FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on June 19, 2012, 02:05:10 PM

Title: வாழ்க்கைப் பயணத்தில் …
Post by: Anu on June 19, 2012, 02:05:10 PM
வாழ்க்கையின் பாதையிலே
வெகுதூரம் செல்கையிலே
கல்லிருக்கும் முள்ளிருக்கும்
கள்ளிச்செடி உள்ளிருக்கும்
பாதையை நீ பழிக்காமல்
பார்த்து நட மானிடனே!

பாராட்டு சில நேரம்
வசைபாட்டு சில நேரம்
பாராமுகமாகவே
ஊரிருக்கும் பல நேரம்
மனமுடைந்து முடங்காமல்
தினம் செல்வாய் மானிடனே!

சில சமயம் துணையிருக்கும்
சில சமயம் பகையிருக்கும்
பல சமயம் தனித்தே நீ
பயணிக்கும் நிலையிருக்கும்
இறை இருப்பான் துணையென்று
முறை நடப்பாய் மானிடனே!