FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Oonjal on July 13, 2026, 01:03:48 PM
-
அந்த நாள் நியாபகம்
நெஞ்சிலே வந்ததே
இயற்கை எழில்
கொஞ்சும் சிறு கிராமம்
அங்கேதான் எனது வீடு
வீட்டு முற்றத்தில்
பல கிளைகளைப் பரப்பி
நிழல் கொடுக்கும்
பெரிய வேப்பமரம்
அதில் அப்பா கட்டி தந்த
கயிற்றூஞ்சல்
நான் நடை பழகிய
காலத்தில் இருந்து
என் தோழி
அப்பா பின்னால்
நின்று மெதுவாக ஆட்டிவிட
அதனை ரசிக்கும் விழிகளோடு
"விழுந்து விடாதே செல்லம்"
பதறும் அம்மாவின் குரல்
அப்பா "இன்னும் கொஞ்சம்"
"இன்னும் உயரமாக" என்று
கொஞ்சும் எனது மழலை குரல்
குழந்தை சிறுமியாக மாறினேன்
பாப் கட் முடி குட்டை பின்னலானது..
பள்ளியிலிருந்து வந்ததும்
ஓடி வருவேன்
உன்னிடம்...
தேர்வு பயமோ
மதிப்பெண் கவலையோ
உன்னை கண்டால் மறந்தே போகும்
பல நேரங்களில் ஊஞ்சலாடும்
பொழுது வானத்தின் நிலவை
எட்டி பிடிக்க காற்றுடன்
போட்டி போடுவேன்
சிறுமி குமரியானேன்
குட்டை பின்னல்
நீளமான பின்னலானது..
பாவாடை தாவணியாக மாறியது
பெண்ணாக மலரும் தருணம்
யாரிடமும் சொல்ல முடியாத மாற்றங்கள்
புதிய உணர்வுகள் அனைத்திலும்
தஞ்சமடைந்தேன் உன்னையே..
நான் பேசவில்லை
நீயும் பேசவில்லை
நம் மௌனம் ஆயிரம் கதைகள்
பேசிக்கொண்டது
தாவணி சேலையாக மாறியது
ஒரு காலத்தில்
வானத்தைத் தொட பறந்த கால்கள்
இப்போது மெதுவாக
மட்டுமே ஆடியது
சில மாலைகளில் எதுவும் பேசாமல்
அமைதியாக அமர்ந்திருப்பேன்
என் சிரிப்பையும்
என் மௌனத்தையும்
முதலில் கேட்பது
நீ மட்டுமே
திருமண நாள் வந்தது.
பிறந்த வீட்டைவிட்டு
கிளம்பும்போது
கண்ணீரோடு
நான் திரும்பிப் பார்த்தது
அம்மா அப்பாவை மட்டுமல்ல
உன்னையும் தான்.
என் குழந்தை பருவத்தை
பிறந்த வீட்டின் ஊஞ்சலோடு
அங்கேயே விட்டுவிட்டு
புது வாழ்க்கையை தொடங்க
கிளம்பினேன் புகுந்த வீடு..
புகுந்த வீட்டில் கிடைத்ததோ
பிளாஸ்டிக் கூடை ஊஞ்சல்..
அதிலும் ஆடினேன்..
ஆனால் வேப்பமர காற்றோ
அப்பாவின் ஆட்டலோ
அம்மாவின் அக்கறையோ
இல்லாமல் மகிழ்ச்சி
கிட்டவே இல்லை
பொறுப்புக்கள் வளர்ந்தது
கணவன்
குடும்பம்
சமையல்
குழந்தை என்று
ஒவ்வொரு நாளும்
எனக்கான நேரத்தை
சிறிது சிறிதாக திருடிக் கொண்டது
வாழ்க்கை என்னை
ஒரு மனைவியாகவும்
ஒரு தாயாகவும்
ஒரு இல்லத்தரசியாகவும்
மாற்றி விட்டது
ஆனால்...
என் உள்ளத்தின் ஒரத்தில்
இன்னும் ஒரு சிறுமி
இருக்கிறாள்
அவள் இன்னும்
அந்த வேப்பமர ஊஞ்சலில்
காற்றோடு போட்டி போட்டு
ஆடிக் கொண்டிருக்கிறாள்
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும்
உணர்வில் கலந்த மறக்க முடியாத
ஒரு தோழி இருப்பாள்
அவள் பேச மாட்டாள்....
சிரிக்க மாட்டாள்...
ஏன் அழவும் மாட்டாள்...
என் வாழ்க்கையில்
அந்தத் மௌனத்தோழியின் பெயர்
ஊஞ்சல்