FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on August 06, 2012, 01:27:59 PM

Title: இளமையோடு ஒரு பழைய காதல்
Post by: Anu on August 06, 2012, 01:27:59 PM
இன்றோ நாளையோ
இறக்கவிருக்கும் மரங்களில்
இளமையோடு துளிர்க்கும்
மலர்ச்  சிசுக்களாய்...
புதுப்புது எதிர்பார்ப்புகளோடும்
விடை தெரியா கேள்விகளோடும்
என் கிழட்டுக் காதல்;


தள்ளாடித் தள்ளாடித்
தேடுகின்றேன்
தொலைந்து போன
பழைய நினைவுகளை...


அந்த மரத்தில் தானே
செதுக்கினோம்
உன் பெயரை நானும்...
என் பெயரை நீயும்...?

எம்மைப் போலவே- காலம்
மரத்தையும் விட்டு வைத்ததில்லை
நரைத்த தலையுடன்
நின்றிருக்கிறது.


புதுப்புது காதல் தடங்களை
தாங்கியிருக்கிறது
படுத்துறங்கிய புல்வெளி!


இந்த இடத்தில் தானே
கைக்கோர்த்து நடை பயின்றோம் ?
ஆமாம்!
இதே இடம் தான்!

இருமருங்கிலும் எழுந்து நின்று
நிழல் பாய் விரித்து
காதலர்களை வரவேற்கும்
பெயர் தெரியா இம்மரங்கள்
"அவள் எங்கே?"
உன்னை தான் விசாரிக்கின்றன


இந்த மரங்களுக்கு
நினைவிருக்கும் நம் காதல்
உனக்கு நினைவிருக்குமோ?


நீ பற்றியிருந்த என் கரங்களில்
தொற்றியிருக்கும்
என் பேரனின் குரல்
இழுத்தெடுக்கிறது என்னை
மீண்டும் நிகழ்காலத்துக்கு
"தாத்தா நேரமாகிவிட்டது
பாட்டி தேடுவாங்க"


என் கேள்விக்கு இல்லாவிட்டாலும்
அந்த மரங்களின் கேள்விக்காவது
விடை சொல்
"நீ எங்கே இருக்கிறாய்?"

- ஜாவிட் ரயிஸ்
Title: Re: இளமையோடு ஒரு பழைய காதல்
Post by: ! SabriNa ! on August 06, 2012, 01:44:07 PM
is dis..ur own work anu sis?