FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 22, 2012, 05:04:12 PM

Title: பெண்கள் வீட்டு விலக்கான தினத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாமா?
Post by: Global Angel on August 22, 2012, 05:04:12 PM

பெண்கள் வீட்டு விலக்காகும் போது எந்தவித சுபநிகழ்ச்சிகளையும் நடத்தாமல் தவிர்ப்பது நல்லது. அந்த நாட்களில் சுபகாரியங்கள் மேற்கொண்டால் தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

என்னிடம், கிரஹப் பிரவேசம், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு நாள் குறிக்க வருபவர்களிடம் கூட, “முதலில் வீட்டில் உள்ள பெண்களுக்கு எந்தத் தேதி சௌகரியமாக இருக்கும் என்று கேட்டு விட்டு வாருங்கள், அதன் பின்னர் நல்ல நாள் குறித்துத் தருகிறேன்” என்றுதான் கூறுவேன்.

தமிழர்களின் சம்பிரதாயங்கள் அனைத்தும் பெண்ணை மையமாக வைத்தே மேற்கொள்ளப்படுகிறது. அதுபோன்ற நிலையில் பெண் உடலளவில் நன்றாக இல்லாத பட்சத்தில் சுபகாரியங்களை மேற்கொள்வது ஏற்புடையதாக இருக்காது.

கிரஹப் பிரவேசத்தில் பசுவை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். பசுவை அழைத்துச் சென்றால்தான் அந்த வீடு புனிதமடையும். அந்த பணிகளைச் செய்ய வேண்டியது அந்த வீட்டின் குடும்பத் தலைவி ஆவார். பசுவை ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டியதும் பெண்களே. வீட்டு விலக்கான நாட்களில் அதுபோன்ற காரியங்களை (ஆரத்தி எடுத்தல்) பெண்கள் செய்யக் கூடாது.

ஒரு சில கிராமங்களில் இன்றளவிலும் வீட்டு விலக்கான பெண்களை தனிமைப்படுத்தி விடுவார்கள். அந்தப் பெண்களை எந்த வீட்டு வேலையும் செய்யவிட மாட்டார்கள். இதற்கு காரணம், வீட்டு விலக்கான சமயத்தில் அவர்களுக்கு பூரண ஓய்வு தேவை. மாறாக பெண்களை தீண்டதகாத முறையில் நடத்துகிறார்கள் எனக் கருதக் கூடாது.

எனவே, சுபகாரியங்களுக்கு தேதி குறிக்கும் போது பெண்களிடம் முழுமையாக ஆலோசனை செய்த பின்னரே, அந்த வீட்டுப் பெரியவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாத்திரை சாப்பிடலாமா? என்னிடம் நல்ல நாள் குறிக்க வரும் சில பெண்களே கூட, “நீங்கள் தேதியை குறித்து கொடுங்கள். அப்போது சிக்கல் வந்தால், ஏதாவது மாத்திரை சாப்பிட்டு வீட்டு விலக்காவதை தள்ளிப்போட்டுக் கொள்கிறோம்” எனக் கூறுவது உண்டு.

இதனை நான் வன்மையாகக் கண்டிப்பேன். பொதுவாக வீட்டு விலக்கு போன்ற இயற்கையான விடயங்களை தடை செய்வதன் மூலம், பெண்கள் தங்கள் உடல்நலத்திற்கு தாங்களே கேடு தேடிக் கொள்கின்றனர். சுபகாரியத்திற்காக மாத்திரை சாப்பிட்டு வீட்டு விலக்காவதை தடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளுக்கு பெண்கள் உள்ளாகலாம். ஹார்மோன் பிரச்சனைகளும் ஏற்படக் கூடும்.

ஒரு சில தருணங்களில் கிரஹப் பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அந்த வீட்டுப் பெண்களுக்கு வசதியான தேதிகளில் நடத்தும் சமயத்தில் கூட, எதிர்பாராதவிதமாக வீட்டு விலக்கு ஏற்பட்டு விடுவது உண்டு.

அதுபோன்ற சமயங்களில் வீட்டில் உள்ள மூத்த தம்பதிகளை முன்நின்று சுபகாரியங்களை நடத்தச் சொல்லிவிட்டு, சம்பந்தப்பட்ட தம்பதிகள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.