FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: thamilan on June 10, 2012, 11:26:07 PM
-
வைகறைத் தொழுகை நேரம்
ஒரு வேளை தொழுகை கூட தவறாமல் தொழும் ஒரு பெரியவர்
வழக்கத்துக்கு விரோதமாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அவரை ஒருவன் தட்டி எழுப்பினான். அவர் திடுக்கிட்டு எழுந்தார்.
"பெரியவரே வைகறை தொழுகை நேரம் முடியப் போகிறது, சீக்கிரம் போய் தொழுங்கள்" என்றான்.
பெரியவருக்கு அவன் யார் என்று தெரியவில்லை.அவனை எங்கும் பார்த்ததாக நினைவில்லை.
"சகோதரா, நல்ல வேளை என்னை எழுப்பினாய். இல்லையென்றால் நான் வைகறை தொழுகையை தவற விட்டிருப்பேன்.உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.உன்னை இது வரை நான் பார்த்ததில்லை. நீ யார்?" என்று கேட்டார்.
அவன் :என் அறிமுகத்துக்கு இப்போது நேரமில்லை. துழுகை நேரம் முடியப் போகிறது. சீக்கிரம் போய் தொழுங்கள்" என்றான்.
பெரியவர் "எனக்கு நன்மை செய்கிற நீ யார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா, நீ யார் என்று சொல்" என்று கேட்டார்.
அவன் " நான் யாராயிருந்தால் உமக்கு என்ன? நீங்கள் தொழுகையை தவற விடக்கூடாதே என எழுப்பினேன். தொழுவதை விட்டு விட்டு நான் யார் என்று கேட்கிறீர்களே" என்றான்.
பெரியவர் " நீ யார் என்று தெரிந்து கொள்ளாமல் என்னால் தொழ முடியாது. நீ யார் என்று சொல்" என்றார்.
அவன் வேறு வழியின்றி " நான் சாத்தான்" என்றான்.
பெரியவர் திடுக்கிட்டார். "அப்பனே, நீ தீயதை செய்யத்தானே தூண்டுவாய். இதென்ன விசேஷம்? என்னை நல்லது செய்யத் தூண்டுகிறாயே. என்ன விசேஷம்" என்று கேட்டார்.
அவன் "அதைப் பற்ரி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். முதலில் போய்த் தொழுங்கள்" என்றான்.
பெரியவர் "உன்னை நான் நம்ப மாட்டேன். நீ ஏதோ திட்டத்துடன் என்னை எழுப்பியிருக்கிறாய். அது தெரியாத வரை நான் தொழப்போவதில்லை. உண்மையை சொல்" என்றார்.
அவன் "பெரியவரே, நான் உங்களை நெடுங்காலமாக கவனித்து வருகிறேன். நீங்கள் ஐந்து வேளைத் தொழுகையையும் நேரம் தவறாமல் தொழுகிறீர்கள்.கெட்ட பழக்கங்கள் எதும் உங்களிடம் இல்லை. உங்களை எந்த வகையிலும் கெடுக்க முடியாது என்பதை அறிந்து கொண்டேன். இன்று வைகறை தொழுகை நேரத்தில், வழக்கத்துக்கும் மாறாக உறங்குவதைக் கண்டேன். நீங்கள் தொழுகையை தவற விடப் போகிறீர்கள் என்பதை அறி ந்து மகிழ்ந்தேன்.
மீண்டும் சிந்தித்தேன். நீங்கள் காலம் கடந்து தொழுவதைவிட
உரிய காலத்தில் தொழுவதே நல்லது என உணர் ந்தேன்.அதனால் தான் எழுப்பினேன்." என்றான்.
பெரியவர் " நான் உரிய காலத்தில் தொழுதால், உனக்கு எப்படி நல்லது?" என்று கேட்டார்.
அவன் " நீங்கள் உரிய காலத்தில் தொழுதால், வெறும் கடமை உணர்வோடு தொழுவீர்கள். ஆனால் உரிய காலம் கடந்து தொழுதால், வருந்துவீர்கள். மிகுந்த அச்சத்தோடு தொழுவீர்கள். இறைவனிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சுவீர்கள். இறைவன் பெருங்கருணையாளன். அவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான். வழக்கமாக நீங்கள் தொழும் தொழுகையை விட மிகுந்த இறை அச்சத்தோடு தொழுவதால், இறைவன் அருள் இன்னும் கூடுதலாக உங்களுக்குக் கிடைக்கும். எனக்கு அது நஸ்டம் தானே. எனவே, உங்கள் நன்மையை குறைக்க முயன்றேன். அது தான் உரிய நேரத்தில் உங்களை எழுப்பினேன்" என்றான்.
இறைவழிபாடு என்பது மனம் ஒன்றி செயல்பட வேண்டும். உடல் மட்டும் வழிபட மனம் எங்கோ அலைந்து கொண்டிரு ந்தால் அது உண்மையான வழிபாடாகாது.
ஒரு செயலை திரும்பத் திரும்பச் செய்யும் போது உடல் அதை இயந்திரத்தனமாக செய்யத் தொடங்கிவிடும். அதில் மனம் ஒட்டாது.
அதனால் தான் அகவழிபாடு சிறந்தது என ஞானிகள் சொல்கின்றனர்.
மனம் ஒன்றாத வழிபாடு வழிபாடல்ல.
வழிபாட்டின் போது ஒன்றாத மனம் பிராத்தனையின் போது ஒன்றுபடுகிறது. ஏனென்றால் நம் தேவைகள் மாறுகின்றன.எனவே பிராத்தனைகளும் வேறுபடுகின்றன. பிராத்தனைகள் ஒவ்வொரு தடவையும் புதிது புதிதாக அமைகிறது.
பிராத்தனை மாறிமாறி அனைவதால் மனம் அதில் ஒன்றுபடுகிறது.
வழிபாட்டின் போது இயந்திரமாக இருப்பவர்கள், பிராத்தனையின் போது மனம் உருகி வேண்டுவதை பார்க்கலாம். சிலர் கண்ணீரும் வடிப்பார்கள்.
"பிராத்தனையும் வழிபாடே" என்றார் நபிகள் நாயகம்.
ஆயிரம் வணக்க வழிபாடுகளை விட, இறைவனை மனம் ஒன்றி நினைக்கும் ஒரு கணமே சிறந்தது.