FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: kanmani on June 19, 2012, 11:10:14 PM

Title: கிரகங்கள் சேர்க்கை பலன்கள்
Post by: kanmani on June 19, 2012, 11:10:14 PM
கிரகங்கள் சேர்க்கை பலன்கள்


*    லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான்.

*    லக்னத்திற்கு 4ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான். இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான்.

*    செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வீட்டில் கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வீடு கட்டை சுகத்துடன் வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்க்கையினால் சிற்சில துன்பங்களும் உண்டாகும்.

*    பத்தாம் இடத்தில் 3 கிரகங்கள் இருக்கப்பெற்ற ஜாதகன் உலகம் புகழும் சன்னியாசியாக விளங்குவான். இரண்டு கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகன் தபசியாகவும் ஞானியாகவும் யோகியாகவும் இருந்து மக்களுக்கு அருள் புரிவான்.

*    4ம் வீட்டிற்கு அதிபதியும் சந்திரனுக்கு நான்கிற்குடையோனும் எந்த ராசியில் கூடி நின்றாலும் மேலும் சுக்கிரன் பலம் பெற அந்த ஜாதகன் தேவி பராசக்தியாகிய துர்கையின் மீது பற்று கொண்டு பூஜை செய்து தேவி அனுக்கிரகம் பெறுவான். கொடியவர்களில் சூழ்ச்சிகள் இவனிடம் பலிக்காமல் இவன் வெற்றி கொள்வான்.

*    ஒரு ராசியில் சுபக்கிரகத்துடன் 4 கோள்கள் நிற்க அதற்கு 4லில் இன்னொருவன் இருக்க அந்த ஜாதகன் தீர்க்க ஆயுளுடன் சுகமாக வாழ்வான். குதிரை, யானை பெற்ற அரசனைப் போல அனேகர் புகழ பொன் பொருள் பெற்று சிறப்பான்.

*    8க்குடையவன் 12க்குடையவன் செவ்வாய் ஆகிய மூவரும் எந்த இடத்தில் கூடி நின்றாலும் அந்த ஜாதகன் அன்னிய தேசம் செல்வான். அதே சமயத்தில் இவர்களை சந்திரன் பார்த்தால் சில காலம் வெளிநாட்டில் அதிக பணம் ஈட்டி பின்னர் சொந்த தேசத்திற்கு வந்து சுகமுடன் வாழ்வான்.

*     சனி, செவ்வாய், ராகு இவர்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தோனுடன் கூடி நின்றால் அந்த ஜாதகன் சிவ பூஜையில் பிரசித்தி பெற்றவனாவான். மேலும் ஐயனார், காளி, வீரபத்திரன் போன்ற தெய்வங்களை வணங்கி தேவதை அருள் பெற்று வசியம் செய்யும் வித்தையும் அறிந்தவனாவான்.

*    குருவும் சனியும் ராகுவும் சரம் மற்றும் உபய ராசிகளில் நின்றால் அந்த ஜாதகன் சொந்த இருப்பிடத்தை விட்டு தேச சஞ்சாரம் செய்வான். அதே சமயத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தால் சொந்த ஊரிலேயே பலகாலம் வசிப்பான்.

*    சிம்ம ராசியில் அசுர குருவான சுக்கிரனும் செவ்வாயும் கூடியிருந்தால் அந்த ஜாதகன் வித்தைகளில் தேர்ச்சி பெற்று சிற்ப சாஸ்திரத்தில் வல்லமையும் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடுபவனாகவும் இருந்து அதிக பொருள் சேர்ப்பான். அன்றியும் அவன் விதவைக்கு வாழ்வளிப்பவனாய் விளங்குவான்.

*    குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான். செவ்வாயும் புதனும் இணைந்தால் அவன் செல்வச் செழிப்பு மிக்க பண்டிதனாக விளங்குவான். ஆனால் செவ்வாய் புதன் இவர்களுடன் சுக்கிரன் செர்ந்து எங்கு இருந்தாலும் அவனுக்கு அங்க குறைபாடு ஏற்படும்.

*    குரு, சந்திரன், புதன் இவர்கள் சேர்ந்து எங்கு இருந்தாலும் நல்ல அழகும் ஆயுளும் பெற்று செல்வந்தனாகத் திகழ்வான். சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர் சேர துஷ்டனாகவும் காமியாகவும் விளங்குவான்.

*    இரண்டாம் இடத்தில் விரய ஸ்தானதிபதி நின்றால் அந்த ஜாதகன் மாட மாளிகை ஆகிய வீடுகள் கட்டி சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதியாக குரு, சந்திரன், புதன், சுக்கிரன் இவர்கள் சுபஸ்தானங்களில் நிற்க பொன், பொருள் சேரும். இவர்கள் தசா, புக்தியில் நற்பலன்கள் தருவார்கள்.

*    சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஓரிடத்தில் நிற்க அவன் தனவானாகவும் மனைவியிடம் அன்பு கொண்டவனாகவும் இருப்பான். சூரியனும் குருவும் சேர அரசாங்க செல்வாக்கு பெற்று ஐஸ்வர்யத்துடன் வாழ்வான். சூரியனும் சுக்கிரனும் சேர நல்ல மனைவி அமையப்பெற்று தாம்பத்தியம் அனுபவிப்பதில் சிறந்து விளங்குவான். சனியுடன் சுக்கிரன் கூடினால் கணவன் பேச்சை கேட்காத மனைவி வாய்ப்பாள்.

*    சந்திரன், செவ்வாய், புதன், சூரியன், குரு ஆகியோர் சேர்ந்து இருந்தால் தீய பலன்களே உண்டாகும். அவன் பிறரையும் கெடுப்பான். மேலும் சூரியன், செவ்வாய், சனி, சுக்கிரன் ஒரே வீட்டில் கூடினாலும் ஜாதகன் வறுமையில் உழன்று பிச்சை எடுத்து உண்ணும் கதிக்கு ஆளாவான்.

*    புதன், குரு இவர்களுடன் சந்திரன், சுக்கிரன் இவர்கள் பலம் பெற்று சேர்ந்து நிற்க அதிக செல்வமும் பூமியும் பொன்னும் பொருளும் பெற்று சுகமுடன் வாழ்வான். மேற்கண்ட கிரகங்களுடன் சனி சேர அங்க குறைவு ஏற்படும்.

*    குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான். குரு, சுக்கிரன், சூரியன், செவ்வாய் இவர்கள் சேர அவனும் செல்வாக்கு படைத்த தலைவனாகவும் தீர்க்க தரிசியாகவும் செல்வம் மிகுந்து வாழ்வான்.

*    செவ்வாய்க்கு 4, 7 ஆகிய இடங்களில் சுக்கிரன் நின்றாலோ அல்லது சுக்கிரனுக்கு 5,7,11 ஆகியவற்றில் செவ்வாய் நின்றாலோ அந்த ஜாதகன் பூமியில் சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதி கேந்திர, கோணத்தில் இருக்க வாகன சேர்க்கையும் சொந்தத் தொழில் மூலம் அனைத்து பாக்கியங்கள் அடைதலும் உண்டாகும். விளை நிலங்களும் சேரும். இதனை இவர்களின் தசா, புக்தி காலங்களில் கொடுப்பார்கள்.

*    குரு, சனி, செவ்வாய், புதன் சேர்ந்து நிற்க சந்திரன், சுக்கிரன் இவர்கள் இணையப்பெற்ற ஜாதகன் புவியியல் சாஸ்திரங்கள் அறிந்தவனாக விளங்குவான்.

*    சந்திரன், சுக்கிரன் ஒன்றுசேர குரு, புதன், செவ்வாய் ஒரிடத்தில் நிற்க அந்த ஜாதகன் பாக்கியசாலி ஆவான். அனேக திரவியமும் செல்வாக்கும் அடைவான். பலரை ஆதரித்து எல்லோராலும் புகழப்படுவான்.

*    குரு, புதன், சனி, செவ்வாய், சந்திரன் ஆகியோர் ஒரே இடத்தில் நிற்கப் பிறந்தவன் துன்பங்களை அனுபவித்து கஷ்ட ஜீவனம் செய்வான்.