FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Anu on June 05, 2012, 01:28:42 PM
-
சிலுசிலுவென காற்று விசிறியடிக்கும், நகரமே களைத்து உறங்க முற்படும், நடுநிசிக்கும் கொஞ்சம் முந்திய நேரம். யாருக்கென்று தெரியாமல் விளக்குகள் வெளிச்சத்தைக் கொட்டி இருளைத் தின்று கொண்டிருந்தன. தூரத்தில் இருந்து கவனிக்கும் போதே தெரிந்தது, நடு சாலையில் மூட்டை போல் ஒன்று கிடப்பது. நெருங்க நெருங்க வடிவம் பிடிபட்டது.
பின்னங்கால்களை வயிற்றுக்குள் அடக்கி, முன்னங்கால்களை சற்றே முன் பக்கம் நீட்டி மிக அழகாய் ஒரு சிற்பம் போல் நாய் ஒன்று படுத்திருந்தது. நட்ட நடுச் சாலை, எந்த வித மனிதத் தொந்தரவும் இல்லாமல், தார் சாலை பகல் முழுதும் உள்வாங்கி துகள்துகளாய் கசியவிடும் வெதுவெதுப்பை நெஞ்சு, வயிறு என உள்வாங்கி, காற்று கொண்டு வரும் குளிரை கரைத்துக் கொண்டிருந்தது.
பகலில் பரபரக்கும் சாலை இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது. நாயும் சலனமற்று ஆழ்ந்த அமைதியோடு அந்த நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. வழக்கமாய் மனித நடமாட்டத்தை உணர்ந்து, கொஞ்சம் திரும்பியாவது பார்த்து, குறைந்த பட்சம் “லொல்” என்று ஒரு முறையாவது குரைக்க முயலும் இயல்பு கொண்ட நாய் அமைதியை மட்டுமே கடைப்பிடித்தது.
காலம் காலமாய் நாய்களைக் கடந்து போனவனுக்கு, நடுச் சாலையில் திவ்யமாய் படுத்துக் கிடக்கும் நாயைப் பார்க்க ஆவல் கூடியது. கடக்கும் வேகத்தை முற்றிலும் குறைத்து, பக்க வாட்டில் நின்று கவனிக்க, வயிற்றில் மட்டும் மூச்சை உள்ளிழுத்து விடும் வேகத்திற்கேற்ப மெலிதான அசைவுகள் இருப்பது தெரிந்தது. சாலை மீது பரப்பி வைத்திருந்த மூக்கின் அருகே இருந்த தூசிகள் மட்டும் மெலிதாய் பறந்து பறந்து அடங்குவது வீதி விளக்கின் வெளிச்சத்தில் நிழலாய்த் தெரிந்தது.
விநாடிக்கு விநாடி இதுவா, அதுவா என்று தடதடத்துக் கொண்டிருக்கும், நிலையில்லாத மனது கொண்ட அவனுக்கு அந்த நாயின் அமைதி கனமான ஆச்சரியமாக இருந்தது. ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த வாழ்க்கைப் பெண்டுலம், ஒரு கணம் “ம்ம்ம்… இந்த நாயாப் பொறந்திருக்கலாமோ!!?” என்று மின்னலாய் நினைக்க வைத்தது.
நாயின் அமைதியை உற்றுக் கவனிக்க முற்படும் போது ஏதோ ஒரு அவசரம் அழுத்திக் கொண்டேயிருந்தது. அழுத்தத்தோடு இம்சையாய் உள்ளுக்குள் எதோ சுழன்று கொண்டிருந்தது. நாயின் மேல் கொண்ட ஆச்சரியம், ஆற்றாமையாய் உருவெடுத்தது. ஆச்சரியம் ஆற்றாமையாய் உருவெடுத்ததை அறிந்திருக்க வாய்ப்பில்லாத நாய் தன்னுடைய உறக்கத்தை சற்றும் தொலைக்கத் தயாரில்லை.
உள்ளுக்குள் உருண்டு கொண்டிருந்த ஆற்றாமை, சட்டென பொறாமையாய் வெடித்தது.
”அடிங்.. என்னா தூக்கம் வேண்டிக்கிடக்கு” அருகில் கிடந்த கல்லையெடுத்து ஓங்கி அடித்தான்.
”க்க்கைக்கை” எனக் கத்திக்கொண்டே விலுக்கென எழுந்த நாய் சிதறியோடி, திரும்பிப் பார்த்தது.
தலையை உதறிக்கொண்டது. திரும்பிப் பார்க்கும் நாயைப் பார்த்து தொலைவிலிருந்தே மீண்டும் கையை ஓங்கினான்.
வாலை கால்களுக்குள் உள்ளடக்கிக்கொண்டு, மீண்டும் ஓட எத்தனித்த போது, நாய் நினைத்தது “ம்ம்ம் மனுசனாப் பொறந்திருக்கலாமோ!!??”
-
superb story anu, nice thinking and something diffrent. superb
-
superb story anu, nice thinking and something diffrent. superb
nandri tamil nenjan.
eppadi irukinga?ungala forum pakkam paakka mudiyala ippa ellam.
unga kavithaigala miss seiren tamil nenjan.
take care.