FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on May 27, 2012, 05:09:24 PM

Title: 'அழகி' மீனம்மாளின் ஆரோக்கிய ரகசியம்!
Post by: RemO on May 27, 2012, 05:09:24 PM
நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள். இன்றைய ஃபாஸ்ட் புட் காலத்தில் எத்தனை பேர் நூறு ஆண்டு காலம் வாழ முடிகிறது?.

35 வயதிற்கு மேல் ஆகிவிட்டாலே ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவைகள் தாக்கி உடலானது நோய்களின் கூடாரமாகிவிடுகிறது. கிராமங்களில் இன்றைக்கும் நூறு வயதுவரை வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆரோக்கியத்திற்காக அவர்கள் பெரிதாக எதுவும் மெனக்கெடுவதில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைக்கும் உணவை உண்டுவிட்டு இருப்பதே ஆரோக்கியத்தின் ரகசியம் என்கின்றனர் அவர்கள். 103 வயதாகியும் எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழும் மீனம்மாள் பாட்டி சொல்லும் ஆலோசனையை படியுங்களேன்.

உடல் ஆரோக்கியத்திற்காக தனியாக என்றும் எதையும் செய்யத்தேவையில்லை எந்த உணவு கிடைகிறதோ அதை நன்கு பசிக்கும் போது உண்டாலே போதும் அப்பொழுதுதான் உண்ணும் உணவு ஜீரணமாகும் என்கின்றார் பாட்டி.

மூன்று வேளையும் கட்டாயம் உணவு உண்டே ஆக வேண்டும் என்று அவசியமில்லை. நினைவு தெரிந்த நாள் முதலே மீனம்மாள் பாட்டி இரண்டு வேளைதான் உட்கொள்கிறாராம்.

காலை நேரத்தில் பழைய சோறு போட்டு அதில் நீராகாரம் ஊற்றி லேசாக உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடுவது விருப்பமான உணவு. பழைய கஞ்சிக்கு பச்சை மிளகாய்தான் காம்பினேசன். அதேபோல் மத்தியான நேரத்திலும் எளிமையான உணவுதான். பருப்பு சாதம், அல்லது காய்கறி சாம்பார், கீரை என கிடைக்கும் உணவுகளை உட்கொள்வதாக கூறுகிறார். இருவேளை உணவுதான் இரவு உணவு என்பது கிடையாது. அதனால்தான் உடம்பு லேசாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறதாம்.

வடை, பஜ்ஜி, மிக்சர், சேவு என எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்கள் எதையும் இதுவரை தொட்டு கூட பார்த்ததில்லை என்கிறார் இந்த பாட்டி. அதனால்தான் இதுவரை உடல் நலக்குறைவு ஏற்பட்டதில்லை என்கிறார்.

நல்லதை மட்டுமே நினைப்பேன். என் வாழ்நாளில் இதுவரைக்கும் யாருக்கும் எந்த கெடுதலும் நினைத்ததில்லை என்கிறார். நல்ல எண்ணங்கள் உருவாகும் இதயத்தில் இறைவன் குடியிருப்பான் என்பார்கள். அதனால்தான் எனக்கு எந்த நோய் நொடியும் வராமல் ஆண்டவன் என்னை பாதுகாத்துக்கொண்டிருக்கிறான் என்கிறார் நூறாண்டுகளை கடந்த ஆரோக்கிய பாட்டி.

நம்மால் பழைய சோறு சாப்பிட முடியாததுதான் ஆனால் எண்ணெய் பலகாரம் சாப்பிடாமல் இருக்க முடியும். பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருக்கலாம் இல்லையா? ஏனெனில் எண்ணம் போல் வாழ்வு என்று சும்மாவா சொன்னார்கள்.