FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on July 13, 2012, 02:33:51 PM
-
வரிவரியாய் வழியும் வெயில் குளம்பில்
வறண்டு கிடக்கும் வெற்று நிலத்தில்
உயிர்த்துளியாய் சொட்டும் மழையின்
முதல்த் துளியில் பிறக்கும் மண்வாசம்
ஊருக்குத் தெற்கே அத்திப்பழம்,
பொறுக்கப்போகும் ஓடைக் கரையோரம்
பச்சைப்பாம்புகள் பாதுகாப்பில்
பறிக்காமல் கிடக்கும் தாழம்பூ வாசம்
தடுமாற்றத் தோரணங்கள் அணிவகுக்க
துவண்டுகிடக்கும் கனமான நேரங்களில்
தத்திவந்து தோள் பற்றும் மழலையிடம்
பூத்துக்கிடக்கும் பால்வாசம்
நெரிசல் பிணைந்த சாலையில்
எரிச்சலோடு நகரும் வேளையில்
சட்டென கடக்கும் யுவதியின் கூந்தல்
வழியவிடும் மல்லிகை வாசம்
எந்த வாசனை பிடிக்கும் எனக்கேட்ட
பிள்ளையிடம் பட்டியல் இட்டேன்
ஏனோ சொல்ல மறந்தேன், மறுத்தேன்
பாட்டியின் மடி வாசனையை