FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on July 24, 2012, 02:47:02 PM

Title: நம்பிக்கை நுனி
Post by: Anu on July 24, 2012, 02:47:02 PM
காசு கேட்டு நேற்று தொடர்ந்து வந்த
தம்பியின் குறுந்தகவல்கள்...

பேசும்போதெல்லாம் செருமிச் செருமி
இருமிய அப்பாவின் கம்பீரமற்ற குரல்...

காதுகுத்தி மொட்டையடிக்க காத்துக்
கிடக்கும் முடிவளர்ந்த தங்கச்சி பையன்...

மூன்று நாளாய் நண்பனைத் தவிர்க்க வைத்த
திருப்பி கொடுக்காத கைமாத்து....

வறண்டு கிடக்கும் கறுத்த பணப்பை
எட்டாத மதிய உணவுக்கு எரியும் வயிறு

சாமானியனின் சரித்திரம் இதுதான் என
சாட்டை சுழற்றி விரட்டும் மாதக்கடைசி...

வாகனத்தை விரட்டி பறக்க, அலறி அழைக்கும்
அலைபேசிக்கு பதில் சொல்ல காலூன்ற

சாலையோரத்தில் காக்கை எச்சம் வழியும்
தலைவரின் கருப்புச் சிலை நிழலில்

இருளை மட்டும் கண்களில் தேக்கியவன்
வாசித்து வழியவிடும் புல்லாங்குழல் இசையில்

கனமாய் இருந்த சுவாசம் மெலிகிறது
எங்கோ நம்பிக்கை விளக்கு எரிகிறது

தவித்து தேடிய கடைசி வரி கிடைத்த
கவிதையாய் மனம் சிலிர்க்கிறது