FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on July 29, 2012, 06:39:43 PM

Title: அனுகூலமான தினங்கள் என்றால் எப்படி?
Post by: Global Angel on July 29, 2012, 06:39:43 PM
வார இராசி பலன் வெளியிடுபவர்கள் அனுகூலமான தினங்கள் என்று கூறுகிறார்களே, எந்த அடிப்படையில்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: சாதாரணமாக, ஒவ்வொரு ராசிக்கும் சந்திரனுடைய இடத்தைப் பொறுத்துதான் ராசி பலன் எழுதுவது. தினத்திலும் அப்படித்தான். ஏனென்றால் சந்திரன் அதி விரைவாக 12 ராசிகளையும் சுற்றி வருகிறது. இரண்டேகால், இரண்டரை நாட்களுக்கு ஒரு வீடு. இந்த மாதிரிதான் சந்திரன் சுற்றி வருகிறது. பிறகு ராகு கிரகங்கள். குரு, சனி இதெல்லாம் ராகு கிரகங்கள். இதெல்லாம் எங்கிருக்கிறது என்று பார்த்துதான் எழுதுவோம்.

உதாரணத்திற்கு ரிஷப ராசி என்று எடுத்துக்கொண்டால், அந்த வாரம் எந்தெந்த ராசியில் சந்திரன் போகிறார் என்று பார்க்க வேண்டும். ரிஷப ராசிக்கு 8வது ராசி தனுசு ராசி. அந்த ராசியை சந்திராஷ்டமம் என்று அந்த இரண்டு, இரண்டரை நாட்களைக் குறிப்பிடுகிறோம். சந்திராஷ்டம் இல்லாமல், 9வது, 10வது, 11வது என்று மூன்று வீடுகளில் சந்திரன் போனால், அந்த வாரத்தில் 10, 11வது வீடுகளில் சந்திரன் சஞ்சரிக்கும் காலகட்டம் அனுகூலமான தினங்கள் என்று குறிக்கலாம்.

பொதுவாக இந்த அனுகூலமான தினங்கள் என்றால் சந்திர பலம் அதிகமாக இருக்கும் நாட்கள் என்று அர்த்தம்.

ஒவ்வொரு ராசிக்கும் எந்த இடத்தில் சந்திரன் வரும்போது அனுகூலமான நாட்கள் என்று சொல்வீர்கள்?

சாதாரணமாக ஒவ்வொரு ராசிக்கும் 3, 6, 10, 11 இந்த இடங்களெல்லாம் சந்திரன் வலிமை தரக்கூடிய இடங்கள். சந்திரன் மனோகாரகன், சந்திரன் புத்திக்காரகன், மேலும் சமயோசித புத்தி இதற்கெல்லாம் உரிய கிரகம். சந்திரன் அனுகூலமாக இருக்கும் நாட்களில் நீங்கள் சில முயற்சிகள் மேற்கொள்ளும் போது அதில் வெற்றிகள் கிடைக்கும். இதை கணக்கிட்டுதான் அனுகூலமான தினங்கள் என்று குறிப்பிடுகிறோம்.

சந்திராஷ்டம் என்பது ராசிக்கு 8வது வீடு...

ஆமாம், 8வது வீட்டில் சந்திரன் போய் மறைகிறார். 8வது இடம் விபத்து, மறதி, இயல்பிற்கு மாறாக இருப்பது, மன அழுத்தம் இதெல்லாம் தரக்கூடியது 8வது வீடு. திடீர் பயணம், திடீர் விபத்து, திடீர் பொருள் இழப்பு, அசம்பாவிதங்கள் நிகழக்கூடிய இடம் 8. அதனால்தான் சந்திராஷ்டம் இருக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வது.

அதனால்தான் 8ஆம் எண்ணைக்கூட மக்கள் பயத்துடன் பார்க்கிறார்களா?

8வது இடம் என்பது வேறு, 8ஆம் எண் என்பது வேறு. 8வது வீடு என்பது எதிர்பாராத அசம்பாவிதங்கள், திடீர் சம்பவங்கள் நிகழக்கூடிய இடம். 8 என்பது சனி பகவானுடைய எண். சனி சிலருக்கு பிரபல்ய யோகாதிபதியாக இருக்கிறார். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் இவர்களுக்கெல்லாம் சனி ஒருவரே மிகப்பெரிய ராஜயோகத்தைக் தரக்கூடிய கிரகம். இவர்களெல்லாம் 8ஆம் எண் வண்டி, 8ஆம் எண் வீட்டில் இருந்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதையெல்லாம் பார்க்கிறோம். பிறந்த ஜாதகத்தில் சனி பகவான் நன்றாக இருந்தால் எந்தப் பிரச்சனையும் கிடையாது. 8ஆம் எண்ணைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.