வி குறித்த பயமும் இயல்பாய் மனதில் எழுவதும் ஒரு புதிய செயலைத் துவங்கும் போதுதான். சில நேரங்களில் தடம் தீர்ந்துபோய் முட்டுச் சந்தில் நிற்பது போல் உணர்வதும் உண்டு.

அதே சமயம் கடந்த காலங்களைத் திரும்பிப் பார்த்தால் நாம் எடுத்த பெரும்பாலான முயற்சிகளில் தோல்விகளை விட வெற்றிகளையே அதிகம் சுவைத்திருப்போம், ஆனாலும் தோல்வி குறித்த பயமே மீண்டும், மீண்டும் மனதில் புதிய முயற்சிகளின் போது மேலோங்கி நிற்பதும் தவிர்க்க முடியாதது.

இது மாதிரியான நேரங்களில் மிக முக்கியத் தேவையாக இருப்பது, மிகத் தெளிவாக அலசும் குணம்.

செயலைத் துவங்கும் காரணம்

செயல் குறித்த அறிவு

முதலீடு (பணம், உழைப்பு, நேரம்)

வெற்றி தோல்விக்கான சதவிகிதம்

எதிர்கொள்ள வேண்டிய பாதகம் (ரிஸ்க்)

இதை அடிப்படையாகக் கொண்டே புதிய செயல் குறித்து முடிவு செய்யவேண்டும். அதே நேரம் இவற்றையெல்லாம் தாண்டி அதிகமாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை.

செயலை எந்த நேரத்தில், எந்த இடத்தில் எதன் பொருட்டு துவங்குகிறோமோ, அதை ஒருவேளை நாம் தொடங்காவிட்டால், அந்த செயல் துவங்கப்படுமா? அல்லது கைவிடப்படுமா? என்பதை அலசி ஆராய்தல் மிக முக்கியம்.

ஒரு வேளை நாம் அந்த காரியத்தை செய்யாமல் விட்டு விட்டால், வேறு யாரும் அதை செய்யவே மாட்டார்கள் எனில், ஒன்று அந்தக் காரியம் நிறைவேற்ற முடியாத அளவு கடினமானதாக இருக்கும் அல்லது அந்த காரியத்தால் மிகப் பெரிய பலன் ஏதும் இருக்காது.

அதே சமயம் நாம் தயங்கித் தவிர்க்கும் காரியத்தை, இன்னொருவர் நிச்சயம் துவங்க வாய்ப்புண்டு என்பது உறுதியாக தெரிந்தால் அந்த காரியத்தை தவிர்ப்பது மிகப் பெரிய முட்டாள்தனம்.

ஏனெனில்...
“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”

“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”
Title: Re: யாரோ ஒருவனாக...
Post by: Global Angel on August 27, 2012, 11:53:25 PM
ஆமா அனும்மா ... ஆனால் எங்கே  தோற்று விடுவோமோ என்ற பயம்தான் பின்னிக்க தோன்றுகிறது ... அதை தவிர்த்தல் நிச்சயம் வெற்றி கனிகளை பறிக்கலாம்