FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on June 20, 2012, 02:38:17 PM
-
மௌனத்தை மொழிபெயர்த்ததில்
சம்மதமும் மறுப்பும் கிடைத்தது
அமைதி தொலைந்துபோனது!
பயணத்தை மொழிபெயர்த்ததில்
ரசிப்பும் அலுப்பும் கிடைத்தது
பாதை தொலைந்துபோனது!
காதலை மொழிபெயர்த்ததில்
கணக்குகளும் காமமும் கிடைத்தது
அன்பு தொலைந்துபோனது!
பணத்தை மொழிபெயர்த்ததில்
சொத்தும் கடனும் கிடைத்தது
இலக்கு தொலைந்துபோனது!
வன்மத்தை மொழிபெயர்த்ததில்
பகையும் குரோதமும் கிடைத்தது
உறவு தொலைந்துபோனது!
போரை மொழிபெயர்த்ததில்
வெற்றியும் துரோகமும் கிடைத்தது
மனிதம் தொலைந்து போனது!
இறுதியாய் என்னை மொழிபெயர்த்ததில்
பிம்பமும் முகமூடியும் கிடைத்தது
நான் தொலைந்துபோனேன்!
எழுதியது ஈரோடு கதிர்