FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 24, 2012, 04:41:41 PM

Title: வெக்கை
Post by: ஆதி on August 24, 2012, 04:41:41 PM
வெயிலில் மழைபோல்
வழியும்
உன் கோப விழிகளின்
கண்ணீர்துளிகள்..

குமுறும் வானமாய்
உன் மௌனத்தினுள்
வார்த்தைகள்..

பேசாமலும்
பேசிவிட முடியாமலும்
தாழ்ந்துயரும் உன் பொறுமையின்
அளவுகோடுகள்..

ஆதிக்க செருக்கில்
முகம்சுழித்த சொற்களால்
என் குடும்பத்தார்
உன் இதயம் கிழித்த
தருணங்களில்...

நானும்-
அமைதியாய் தானிருந்தேன்
உன் அவமானங்களை
கண்டும் காணாத கயவனாய்...

வெயில் காற்று சுடும்
மின்சாரமற்ற
இந்த இரவில்..

அழுது அழுது
ஆழ்ந்த தூக்கத்தில் எழுந்து
'வெக்கையா ?'
'விசுறவா ?' என்கிறாய்..

பதிலற்று குற்ற உணர்வில்
நீர் தெளித்த பூவாய்
ஈரமாயின என் இமைகள்..

உன் மனதுக்குள் இருக்கும்
வெக்கைக்கு
யார் விசுறுவது ?

Title: Re: வெக்கை
Post by: Global Angel on August 25, 2012, 04:29:26 AM
அம்மா பிள்ளைகளாய் ஆண்கள் இருக்கும் வரை பெண்கள் பாவம்தான் .... எளிதில் மன்னிப்பவள்தான் மனைவி 

Quote
அழுது அழுது
ஆழ்ந்த தூக்கத்தில் எழுந்து
'வெக்கையா ?'
'விசுறவா ?' என்கிறாய்..


பெண்மைக்கும் மென்மைக்கும் கருணைக்கும் இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா ...? அருமையான கவிதை ஆதி