FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: ஸ்ருதி on April 29, 2012, 09:02:18 PM

Title: பிடிக்காதவர்கள்
Post by: ஸ்ருதி on April 29, 2012, 09:02:18 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdailythanthi.com%2Fmagazines%2FIMAGES%2FGIF%2FKm%2FStory01.jpg&hash=7da70c00c6b9e4b476d17bd58db5bca42e7cf261)

நந்தவனத்தெரு பெயருக்கு ஏற்றாற்போல் புதுமையான தெரு. அளவெடுத்து அமைத்தது போன்று தோற்றம். அங்க 40 வீடுகள் இருக்கலாம். ஒயிட்காலர் வாசிகள் மட்டுமல்ல, உழைத்துப் பிழைப்போரும் வசிக்கும் பகுதி. அவரவர் அவரவருக்கு பிடித்தவர்களோடு பேசிப்பழகி, சின்னச்சின்ன நட்பு வட்டங்களை உருவாக்கி அவற்றை வலுவாக்கிக் கொள்வார்கள்.

அதே நேரத்தில் அந்தத் தெருவில் அனைவருக்கும் பிடித்த இரண்டு பெண்மணிகள் இருக்கவே செய்கிறார்கள். ஒருவர் 35 வயது சங்கீதா. அடுத்தவர் 60 வயதை எட்டிப்பிடித்திருக்கும் சரஸ்வதி அம்மாள்.

சங்கீதா இல்லத்தரசி. எப்போதும் சிரித்த முகம். வயது முப்பத்தைந்து ஆனாலும் முப்பதைத் தாண்டாத முகவாகு. அறிமுகம் ஆகாதவர்கள் கூட பேசவிரும்பும் வசீகரத் தோற்றம். அதோடு பிறருக்கு உதவுகிற இரக்க சுபாவமும் சேர்ந்து கொள்ள, சங்கீதா தெருமக்கள் மனதில் நீக்கமற நிறைந்து போனாள்.

சிலர் அன்பாக பழகுவார்கள். பிரியமாய் பேசுவார்கள். உதவியென்று வரும்போது மட்டும் ஒதுங்கிக் கொள்வார்கள். இன்னும் சிலர் உடலுழைப்பு சார்ந்த உதவிகளை மட்டும் செய்வார்கள். பணஉதவி பண்ண மாட்டார்கள். சங்கீதா இவர்களிடம் இருந்து மாறுபட்டவள். நெருக்கடி என்று வந்தவர்களுக்கு இயன்ற அளவு பண உதவியும் செய்வாள்.

கணவனை ஆபீசுக்கும் மகளை பள்ளிக்கும் அனுப்பிய பிறகு அவள் வேலையே மற்றவர்களுக்கு உதவுவது தான். தாலுகாஆபீசில் பொறுப்பான பணியில் இருக்கும் அவள் கணவன் கணேசனை அவ்வளவாக யாருக்கும் தெரியாது. ஆனால் சங்கீதாவை தெரியாதோர் தெருவில் யாருமில்லை.

அடுத்தவர் சரஸ்வதி அம்மாள். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. சீனியர் சிட்டிசன். எப்போதும் மஞ்சள் குங்கும முகத்தோடு மங்களகரமாக காணப்படும் இந்த பழுத்த சுமங்கலியை பார்க்க வீட்டில் எப்போதும் ஒரு சிறு கூட்டம் காத்திருக்கும். இவள் வீடு ஒரு ஆலோசனை மையம் மாதிரி. யாராவது வந்து எது பற்றியாவது சந்தேகம் கேட்டு தெளிந்து போவார் கள். காப்பிப்பொடி, சர்க்கரை என்று சின்னச்சின்ன உதவிகளும் இவளிடம் கிடைக்கும். ஸ்கூல் பீஸ், காலேஜ் பீஸ் என்று அவசரத்துக்கு கேட்டுவாங்கி பின்னால் பணம் இருக்கும்போது கொடுத்துப் போவோரும் உண்டு.

சில நேரங்களில் இம்மாதிரி பொருளுதவிக்காக கணவரின் முணுமுணுப்பையும் எதிர்கொள்வதுண்டு. அப்போதெல்லாம் `ஸ்சு...சும்மா இருங்க' என்ற ஒரே குரலில் அடக்கிவிட்டு உதவியைத் தொடர்வாள்.அக்கம்பக்கங்களில் யாருக்கு உடம்புக்கு முடியவில்லை என்றாலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிற ஆஸ்பத்திரிக்கே போய் சாத்துக்குடி, ஆப்பிள் என்று கொடுத்து நலம் விசாரித்து வருவாள். அதனால் இந்த நந்தவனம் தெருவில் சரஸ்வதி அம்மாளும் எல்லாரின்அன்புக்கும் உரியவளாக இருந்தாள்.

இப்படி போட்டி போட்டு உதவி ஏரியா மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட சங்கீதா, சரஸ்வதி அம்மாள் இருவரும் பிரதிபலன் பாராத உதவிக்காக விருது பெற வேண்டியவர்கள்.

ஆனால் விசித்திரம் பாருங்கள். சங்கீதாவை சரஸ்வதி அம்மாளுக்கு பிடிக்காது. சரஸ்வதிஅம்மாளை சங்கீதாவுக்குப் பிடிக்காது.

மற்றவர்களுக்கு உதவுவதையே தங்கள் வாழ்க்கை லட்சியமாக கொண்டவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை? சங்கீதாவின் மாமியார் தான் சரஸ்வதி அம்மாள்.