FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on August 22, 2012, 01:52:09 PM

Title: தலைவலிக்குதா? தேன் சாப்பிடுங்க!
Post by: kanmani on August 22, 2012, 01:52:09 PM
கண் திறந்து பார்க்க முடியாத அளவிற்கு சில நேரங்களில் தலைவலி உயிர் போகும். தலைவலிக்கான காரணத்தை கண்டறிவது என்பது அப்போதைக்கு இயலாத காரியம். உடனடியாக என்ன நிவாரணம் கிடைக்கும் என்பதையே மனது தேடும். தலைவலிக்கு தேன் சிறந்த நிவாரணம் தரும் மருந்து என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களின் மூலமும் எளிதில் தலைவலியை போக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தலைவலிக்கு தேன் மிகச்சிறந்த நிவாரணம் தரும் மருந்து. சீன மருத்துவத்தில் தலைவலிக்கு சிகிச்சை அளிக்கும் போது தேன் அதிகம் பயன்படுத்துகின்றனர். வெது வெதுப்பான நீரில் தேன் கலந்து கொடுப்பது சீன மருத்துவர்களின் வழக்கம். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கிறதாம்.

இங்கிலாந்தில் வேதியியல் பிரிவு அறிவியலாளர்கள் ஜான் எம்ஸ்லே என்ற அறிஞர் தலைமையில் தேன் பற்றி சில ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில் தேனில் பிரக்டோஸ் என்ற வேதிபொருள் உள்ளது. இது குடிபோதையில் உள்ளோருக்கு ஏற்படும் தலைவலி, மூச்சு திணறல் மற்றும் வாந்தி வருதல் போன்ற சிக்கல்களில் இருந்து விடுவிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். ஆல்கஹால் உட்கொள்வோர் உடலில் அசிட்டால்டிஹைடு என்ற வேதிபொருள் உற்பத்தி ஆகிறது. இதுதான் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதனை தேனில் உள்ள பிரக்டோஸ் என்ற வேதிபொருள் அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது. பின்னர் அது கார்பன் டை ஆக்சைடாக மாறி சுவாசத்தின் போது எளிதாக வெளியேறுகிறது. அதனால் குடிபோதையால் தலைவலி என முணுமுணுப்பவர்கள் நேரடியாக தேனை எடுத்து கொள்ளலாம்.

ஆல்கஹால் அளவு அதிகமாக காணப்படும் ஜின் போன்றவற்றை உட்கொண்டால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் பால் குடித்தால் நன்மை கிடைக்கும். பொதுவாக ஆல்கஹால் உடலிலுள்ள நீரின் அளவை குறைத்து விடும் இயல்புடையது. அதனால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் நீர் அருந்திவிட்டு படுக்க செல்வதும் நலம் தரும் என கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

தேன் தவிர எலுமிச்சை, புதினா, போன்ற பொருட்களும் தலைவலிக்கு நிவாரணம் தரும் மருந்தாக செயல்படுகின்றன. எலுமிச்சையும், தேனும் கலந்து தண்ணீர் சேர்த்து ஜூஸ் சாப்பிடுவது தலைவலிக்கு சிறந்த மருந்தாக அமையும். எலுமிச்சையை பிழிந்து தலையில் பற்று போட்டால் தலைவலி சிறிதுநேரத்தில் குணமடையும். புதினா சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. புதினா இலையை டீ போட்டு குடித்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

வயிறு காலியாக இருந்தாலும் தலைவலி வரும் எனவே சரியான நேரத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். வயிறு நிரம்பினால் தலைவலி சரியாகிவிடும். எதிர்மறை எண்ணங்களும், மன அழுத்தமும் தலைவலியை ஏற்படுத்தும். எனவே நேர்மறையாக எண்ணுங்கள் தலைவலி குணமடையும். அதிகமாக தலைவலித்தால் வெதுவெதுப்பான நீரில் பருத்தி துணியை நனைத்து தலைக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தலைவலி குணமடையும்.

தலைவலிக்கு சிறந்த தீர்வு ஓய்வுதான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்களை மூடி ரிலாக்ஸ் ஆக ஓய்வு எடுங்கள். கட்டை விரலால் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டிருப்பதன் மூலம் தலைவலி குணமடையும். கழுத்து, தலை என மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.