FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on June 03, 2012, 11:50:44 AM

Title: சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்தால் “டெங்கு’வை விரட்டலாம்!
Post by: Yousuf on June 03, 2012, 11:50:44 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2FE_1338091121.jpeg&hash=eb2d9d56b49106c69ab07ea31aac5099d84c37fd)

பொதுவாக, வீடுகளில் தான் கொசுக்கள் அதிகம் இருக்கிறது என்பதால், வசிப்பிடங்களையும், சுற்றுப்புறச் சூழ்நிலையையும் சுத்தமாக வைப்பது அவசியம். வீட்டுத் தொட்டியை, வாரம் ஒருமுறை நன்கு கழுவி, காய வைப்பது நல்லது.

தமிழகத்தில், சிக்குன்-குனியா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என, பலவித காய்ச்சல்கள், பாடாய் படுத்தி விட்டன. இந்த வரிசையில், “டெங்கு” காய்ச்சலும் உள்ளது.
மதுரை மாவட்ட மலேரியா அலுவலர், டாக்டர் லதா ஸ்வீடாஜோன் கூறியதாவது:
“டெங்கு’ காய்ச்சலுக்கு காரணம், ஒருவித வைரஸ் தான். பகலில் கடிக்கும், “ஈடிஸ் எஜிப்டி’ என்ற ஒருவகை கொசுவே, இதை பரப்பி வருகிறது. இந்த கொசுக்கள், ஓடும் நீரைவிட்டு, தேங்கிய, நல்ல நீரில் தான் வளரும். அதில் முட்டையிட்டு, லார்வா, புழு, கொசு என வளரும். ஏழு முதல், 10 நாட்களே இதன் ஆயுள்.
கோடையிலும் இது, தன் வேலையை காட்டும் என்றாலும், மழைக் காலங்களில் வீடு, வீட்டைச் சுற்றி கிடக்கும், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் டப்பாக்களில் நிற்கும் நீரில், வளரும். இதன் அறிகுறியாக, இக்கொசு கடிக்கும் ஒருவருக்கு காய்ச்சல், அதிக உடல்வலி, தலைவலி, கண்ணுக்குப் பின்புற வலி ஏற்படும். சிலருக்கு, உடலில் பொரி, பொரியாய், “அலர்ஜி’ போல வரலாம்.
சாதாரணமாக இந்த, “டெங்கு” காய்ச்சல் குணப்படுத்தக் கூடியது. இதில், நான்கு வகைகள் உள்ளன. முதல் வகை, சாதாரண காய்ச்சல் தான். அது குணமான பின், மீண்டும் வரும், “டெங்கு’ காய்ச்சல் தான், சற்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதற்கு சரிவர சிகிச்சை பெறவில்லை எனில், மரணம் வரை பாதிப்பை ஏற்படுத்தும். டெங்கு காய்ச்சலுக்கென, சிறப்பான மருந்துகள் எதுவும் கிடையாது. சாதாரண காய்ச்சலுக்குரிய மருந்து, மாத்திரைகளே போதுமானது. நோயாளியையும் தனிமைப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் அவரை, கொசு வலைக்குள் உறங்க வைப்பது நல்லது. உணவையும், நீராகாரமாக எடுப்பது நல்லது. சாதாரணமாக காய்ச்சல் கண்டவர்களும், உடனே ரத்தப் பரிசோதனை செய்து, எந்த வகை பாதிப்பு என அறிவதே, இதில் முக்கியமானது.
ஏதோ மருந்து கடையில் மாத்திரை வாங்கினோம், காய்ச்சல் குறைந்துள்ளது என கருதாமல், காய்ச்சல் வந்தால், பரிசோதனை செய்வது தான் முக்கியம். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், தயார் நிலையில் உள்ளனர்; மருந்துகளும் உள்ளன. அங்கு, உடனுக்குடன் பரிசோதனையும் செய்ய வசதி உள்ளது. இந்நோயை கட்டுப்படுத்துவதில், மக்கள் ஒத்துழைப்பே அவசியம்.
பொதுவாக கொசுக்கள் வீடுகளில் தான் அதிகம் இருக்கிறது என்பதால், வசிப்பிடங்களையும், சுற்றுப்புறச் சூழ்நிலையையும் சுத்தமாக வைப்பது அவசியம். வீட்டுத் தொட்டியை வாரம் ஒருமுறை நன்கு கழுவி, காய வைப்பது நல்லது. ஏனெனில் ஒவ்வொரு வாரமும் கழுவுவதால், கொசுக்களின் வளர்ச்சி அழிக்கப்பட்டு பாதிப்பை தவிர்க்கலாம். பாதிப்பு ஏற்படும் பகுதியில் சுகாதார ஊழியர்கள், “அபேட்’ எனும் மருந்தை தெளிக்க பல வீடுகளில் ஒத்துழைப்பதில்லை. அரசு இதற்காக கோடி, கோடியாக செல விடுகிறது. பொதுமக்கள் ஒத்துழைத்தால் “டெங்கு’ பாதிப்பை போக்கலாம்.

அறிகுறிகள்
* காய்ச்சல்
* அதிக உடல்வலி
* தலைவலி
* கண்ணின் பின்புறம் வலி
* உடலில் பொரி,
* பொரியாய், “அலர்ஜி’