FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Yousuf on August 04, 2011, 02:47:15 PM

Title: சிந்திக்க சில நபிமொழிகள்!!!
Post by: Yousuf on August 04, 2011, 02:47:15 PM
1) உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).

2) மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக (இறை நிரகரிபாளர்களாக) மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்: புஹாரி (121).

3) ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் (இறை நம்பிக்கையாளன்) இன்னொரு முஃமின் (இறை நம்பிக்கையாளன்) விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481).

4) ஒரு முஸ்லிம் (இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவன்) மற்றொரு முஸ்லிமின் (இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவன்) சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் (இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவன்) துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் (இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவன்) குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல்: புஹாரி (2442).

5) உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்: புஹாரி (2444).

6) ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).

7) ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045).

8) மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம்.

9) இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.

10) வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.

11) ஒருவர் மற்றவர்மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாக இருங்கள் என்று எனக்கு வஹி (இறைசெய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இயான் இப்னு ஹிமார் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.

12) எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி.

13) மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.

14) ''நயவஞ்சகனுடைய அடையாளங்கள் மூன்று. (1)அவன் பேசினால் பொய்யே பேசுவான். (2)அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். (3)அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

15) பகைமை கொள்பவர்களும், தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி). நூல் : திர்மிதி

16) கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம்.

17) பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;.

18) நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

19) எவன் ஒரு முஸ்லிமுக்கு (இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவன்) தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை (இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவன்)  கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸிர்மா (ரழி). நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.
20) செயல்களில் சிறந்தது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி).  நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

21) நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே(இறை நிரகரிபாளர்களுக்குமிடையே)) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி (இறை நிரகரிபாளர்) விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான்.

22) இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு (நயவஞ்சகர்களுக்கு) பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி.

23) இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ.

24) தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' (அல்லாஹ் பரிசுத்தமானவன்) என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.