FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on August 22, 2012, 02:03:00 PM
-
மழைக்காலம் வந்தாலே சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். திடீரென்று ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் குழந்தைகள்தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மூக்கில் தண்ணீர் வடிவதால் முகமெல்லாம் சிவந்து எரிச்சலடைவார்கள். இந்த தொந்தரவுகளை நீக்குவதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மருந்துகளை கொடுக்கலாம் என்கின்றனர் குழந்தைநல நிபுணர்கள்.
சளி தொந்தரவு ஏற்பட்டாலே குழந்தைகளுக்கு மூக்கு அடைத்துக் கொள்ளும். ஒரு துண்டு சுக்கு எடுத்து தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மாலையிலும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். துளசிச்சாறு, இஞ்சி, தேன் சம அளவு கலந்து குடிக்கத் தரலாம் ஜலதோஷம் நீங்கும். அதேபோல் மூலிகை டீ குடிக்கக் கொடுக்கலாம்.
டீ போடும்போது இஞ்சியைத் தூளாக்கி போட்டுக் கொதிக்க வைத்து குடித்தால் ஜலதோசம் சரியாகும்.
பட்டை, கிராம்பு, பெரிய ஏலக்காய், இஞ்சி, வெற்றிலை ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் பனங்கற்கண்டு கலந்து குடிக்கத் தரலாம். கலந்தோ குடித்தால் சளித்தொல்லை நீங்கும்.
குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இருமல் வந்தால் ஓமவள்ளி, வெற்றிலை, துளசி, இஞ்சி இவற்றின் சாறு எடுத்து தேன் கலந்து குடிக்கத் தரலாம். இதனால் மார்பில் கட்டி இருக்கும் சளி பிரிந்து வெளிவரும். குழந்தைகளுக்கு நெஞ்சுச்சளி அதிகம் இருந்தால் தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
ஒரு சில குழந்தைகள் இரவு நேரங்களில் வறட்டு இருமல் இருமி தூங்காமல் முழித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு கற்பூரவல்லி இலையை அரைத்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு குடிக்கத் தரலாம் நல்ல பலன் உண்டாகும். மேலும் காசநோய், வாதக் கடுப்பு போன்ற நோய்களுக்கும் இதன் சாறு மிகவும் நல்லதாகும்.
வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும். வெந்தயக் கீரையை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொண்டால் சளி சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். இரும்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளது.