FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on July 09, 2012, 11:16:34 PM

Title: உடல் இளைக்க உத்தரவாதமா?
Post by: kanmani on July 09, 2012, 11:16:34 PM
டீ குடித்தால் உடல் இளைக்குமா?
கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிட்டால் ஷேப் வருமா?
படித்த யாராவது இவற்றையெல்லாம் நம்புவார்களா?
நம்ப வைக்கின்றன விளம்பரங்களும் டெலிஷாப்பிங் அறிவிப்புகளும்!
குறிப்பிட்ட நிறுவனத்தின் டீயை குடித்தால் ஒரே மாதத்தில் 7 கிலோ வரை எடை குறையுமாம்.
தமது நிறுவனத் தயாரிப்பான கார்ன்ஃபிளேக்ஸை சாப்பிட்டால், இடை மெலிந்து, இளமை திரும்புவதாக உத்தரவாதம் தருகிறது இன்னொரு விளம்பரம்.
இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை? குறிப்பிட்ட ஒரு உணவு, உடலை இளைக்க வைக்குமா?
விளையாட்டுத் துறை ஊட்டச்சத்து நிபுணரும் எடை நிர்வாக ஆலோசகருமான ஷைனி சந்திரனிடம் பேசினோம்.

‘‘கிரீன் டீ குடிச்சா உடம்புக்கு நல்லதுன்னு பரவலா ஒரு விழிப்புணர்வு இருக்கு. அது நல்லதுன்னு கண்டுபிடிச்ச ஆராய்ச்சியில, ஒரு நாளைக்கு எத்தனை கிராம் கிரீன் டீ எடுத்துக்கணும், எப்படி எடுத்துக்கணும்னு சொல்லியிருப்பாங்க. அதே முறையில குடிக்கிறப்பதான், முழுப்பலனும் கிடைக்கும்.

மத்தபடி, கிரீன் டீ குடிச்சா நல்லதுன்னு கேள்விப்பட்டதை வச்சு, கன்னாபின்னான்னு ஒரு நாளைக்கு பத்து, பதினஞ்சு கப் குடிக்கிறது ஆபத்தானது. அதே மாதிரிதான், உடலை இளைக்க வைக்கிறதா உத்தரவாதம் கொடுக்கிற மற்ற பொருள்களும். உதாரணத்துக்கு எடையைக் குறைக்க வைக்கறதா சொல்ற கார்ன்ஃபிளேக்ஸையே எடுத்துப்போம்... சாதாரணமா இட்லி, தோசை, சப்பாத்தின்னு சாப்பிடற ஒருத்தங்க, அதையெல்லாம் தவிர்த்துட்டு, இந்த கார்ன்ஃபிளேக்ஸை மட்டுமே எடுத்துக்கிறாங்கன்னு வச்சுப்போம்.

சமைக்காத பொருள்... எண்ணெயோ, கொழுப்போ கிடையாது. பாலும் பழங்களும் சேர்த்து சாப்பிடறதால, புரோட்டீனும், நார்சத்தும் கிடைச்சிடுது. உடம்பு தானா இளைக்கத் தொடங்கும். ஆனா, அதை மட்டுமே சாப்பிடற வரைக்கும்தான்... மறுபடி சாதாரண டயட்டுக்கு மாறினா, உடம்பு பழைய எடைக்கு வந்துடும்.

அதனால எந்த ஒரு குறிப்பிட்ட உணவும், மேஜிக் மாதிரி உடம்பை இளைக்க வச்சிடாது. திடீர்னு வீட்ல ஒரு விசேஷம்... அந்த நாள், கொஞ்சம் ஸ்லிம்மா தெரியணும்... இல்லைன்னா ஒரு மாடல் அல்லது நடிகைக்கு ஏதோ முக்கியமான ஷூட்டிங்... அதுல இளைச்ச மாதிரி தெரியணும்னா, இந்த மாதிரி உணவுகளை ஒரு டூல் மாதிரி உபயோகிக்கலாம்.

அவ்வளவுதான். மத்தபடி, இந்த உணவுகளே உடம்பை இளைக்க வச்சு, ஆளையே மாத்திடும்ங்கிறது தப்பான நம்பிக்கை’’ என்கிற ஷைனி, உடல் எடை எக்குத்தப்பாக எகிற ஏராளமான விஷயங்களைக் காரணம் காட்டுகிறார். ‘‘பரம்பரை வாகு, ஹார்மோன் கோளாறு, தைராய்டு, மூளையில உள்ள பிட்யூட்டரி சுரப்பில கட்டி (குஷிங் சின்ட்ரோம்), உடம்புக்கு இயக்கமோ, பயிற்சியோ இல்லாதது, மனசு கஷ்டமா இருந்தாலோ, எதையோ நினைச்சு ஏங்கினாலோ, உடனே எதையாவது சாப்பிடற மனோபாவம், கண்ட நேரத்துல, கண்ட இடத்துல, கண்டதையும் சாப்பிடற வாழ்க்கைமுறைன்னு பருமனுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

பெண்களைப் பொறுத்த வரை வாக்கிங், ஸ்விம்மிங், ஜாகிங் பயிற்சிகளோட சேர்த்து, வாரத்துல 3 நாள், கை, கால் தசைகளைப் பலப்படுத்தி, டைட்டாக்கும், எடை தூக்கற பயிற்சிகளையும் சரியான ஆலோசகர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு செய்தாங்கன்னா, கொழுப்பு குறைஞ்சு, உடம்பும் சரியான ஷேப்புக்கு வரும்.’’