FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on August 27, 2012, 07:46:29 AM

Title: சொல்ல மனம் கூசுதில்லையே...
Post by: Anu on August 27, 2012, 07:46:29 AM
வறுத்த எள்ளும்
நாட்டுச்சக்கரையும்
சேர்த்து இடித்துப் பிசைந்த
எள்ளு உருண்டை...

செடியோடு பிடுங்கி
ஓடுந்தண்ணீரில் அலசி
தணலில் வாட்டி பாதிபச்சையாகத்
தின்ற வேர்க்கடலை...

நசுங்கும் கரும்போடு
இஞ்சி ஒருதுளியும்
எலுமிச்சம் பழமும் நசுக்கிக்
குடித்த கரும்புப் பால்...

தேன் எடுக்க தீ மூட்டி
மூச்சடைக்க முகம் மறைத்து
கூடு பிய்த்தெறிந்த கையின்
புறத்தில் நக்கிய தேன் துளி...

பக்கத்துக் காட்டு வரப்போரம்
பதுங்கிப் போய் பறித்துவந்து
தீயில் வாட்டி உதடு சுடத் தின்ற
கருகிய சோளக்கருது...

காடு மேடெல்லாம் தேடி
கைவலிக்கப் பிடுங்கி வந்து
குமுட்டியடுப்பில் வேகவைத்து
தின்ற பனங்கிழங்கு...

இதில்...
எதிலும் பங்கு தராமல்
என் மகளிடம் சொல்கிறேன்
எதுவானாலும் உனக்காக
எப்போதும் செய்வேன் என!!

எழுதியது ஈரோடு கதிர்