(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-XsSjp4elKi4%2FUCKRyQ3Q5bI%2FAAAAAAAAEtY%2FJcEOOKqjEy0%2Fs1600%2Fllo%2Bani.gif&hash=e3bfe671e0699301a0ab5bdc91bb913c4f20414c)
இப்பொழுதெல்லாம் . வீதியோரங்களில் அநாவசியமாக வீசியெறிப்படுகின்ற உணர்வே காதலாகி விட்டது. காதலாகி கசிந்து மனமுருகி உணர்வுகளை வார்க்க வேண்டிய இந்தக் காதல், இன்று நாகரீகவுலகில் அதன் அர்த்தம் தெரியாமல் அலைமோதுகின்றது.
பல போலிக்காதல்கள் சிறு சலன தூறல்களில் காளான்களாகி கண்காணும் இடங்களிலெல்லாம் பூத்திருக்க, உண்மைக்காதல்களும் உயிர் தளிர்த்து கண்களை குளிர்ச்சிப்படுத்துகின்றன.
இத்தகைய இயல்புமிகு இக் காதலை என் பார்வையின்று "ஐ லவ் யூ" எனக் குதூகலிக்கும் அசையும் படங்களினூடாக ரசிக்கின்றது. இப்பதிவைக் கண்டதும் சிலர் ரசிக்கலாம். சிலர் முகம் சுளிக்கலாம்.
வார்த்தை "தீ"யென்று உச்சரிக்கும் போது நா சுடுவதில்லை. காதலைப் பற்றி சொல்பவர்கள் எல்லாம் காதல் அனுபவம் கொண்டவர்கள் அல்ல...............
இந்த முன்னுரையோடு உங்களுக்கும் "ஐ லவ் யூ " சில விசயங்களை ரகஸியமாகச் சொல்லப் போகின்றது.
வாலிபப் பருவமென்பது வசந்தங்களைத் தேடியழைக்கும் பருவம். சுடுகின்ற யதார்த்தங்களை விட சுகமான கனவுகளை நாடிக் கிடக்கும் பருவம். உள்ளம் ரகஸியமாய்த் தேடும் சுகந்தமான உணர்வின் அறைகூவலில் எதிர்பாலினர் தொடர்பான இரசாயனமாற்றங்கள் அதிகளவில் கசிந்து பொசிந்து கலவையாகும் போது தூதுக்கள் மன்மத அம்புகளாகி குறித்த இதயத்தின் காலடி தேடி ஓடும்
ஏற்றுக் கொள்ளப்படும் காதல்கள் முத்தத்தை மொத்தமாய் கொள்வனவு செய்ய , நிராகரிக்கப்படும் காதல் தூது தன் வாழ்வை சோகத்துள் நனைத்து நிற்கும்.குறித்த இருவரிடத்தில் பற்றுதல் கூடுதலாகி ஈர் இதயங்களும் கிறக்கத்தில் ஓரிதயமாய் வீழ்ந்து தமக்கிடையே தம் உயிர்சாசனத்தில் காதல் ஒப்பந்தத்தை எழுதிவிடுகின்றனர். மன்மதன்களின் கூடலிலே பல ரதிக்கள் மயங்கிக் கிடக்க காதல் வரலாறு அவர்களுக்குள் ஆனந்த புன்னகையை விசிறியவாறு எழுதப்படத் தொடங்குகின்றது
மனித மனங்களை நந்தவனங்களாக்குவதும், மயானங்களாக்குவதும் இந்தக் காதல்தான். காதல் என்பது இதயவேலிகளில் நாட்டப்படும் முள்வேலி என்பதால் பிறரின் காதல் தூதுக்களை உள்ளே நுழைய விடாமல் தடுக்கின்றது. கற்பனைகளின் அரங்கேற்றம் காதல் மனங்களிலேயே பெரும்பாலும் ஒத்திகை பார்க்கப்படும் போது காதல் வயப்பட்ட இருவரும் ஒருவரையொருவர் தமக்குள் ஆபரணங்களாய் அணிந்து தம் காதல் உறவுக்குள் வலிமை சேர்க்கின்றனர். அவர்கள் எந்நேரம் உச்சரிக்கும் மந்திரம் "ஐ லவ் யூ " தான்
கண்கள் வழியாக இறங்கும் காதல் கருத்துக்களில் படிந்து இதயத்தில் சங்கமித்து உணர்வாகி உயிராகும் போது திருமணம் எனும் சடங்கால் அந்தஸ்து பெற முனைகின்றது. மனங்களால் ஒன்றித்தவர்கள் தங்கள் கனவுகளை உயிர்ப்பிக்கும் வரை நிஜம் தொலையும் கற்பனை உலகில் கலந்து கிடக்கின்றனர். அவர்கள் இதயம் இடமாறிக் கொள்ள, விழிகளும் அவர்களைச் சுற்றியே படர்கின்றது. அவர்கள் இதயம் சங்கமிக்கும் உலகில் அவர்களது காதல் நினைவுகள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன. பிறர் பற்றிய பார்வைகளை அலட்சியப்படுத்தி விடுகின்றனர்
தங்களுக்குள் நிதம் நிதம் நிரம்பும் கனவுகளுக்கு உருவேற்றி, அக் கனவுகளின் சிலிர்ப்புக்குள் தன் அன்பானவர்களையும் அடக்கி விடத் துடிப்பார்கள்.. உணர்வுகள் ஏந்தும் ஆசைகள், கனவுகளை மையாக்கி , அவர்களின் மென் கரங்களைச் சூடேற்றி மோகத்தில் தவிக்கும் காதல் கடிதங்களாய் மாற்றி, தன் துணையின் முகம் தரித்திருக்கும் முகவரிக்குள் கடிதங்களைச் நுழைத்து விட காதல் மனங்கள் துடிக்கின்றன. அக் கடிதத்தின் அழைப்பு மணி "ஐ லவ' யூ ' என கோஷித்துக் கொண்டேயிருக்கும் அடுத்த கடிதம் காணும் வரை
எதிர்காலம் அவர்கள் கண்முன் விரிய அக் கடிதங்களில் பல முறை பார்வையைப் பதித்து அடிக்கடி தம் நிஜவாழ்விலிருந்து விலகி, கற்பனை ராஜாங்கத்தின் சிம்மாசனத்தில் இருவருமே ஏறியமர்ந்து முடிசூடிக் கொள்கின்றனர்.காதலர் கரம் சேரும் கடிதங்களும், அவர்களின் நேச அன்பளிப்புக்கும் , உயிர்ப்பான வார்த்தைகளின் ஞாபகங்களுமே இவர்களின் ஆயுட்கால ஆவணங்களாய் உயிருக்குள் ஏறி உட்கார்ந்து கொள்ளும் காலம் முழுதும்!
காதல் ஒரு போதையாகவும், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாகவும் விளங்குவதால் காதல் வயப்பட்டவர்கள் மகிழ்ச்சியூற்றுக்களில் நிதம் தம்மை நனைத்து துன்பமிகு யதார்த்தங்களிலிருந்தும் விலகி விடுகின்றனர். சிறகடிக்கும் அழகிய வண்ணத்துப்பூச்சிகளாய் இருவரும் தம்முலகில் பறக்க முயற்சிப்பதால் புறவுலகை அவர்கள் மறந்து பிறரின் பார்வையில் வெறும் கண்காட்சிப் பொருட்களாய் மாறி விமர்சனத்துக்குள்ளும் வீழ்ந்து விடுகின்றனர் சிறு பிள்ளைத்தனமாய்!
புகையைப் போல காதலையும் மறைக்க முடியாதென்பார். இருவர் மனப்பூர்வமாக ஒருவருக்குள் ஒருவர் நழைந்து வாழ முயற்சிக்கையில் அவர்களையுமறியாமற் காதல் மோகத் தீயை அடுத்தவர் கண்களுக்குள் விசிறி விடுகின்றனர்.அவனும் நோக்க அவளும் நோக்க அவர்களிருவரையும் ஊரார் நோக்க......உள்ளத்தில் மோகித்து சுடர் விட்டெரியும் காதலொளி பிறர் பார்வையில் தீப்பந்தமாய் வெளியே எட்டிப் பார்க்கின்றது. ஊர் பார்வைக்குள் உருளும் காதல்களில் சில திருமண முழக்கத்தில் மனம் மகிழலாம். சில பெரியவர்கள் எதிர்ப்பில் முறிந்தும் போகலாம்
அழகு ஒரு கவர்ச்சியான ஊக்கியாகவிருந்தாலும் கூட பல காதல் முகவழகு தேடாது அகத்தின் இருப்பில் படிந்திருக்கும் மெய்யன்பின் எதிர்பார்ப்பிலேயே குறி வைத்திறங்குகின்றன. நண்பர்கள் துணை நிற்க தம் எதிர்பார்ப்புக்களை வாழ்க்கையாக்க பல மனங்கள் போராட்டத்தில் களம் குதித்தாலும் , சில மனங்களோ எதிர்ப்பின்றி இல்லற பந்தத்தில் பெரியோர் ஆசியுடன் நுழைந்து வாழ்வைத் தொடங்கி விடுகின்றனர்
வாழ்த்துவோம் நாமும் காதலர்களை .............!
அவர்களின் அன்பு ...............தாலியாய் பெண் கழுத்தில் மங்கள நாண் பூட்ட , அவர்கள் தடங்கள் பயணிக்கும் வாழ்க்கையோரங்களில் வீழ்ந்து கிடக்கும் முட்களெல்லாம் மென்மலர்களாய் உருமாறி அவர்களை ஏந்திக் கொள்ளட்டும் காலமுழுவதும்
இனி அவர்கள் மௌனவுலகில் நமக்குள் அனுமதியில்லை. அவர்கள் உலகில் அவர்களே தனித்திருக்கட்டும் தம் கனவுகளைப் பரிமாறிக் கொள்ள
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-wHLiJ8-LjsE%2FUCKXy_lTIBI%2FAAAAAAAAEwc%2FdnFMG62lg4s%2Fs1600%2Fkaruppu.gif&hash=ecaea42d9a0352498894dd0b18bd5a16675fe724)