தண்ணீரே அருமருந்து!
உலகில் உயிரோடு இருப்பதற்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பது மாணவர்களுக்கு ஓரளவு தெரியும். அப்படி இருந்தாலும், பல மாணவர்கள் அதன் அருமை தெரியாமல், தண்ணீரை அலட்சியம் செய்து, பல தேவையற்ற உடல் கோளாறுகளை இழுத்துக்கொள்கின்றனர். எனவே ஒரு மாணவர், எப்போதும் ஆரோக்கியமாக இருக்க, அவர் தண்ணீரின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
நம் உடலின் 3 ல் 2 பகுதி தண்ணீரால் ஆனது. தண்ணீரானது, பல சத்துக்களை கொண்டிருப்பதுடன், நம் உடலின் கழிவு வெளியேற்றத்தில் மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஒரு தவறான கருத்து, மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. உங்களுக்கு தாகம் எடுக்கிறது என்றால், உங்கள் உடலில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்துவிட்டது என்று அர்த்தம். எனவே இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், உணவு உண்ணும்போது தண்ணீரை குடித்துக்கொண்டே இருக்கக் கூடாது. அது ஜீரணத்தைப் பாதிக்கும். நீங்கள் படிக்கும்போது, உங்களின் அருகில் தண்ணீர் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அவ்வப்போது சில மடக்குகள் குடித்துக் கொள்ளலாம். பொதுவாக சாதாரண தண்ணீரைவிட வெதுவெதுப்பான தண்ணீரே சிறந்தது.
ஏதாவது ஜீரணக் கோளாறு ஏற்பட்டால், வெதுவெதுப்பான தண்ணீர் குடித்தால் நல்லது. மேலும் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பவர்களுக்கு, சளி-ஜலதோஷப் பிரச்சினைகள் இருப்பதில்லை. காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்தால், கழிவு உறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.
உடம்பில் போதுமான அளவு தண்ணீர் எப்போதுமே இருக்க வேண்டும். தண்ணீரின் அளவு குறைந்தால் பல உடல் உபாதைகள் ஏற்படும். மலச்சிக்கல், தலைவலி போன்ற பிரதான சிக்கல்களுடன், பொதுவான சோம்பேறித்தனமும் உண்டாகும். மேலும் தூக்க உணர்வும் உண்டாகும். இதனால், நீங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். எனவே, தண்ணீரை எப்போதும் அலட்சியப்படுத்தாமல், போதுமான அளவு எடுத்துக்கொண்டால், உடல்நலம் பாதுகாக்கப்பட்டு, படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கும்.