வியக்கவைக்கும் பறக்கும் மீன் !!!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa7.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2Fs720x720%2F223979_253702384735269_631529966_n.jpg&hash=724a3d3221939c8ba18868a63a7106dc02fc87a0) (http://www.friendstamilchat.com)
மன்னார் வளைகுடா கடலில் தாவித் தாவிக் குதிப்பதும் காற்றைக் கிழித்துக் கொண்டும் செல்லும் மீன்தான் பறக்கும் மீன். கடலுக்கடியில் பல்லாயிரக் கணக்கில் கூட்டம் கூட்டமாக வாழும் இந்த மீனின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது:
""எக்ஸோசீடஸ் என்ற விலங்கியல் பெயருடைய இம்மீனின் முன்துடுப்புகள் மீக நீண்டதாக பறவைகளின் இறக்கைகள் போல இருப்பதால் எளிதாக காற்றில் படபடத்து தாவும் வகையில் உள்ளது. கடல் அமைதியாக இருக்கும்போது கடலின் மேல்மட்டத்துக்கு வருவதில்லை. கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் போது இம்மீன்கள் தண்ணீருக்கு வெளியில் வந்து குதித்தும் காற்றில் சில அடி தூரம் வரை பறந்து சென்றும் கடலில் குதிக்கும். இதனால் இதற்கு பறக்கும் மீன்கள் என்றும் பெயர் வந்தது. அதிக பட்சமாக 6 மீ உயரத்துக்குத் தாவுவதும் சுமார் 50 வினாடிகளில் 70கி.மீ வேகத்துக்கு பறப்பதும் இதன் சிறப்பு. வேகமாக பறக்கும் போது அதன் தூரம் 160அடி வரை பறப்பதாக தெரிய வந்துள்ளது.
காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் வகையில் பறவைகளின் இறக்கைகளைப் போன்றே இதன் முன்துடுப்புகள் இவை எளிதாகப் பறக்க உதவுகிறது. ஒரு விநாடிக்கு 70 முறை இதன் வால் அசைவதால் காற்றில் அந்தரத்தில் ஒரு விதமான பேலன்ஸ் கிடைத்துப் பறக்கிறது. தண்ணீரில் ஒரு முறை குதித்தவுடன் திரும்பவும் தனது முன்துடுப்புகளை முன்பக்கம் திருப்பி தண்ணீரைத் தள்ளி விட்டு நீந்தும். பிறகு மீண்டும் கடலின் மேற்பரப்பில் பறக்க ஆரம்பிக்கும்.பறக்கும் நேரத்தில் தவளையின் கால்களைப் போலவும் இதன் முன்துடுப்புகள் செயல்படுகின்றன.
கடலில் மிதக்கும் தாவர மிதவை நுண்ணுயிரிகள்தான் இதன் விருப்ப உணவாகும்.பறக்கும் மீன்களைக் கடல் பறவைகளும் டால்பின்கள், டுனா, மர்லின் உள்ளிட்ட மீன் வகைகளும் விரும்பிச் சாப்பிடுகின்றன. மீன் பிடிப்போர் ஒளி உமிழும் டார்ச்சுகளை இருட்டில் கடலின் மேற்பரப்பில் அடித்து இதைக் கவர்ந்தும் பிடிக்கின்றனர்.
இந்த மீன்கள் சுவை நிறைந்த உணவாகவும் இருப்பதால் இதனைப் பிடிப்பதில் பல காலமாகவே உலக நாடுகளிடையே போட்டிகள் நிலவுகின்றன. பார்படாஸ், டிரினிடாட், டொபாக்கோ உள்ளிட்ட தீவுகளுக்கிடையே இம்மீனைப் பிடிப்பது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பின்னர் ஐ.நா.சபை இப்பிரச்னையில் தலையிட்டு சமரசம் உண்டாக்கியது.
ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக பிடிபட்டாலும் நமது நாட்டில் இதற்கென்று மீன்பிடி முறைகள் இல்லை. ஆனால் மீனவர்களின் வலைகளில் சிக்கியும் கடல் மாசுபடுவதாலும் இதன் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது. பறக்கும் மீன்தான் பார்படாஸ் நாட்டின் தேசிய சின்னமாகவும் தேசிய மீனாகவும் திகழ்கிறது.''