FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on February 22, 2026, 12:32:09 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
Post by: Forum on February 22, 2026, 12:32:09 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்

1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025 (https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/rules2.png)

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 397

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/397.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
Post by: Thenmozhi on February 22, 2026, 11:43:56 PM
   "பரத நாட்டிய கலையைப்
          போற்றுவோம்"

கலைகளில் மிகச் சிறந்தது
பரதநாட்டியம்!
காண்போரின் கண்களுக்கு
விருந்தளிக்க கூடியது
பரதநாட்டியம்!

ப-பாவம் ,ர-ராகம்,த-தாளம்
மூன்றையும் தன்னகத்தே
கொண்டது பரதநாட்டியம்
நவரசங்கள், முகபாவணைகள்
கொண்டு வந்து, தாளத்திற்கு ஏற்ப
ஆடிடுவர் பரத நாட்டியம்!

பண்டைய காலத்தில் உருவான
கலைகளில் ஒன்று பரதநாட்டியம்!
இன்றும் போற்றி பாதுகாக்கப்படும்
கலையும் இதுவே...
பார்வையாளர்களை கவர்ந்து பரவசப்படுத்தும் பரதநாட்டியம்!

உடல் அசைவுகளும்,
கை முத்திரைகளையும் சேர்த்தது
இந்த பரதநாட்டியம்
பாடல், நட்டுவாங்கம்,
இசைக்கருவிகளின் துணை கொண்டு
ஆடப்படும் பரதநாட்டியம்!
ஆண்,பெண் என்ற பாகுபாடின்றி
ஆடப்பட்டு வருகின்றது பரதம்!

நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள்,நகைகள் அணிந்து...
காலில் சலங்கை பூட்டி...
சிகை வண்ணமாக அலங்கரிக்கப்பட்டு
கூந்தல் பின்னலிடப்பட்டு
பூமாலைகள் சூட்டப்பட்டு
நுனியில் குஞ்சம் தொங்கவிடப்பட்டு...
ஆடிடுவர் இரசனையான பரதத்தினை...
பார்ப்போர் கண்களுக்கு
விருந்தளிக்கும் இந்த காட்சி....

சிந்தனைகளை சிதறவிடமால் ஒருங்கிணைந்து இறைவனோடு பேசும்மொழி பரதக்கலை!
இசைக்கலைஞர்கள் மேடையின்
ஒருபுறமாக அமர்ந்து இசைக்க,
நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடி மகிழ்விப்பது
நாட்டியக் கலையின் சிறப்பு!

பரதம் கற்பதற்கு சாதி ,மதம்,
இனம், மொழி எதுவும்
தேவை இல்லை....
மன ஒருமைப்பாடும், புன்னகையும்
போதுமே....
பரதத்தின் ஒவ்வொரு அசைவின்
பின்னால் ஒவ்வொரு
கருத்து புலப்படும்!

ஐந்து வயதில் என் தாத்தா
என் கால்களுக்கு சலங்கை சூட்டி ,
பரதம் ஆட வைத்து இரசித்தது தான்
என்னை பரத கலை கற்கத் தூண்டியது!
சிறுவயதில் கால் சலங்கையின்
" ஜல் ஜல்" ஒலியும்....
மிருதங்கத்தின் "தத் தகிட "
தாளக்கட்டு ஒலியும் என்னை
பரதம் ஆட வைத்தது
முக பாவனை நவரசத்துடன்...

பரதம் என்பது உடலுக்கு மட்டும்
உடற்பயிற்சி அல்லாமல்
மனதுக்கு புத்துணர்ச்சி தரும்
ஒரு அரிய கலை...
நாட்டியக்கலை பயில்வதால்
பெருகிடும் ஞாபக சக்தி!

சைவசமயத்தின் முழுமுதல்
கடவுளான சிவனின் நடராஜ "திருத்தாண்டவம்" சிறப்பிக்கின்றது
நாட்டிய கலையை...
பரதநாட்டியத்தை ஆடத்தொடங்கும்
முன் ஆடப்படுகிறது நமஸ்காரம்!

பரதநாட்டிய நிகழ்ச்சியை
நெறிப்படுத்திடுவார் "நட்டுவ ஆசான்"
வாயால் சொல்லும் சொற்கட்டுக் கோவைகள், கைத்தாள ஒலியினால் "நட்டுவாங்கம்" பண்ணி
பரத நாட்டியத்தை அரங்கேற்றிடுவார்
ஆசான்கள்...
அறுபத்து நான்கு கலைகளில்
ஒன்று நாட்டியக் கலை!

பரத நாட்டிய அரங்கேற்றம் 
ஒரு வாழ்நாள் மைல்கல்..
பரத நாட்டிய அரங்கேற்றம்
ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல..
பல்லாண்டுகள் நீண்ட
கடினப் பயிற்சியின் பலனாக
உருவாகும் ஒரு கலை விழா!
தாளம், பாவம், அசைவுகள்
அனைத்தும் ஒருங்கிணைந்து,
தமிழ் சொற்களின் உள் அர்த்தத்தை சிதைக்காமல் முகபாவங்களோடு வெளிப்படுத்துவது மிகக் கடினமான ஒன்று.
நீண்ட காலப் பயிற்சி, பொறுமை, அர்ப்பணிப்பு மூலமே சாத்தியமாகும்
பரத நாட்டிய அரங்கேற்றம்!

பரத நாட்டிய கலையை
நான் பயின்றது என் மனதுக்கு
மிகவும் மகிழ்ச்சி...
பரத நாட்டிய கலையைப் போற்றுவோம்!
வளரும் குழந்தைகள் பரத நாட்டிய கலையைப் பயில வழி வகுப்போம்!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
Post by: Yazhini on February 22, 2026, 11:51:57 PM
நங்கையின் நடனம்

உலகை மறந்து தன்
அசைவில் உவகையை மட்டுமல்லாமல்
உள்ள உணர்வுகள் அனைத்தையும்
நவரசங்களுடன் கலந்து விடுகிறாள்...

தாளத்துடன் கூடிய இசையில்
முத்திரை மொழியால் உரையாடுகிறாள்...
கால தேவனுடன் உறவாடுகிறாள்...

அண்டத்தைப் படைக்கும் ஆனந்த தாண்டவமாக..
தீயதை ஒழிக்கும் ருத்திரதாண்டவமாக
பார்வதியாக பராசக்தியாக காட்சியளிக்கிறாள்
உருமாறுகிறாள்...

மென்மையாக தீண்டும் தென்றலென..
அனைத்தையும் குளிர்விக்கும் நீரென...
அதிர்வுகளைத்  தாங்கும் நிலமென..

தீயதைப் அழிக்கும் நெருப்பென...
எங்கும் பரந்து கிடக்கும் வானமென..
பஞ்ச பூதமாக காட்சியளிக்கிறாள்

நடராஜனின் பெண் வடிவமோ
இந்த நங்கை என
காண்பவரை வியக்க செய்கிறாள்

கற்சிலை பல தெய்வமாக மாறியதற்கும்
இன்றும் பல இலக்கிய கதைகள்
அழியாமல் இருப்பதற்கும் காரணமாகிறாள்...

மனிதனையும் இந்த உலகைப்
படைத்தவனையும் இணைக்கும் பாலம்
இந்த இசையும் நடனமும்
என உணர்த்துகிறாள்..

சுழன்று ஆடுகையில் அண்ட
சுழற்சியை தன்னிலை படுத்துகிறாள்..
காண்பவர் மனதையும் சுழற்றிவிடுகிறாள்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
Post by: Kavii on February 24, 2026, 12:21:59 AM
நாட்டியப் பேரொளி !!
சங்கை ஒலியில் சதிர் நடனம்!
சலனமின்றி துடிக்கும் மன லயம்!
தாளம் பிடிக்கும் அவள் பாதங்களில்!
காலமே தன் வேகத்தை மறக்கிறது!

கண்களில் காவியம் விரிகிறது!
கைகளில் முத்திரை பேசுகிறது!
சொல்லாத வார்த்தைகளையும்!
உணர்த்தும் மொழியாக கலை மலர்கிறது!

மஞ்சள் ஒளி மடியில் பிறந்த அவள்!
மௌனத்தையே இசையாக்கி!
புகை சூழ் அரங்கில் கூட!
தெய்வீக ஒளியை ஏற்றுகிறாள்!

தக திமி தாளத்தில் அவள் அசைவுகள்!
சிவனின் ஆனந்த தாண்டவமாய்!
பிரபஞ்ச உருவாக்கத்தை
\நினைவூட்டுகின்றன!

அதே அசைவில் ருத்திர தாண்டவமாக மாறி
அறியாமையும் தீமையும் அழிந்து போகச் செய்கின்றன!
பார்வதியின் கருணையும், பராசக்தியின் பேராற்றலும்
ஒரே உடலில் உறைந்து, பெண்ணின் சக்தியாக வெளிப்படுகின்றன!

மென்மையாகத் தீண்டும் தென்றலாய்!
உயிர் காக்கும் நீராய்! அதிர்வுகளை தாங்கும் நிலமாய்!
அழிக்கும் நெருப்பாய்! எங்கும் விரியும் வானமாய்!
பஞ்ச பூதங்களின் ஒருங்கிணைந்த வடிவமாகிறாள்!!

தாமரை இதழ் போன்ற பாதங்களில் வேதங்கள் ஒலிக்கின்றன,
அபிநயம் காட்டி அசைந்திடும் வேளையில்!
அழகிய மயிலும் தோகை விரிக்குமே!
மேடையின்றி கூட கலை தானே அரங்கேறுமே !

அவள் நடனம் காட்சி அல்ல!
மனிதனையும் இறைவனையும் இணைக்கும் பாலம்!
ஆன்மாவை உயிர்த்தெழச்செய்யும்
ஆயக்கலை!

வரைந்து வைத்த சிற்பம் அவள்!
உயிர்பெற்ற ஓவியம் அவள்!
காலம் தொட்டும் அழியாத
உயிருள்ள கலை வடிவம் அவள் !

பரதநாட்டியம் ஆடும் பெண்ணே!
பாரம்பரியம் போற்றும் அற்புதக் கண்ணே!
உன் அசைவுகளில் உயிர் பெறும் நம் கலை!
தலைமுறை தாண்டியும் திகழ்க அதே நிலை!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
Post by: Shreya on February 24, 2026, 07:04:18 AM
                               கலையின் மகுடம்

பொன் ஒளியின் பின்னணியில்,
சிலையென நின்றிருக்கும்
சிங்காரக் கலைமகளே!!

கலை என்பதே இதுதானோ,
கடவுளைக் காணும் மார்க்கம்?
​மேகம் சுமந்து வந்த மயிலின் தோகையோ,
சிலைக்குள் உயிர் தந்து ஆடும் சிவசக்தி தானோ?

அந்த ஒற்றைக்காலில் அவள் நிற்கும் நேர்த்தி,
எந்தச் சூழலிலும் கலங்காத அவள் நிதானத்தை
உவமையாய்ச் சொல்கிறது..
விரிந்திருக்கும் அவள் விரல் முத்திரைகள்
வெறும் கலை மட்டுமல்ல,
ஆயிரம் கவலைகளைத் தள்ளிவைக்கும் அவள்
மனவலிமையின் அடையாளம்!!

அமைதிக்குள்ளே ஒரு புரட்சியை
அவள் ஆட்டம் சுமந்து நிற்கிறது..
நிமிர்ந்து நிற்கும் அவளின் அந்தத் தோரணை,
யாரோடும் பணியாத அவளின் சுயமரியாதை!!

சலங்கை சத்தமும் அவள் சலனமில்லாத
மன உறுதியை சொல்கிறது..
பரதமே நீயாகி ஆடுகிறாய் இங்கே,
பரவசத்தில் மூழ்கி நிற்கின்றோம் நாங்கள்!!

தாளத்தில் லயித்து நீ ஆடும் ஒவ்வொரு நொடியும்,
தனித்துவப் பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறாய்..
உன் கலையே உன் மகுடம்,
உன் அசைவுகளே உனக்கான ஆகாயம்!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
Post by: Madhurangi on February 24, 2026, 02:56:00 PM
மாதவியின் மனக்குமுறல்
[/color]

காவிரி பூம்பட்டினத்து மண்ணில் பிறந்தேன்
கலையே என் மூச்சாய் கொண்டு வளர்ந்தேன்!
ஐந்து வயதில் ஆடல் தொடங்கி - என்
அங்கம் வருத்தி தவம் புரிந்து வளர்ந்தேன்!
ஏழாண்டு காலம் இமைக்காத உழைப்பு கொண்டு ,
ஏற்றங்கள் கண்டேன் சோழ தேசம் போற்ற..
ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன் தந்த கரிகாலனவனும்  - அந்த
தலைக்கோல் பட்டமும் என் கலைக்காய் சமர்பித்தான் !

சொற்கட்டு தாளத்தில் சுழன்று ஆடுவேன்
சுதி பிசகாமல் ராகம் பாடுவேன்!
பிண்டி பிணையல் என முத்திரை காட்டி
பிரபஞ்ச அழகை மேடையில் கூட்டி  !
நாட்டிய நன்னூல் நயம்படக் கற்றேன்
நாடகக் கணிகையர் திலகமாய் நின்றேன்!
ஆடல் மகள் என்பது என் குலத்தின் விதி
அதை அகிலம் வியக்கச் செய்வதே என் மதி..

நயன அசைவில் நவரசத்தை காட்டிடுவேன்..
அபிநயத்தால் என் உள்ளம் உணர்த்திடுவேன்..
கலை மொழியால் பல உள்ளம் கொள்ளை கொண்ட நானோ ,
அன்று அரங்கேற்ற மேடை தனில்
அவன் விழி கண்டேன் என் உள்ளத்தை இழந்தேன் !
மாலையை வாங்கி என் மனம் கொண்டான் கோவலன் .
என் வாழ்வை வென்றான் அந்த மன்னவன் !
கணவனாய் அவனை ஏற்றுக்கொண்டேன் - கலை
காதலாய் அவனோடு கலந்து நின்றேன்!
மணவறை இன்றி மனதளவில் அவன் மனைவி ஆனேன்..

இன்று ஊரார் பேசும் பழிச்சொல் கசக்குதே
உள்ளத்தின் வேதனையில் என் நெஞ்சம் விம்முதே!
"பிறத்தியான் கணவன்" என ஏசும் உலகம்
என் உண்மைக் காதலை உணர மறுக்கும் தருணம் !
பரத்தை என என்னை முத்திரை குத்தினார்
பாசத்தை அறியாமல் கல்லெறிந்து நின்றார்

ஆடல் மகளென்றால் உள்ளம் இல்லையா?
அன்பு கொள்வதே எல்லையற்ற பிழையா ?
கற்பு என்பது ஒரு தலைப் பட்சமா ?
கட்டியவளுக்கு மாத்திரமே காதல் மோட்சமா?
கண்ணகி போலவே நானும் ஒரு பேதை,
காதலைத் தொலைத்த ஒரு கலையின் மேதை,
சலங்கை ஒலியில் என் கண்ணீர் மறையட்டும்
சரித்திரம் என்னை "காதலி" என எழுதட்டும்
!



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
Post by: AgNi on February 24, 2026, 05:37:25 PM



நமஸ்காரத்தோடு துவங்குகிறது பரதம்!
தகர்ந்து போய்விட்ட மனமாளிகையும்
நகர்ந்து போய்விட்ட நாழிகையுமாய்
அதிர துவங்குகிறது நிலம்!

புறக்கணித்தலின் வலி ஏதேனும்
ஒன்றை பற்று கொள்ள வைக்கிறது...
ஊழ்வினை பிறழ்வென
ஊடும் நினைவுகளோடு
விரல் முத்திரைகளில் ....
ஓர் சமாதான உடன்படிக்கை!   

பேரன்பின் பெருநதியில்...
மாயமிழைத்த உன்னில்
அகழியோ புதைகுழியோ சேர்ந்தே குதித்தாலும்
அகதியாய் இருப்பது அரங்கேற்றம்தான்!

விலையற்ற அனுபவங்கள்
கலையற்ற உள்ளங்களோடு....
துருப்பிடித்த கனவுகளை
சதங்கையின் துணை கொண்டு
சரிப்பார்த்து கொள்கிறது அபிநயம்!

நெஞ்சில் துளையிட்ட துயர அம்புகளை
ஒவ்வொன்றாய் கழற்றி போட துடிக்கின்றது
முகமூடியிட்டு நவரசங்களை பொழியும்
துக்கமெல்லாம் பத்திரமாய் தாளக்கட்டு அசைவில்...


காவியத்தின் இருண்ட பக்கங்களாம்
நம் காதல் ரேகைகள் !
போகட்டும் !
காலங்கள் கடந்தாலும்
தொலைந்து போன காதலை
நினைவு கல்வெட்டுகளாக பறைசாற்றி கொண்டிருக்கிறதே
நாட்டிய கலையின் ஜதிகள்!
 

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
Post by: Luminous on February 24, 2026, 08:05:30 PM
நாம் அகதிகள்… எங்கள் கலை அல்ல
     
அரமண்டி ஆழத்தில் நிலம் தொடும் பாதம்
அது தனி மனிதன் நிற்கும் நிலை அல்ல .
சமூகம் தாங்கும் செம்மையின் சின்னம்.
அடவின் அதிர்வில் விழிக்கும் நரம்புகள்
உடலின் வலிமையை மட்டும் தருவதில்லை,
ஒற்றுமையின் ஒலி அதில் ஒளிந்திருக்கிறது.
முத்திரை பேசும் போது
மௌனமும் மொழியாகிறது.
அபிநயம் மலரும் கணங்களில்
அகந்தை கரையும்,
அருவருப்பு உருகும்.
பரதம் கற்ற ஒழுக்கம்
வாழ்க்கை வழியில் நெறியாகும்.
சமநிலை கற்ற உடல்
சமத்துவம் உணரும் மனமாகும்.
இங்கு பெண், ஆண் என்ற பாகுபாடு இல்லை,
இங்கு நிறம் கேட்காது,
இங்கு வர்க்கம் பாராது,
தாளம் மட்டும் கேட்கும்.
அதில் அனைவரும் இணைந்தால்
இசை இனிமை பெருகும்.
முன்னோர் கலை வழியாக
உடலும் மனமும் காத்தனர்.
அதோடு சமூகத்தின் சீரையும்
சிந்தனையின் சுத்தத்தையும் பேணினர்.
இன்று
ஒரு நாட்டை விட்டு
மற்றொரு நாட்டிற்கு செல்கிறோம்
நாங்கள் செல்லவில்லை,
சொந்த நிலத்திலிருந்து
அனுப்பப்படுகிறோம்…
சில நேரம் துரத்தப்படுகிறோம்.
ஆனால்,
எங்கு சென்றாலும்
எங்கள் நாட்டின் பாரம்பரியக் கலையை
நாங்கள் எடுத்துச் செல்வோம்.
நாங்கள் அழிந்தாலும்
எங்கள் கலை அழியாது.
நாங்கள் தான் அகதிகள்
எங்கள் கலை அல்ல.
அது எல்லைகளை கடந்துச் செல்லும்,
அது இதயங்களை இணைக்கும்,
அது மொழி தெரியாத மண்ணிலும்
மனங்களை மலரச் செய்யும்.
இப்படிப் பட்ட பரதத்தை
மக்கள் கலையாய் வளர்த்தால்
நலம் ஒருவருக்கே அல்ல
நாட்டிற்கே பெருகும்.
நானும் அந்த மரபை பின்பற்றி
என் வாழ்வில் ஒளி ஏற்றுவேன்.
வருங்கால சந்ததிக்காக
ஒற்றுமை, ஒழுக்கம், ஒளி எனும்
மூன்று விளக்குகளை எடுத்துச் செல்வேன்.
உடல் உறுதி,
மன அமைதி,
சமூக ஒற்றுமை
இவை மூன்றும் இணையும் போது
பரதம் ஒரு நடனம் அல்ல…
ஒரு நாட்டு நெஞ்சின் நாதம்.

LUMINOUS 🧡💛💚💙💜🧚‍♀️
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
Post by: joker on February 24, 2026, 09:37:20 PM
அரங்கின் நிழலில்
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ என
அவள் நிற்கிறாள்

தாளத்தின் ஒளி
அவளின் இதயத் துடிப்பாய் மாற,
கால்கள் அவளின் இதயத்துடிப்பிற்கு
அசைய
அது வெறும் நடனம் அல்ல
அது பரம்பொருள் பேசும் மொழி
என உணர்த்தினார்
ருக்மிணி தேவி அருண்டேல்
அதற்கு பரதநாட்டியம்
என பெயரிட்டு
அழகுபடுத்தினார்

பரத முனிவரின் புனித எழுத்துக்கள்
அவள் விரல்களின் முனையில் உயிர்த்தெழ,
சமயமும் சமூகம் கட்டிய சுவர்கள்
பெண்களுக்கு சிறகுகள் விரித்து
சுதந்திரத்தை பரிசாக்கி
உலகத்தை வலம் வந்தன

ஆண்டாள்  போல
பக்தி அவள் நெஞ்சில் பாய,
கண்ணகி போல
நீதி அவள் நெற்றியில் நிற்க
திரௌபதி போல
அவமானத்தின் நெருப்பை
அவள் கண்கள் அனலாய் கக்க
அனைத்தையும்
ஆற்றலாக மாற்றிக் கொள்கிறாள்

சலங்கை ஒலிக்கும் சத்தம்
சமூகம் சுமத்திய சங்கிலிகளை
சிதைக்கும் சத்தம்

பரத நாட்டியம்
அது பெண்ணின் உடம்பில் உறையும் வேதம்.
அது அவளது போராட்ட வரலாறு,
அவளது பாசத்தின் பரவசம்,
அவளது தாய்மைத் தாலாட்டு,
அவளது காதலின் கனிவான கீதம்.

அரங்கம் இருள் கொள்கிறது.
ஆனால் அவள் உள்ளத்தில்
ஒளி அணையாது.
அது
அவள் வாழ்விலே
ஒரு நிரந்தர அரங்கேற்றம்.

முத்திரையில் மலரும்
மௌன கவிதை

பரத நாட்டியம்
நவரசங்கள் இணைந்த
பெண்ணின் தெய்வீக அசைவு


****JOKER****
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
Post by: Ramyakv on February 25, 2026, 10:21:29 AM
போர்க்களம் கண்ட பெண்ணே!

பரதம்! உன் உள்ளே ஒரு பிரபஞ்சத்தையே
ஒழித்து வைக்கக்கூடிய அரிய கலை!

ஒரு ஒரு முத்திரையிலும் தாளத்திலும் ஒரு பெருங்கதையை
கூறும் பெண்ணே, நீ அல்லவா பிரம்மா?

உன் நாட்டியத்தில் உள்ள அசைவுகளிலும்
உணர்ச்சியிலும் எல்லோரும் மெய்மறந்து இருக்க,
எனக்கு மட்டுமே தெரியும் அதற்கு பின்
இருக்கும் உன் உழைப்பும் வலியும்.

இன்று நீ இருக்கும் உயரத்திற்கு பின்
எவ்வளவு அடிகள் உள்ளன என்பது
நான் மட்டுமே அறிந்த உண்மை.
ஒரு யுத்தமே செய்திருக்கிறாயே பெண்ணே!

உன்னது ஒவ்வொரு நடனத்தையும்
ஒரு போர் வியூகமாக்கினாயே பெண்ணே!

எவ்வளவு ஏச்சுக்களும் பேச்சுக்களும் கடந்து,
இன்று நீ இந்த மேடையில் உள்ளாய்.
இந்த கைத்தட்டலும், பாராட்டலுமே,
உனது வலிக்குக் கிடைத்த மருந்து.

உன் அசைவுகளில் தெரிகிறதே,
உனது மனநிறைவும் மகிழ்ச்சியும்.
உனது போரில் நீ வெற்றி பெற்றதை,
உனது அபிநயங்கள் காட்டுகிறதே!

பெருமை கொள் பெண்ணே!
உன் சாதனைகளை நினைத்து!

ரம்யா

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
Post by: Vethanisha on February 25, 2026, 03:40:49 PM
நடராஜன் அருளினிலே
முகபாவத்தின் சிணுங்கலிலே
இராகத்தின் ரம்யத்திலே
தாளத்தின் தொன்மையிலே

பக்தியின் வெளிப்பாடாய்
ஆன்மாவின் மொழியாய்
உணர்வுகளின் சங்கமமாய்
வாழும் என் கலையே
தமிழர் கண்ட
பரதமே


நங்கை இவள் நடனத்திலே 
பல கதைகளும் உண்டு
உண்மையிலே 

மங்கை இவள்   எழிலினையே 
பரத  முத்திரையில் காண்போம்
சில வரிகளிலே


படாகம்  (வானம்  ,நதி )
வானத்தையும் நதியையும்
அசைவிலே
இணைக்கும் கொடி இடையாள்


திரிபடாகம் ( அம்பு,  தீ )
தீயின் ஜ்வாலையையும்
விரல்களில்  உயிர்ப்பிக்கும்
கலைமதியாள்


கர்த்தரிமுகம் (கத்தரி ,மின்னல் )
மின்வெட்டு காலங்களிலும்
கத்தரிக்கும் பார்வையினால்
ஒளி ஊட்டும்
விழியாள்


மயூரம் (மயில் )
அசைந்தாடும்  சாயலிலே
மயிலும் மையல் கொள்ளும் 
அபிநயத்தாள்


அர்த்தசந்திரம் (பிறை நிலா )
கரங்களில் பிறைநிலா மலர,
சாந்த சொரூபிணியாய் 
உணர்வை தாலாட்டும்
நிலாமுகத்தாள்


அலபத்மம் (தாமரை)
இரு  இதழ் தாங்கும் புன்னகையை
தாமரை இதழும்
 நாணத்தோடு நோக்கும்
பொன்னிறத்தாள்


அடவிலே தொடங்கி
நடவிலே உயர்ந்து
அபிநயத்திலே இலயித்து
வாழ்வாங்கு வாழட்டும்
அவளது கலையும்
அதன் பயணமும் ...