FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on January 29, 2026, 02:04:42 PM

Title: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: Forum on January 29, 2026, 02:04:42 PM
காதலர் தின  சிறப்புக்கவிதை நிகழ்ச்சி



எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .

உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு  மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துகளை கவிதைகளாய் வெளிபடுத்த  உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம்.  உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 04.02.2026  ( இந்திய நேரம் 11:59 PM) வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் ....

FTC பண்பலை நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று  உங்கள் இதயங்களை வந்தடையும் ....


குறிப்பு:
•   உங்கள் கவிதைகள் 250 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 
•   சொந்தமாக எழுதப்படும் 10  கவிதைகள் மட்டுமே  வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.



•   எதிர்வரும் ஞாயிற்று கிழமை  (01.02.2026 ) இரவு இந்திய நேரம் 10 மணிமுதல்   பதிவிடும் வகையில் இந்த பகுதி திறக்கப்படும் .
Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: சாக்ரடீஸ் on February 01, 2026, 10:33:31 PM

காதலர் தினம்
என்ற ஒரு சொல் கேட்டாலே
மனம் தன்னிச்சையாக
மென்மையாய் மாறுகிறது
சொற்களின் சத்தம் குறைந்து
உணர்வுகள் மட்டுமே
பேசத் தொடங்குகிறது
அந்த நொடிதான்
காதலின் தொடக்கம்

பார்க்கும் முன்பே
நம்பச் சொல்லும்
ஒரு உணர்வு

தொட்டுப் பார்க்காமலே
உள்ளுக்குள் பதியும்
ஒரு உலகம்

அதுதான் காதல்

சிரிப்புக்குள் கண்ணீரையும்
கண்ணீருக்குள் சிரிப்பையும்
ஒளித்து வைக்கும்
உணர்வுகளின் மொழி

ஒருதலைக் காதலில்
உரிமை இல்லாத
அக்கறைகள் வாழும்
'சாப்பிட்டியா'
'என்ன பண்ற' என்று
கேட்க முடியாத மனம்
அந்த மௌனத்திலேயே
அன்பை முழுதாய்ச் சொல்லி விடும்
எல்லாமுமாய் இருந்தும்
எதுவுமே ஆக முடியாத
அந்த வலியும்
காதலின் ஒரு தூய வடிவமே

பெண்ணின் காதல்
கூட்டத்தின் நடுவிலும்
ஒரே முகத்தைத் தேடும் தேடல்
ஒரு குரலுக்காக
ஒரு செய்திக்காக
மனம் நாள் முழுதும் காத்திருக்கும்
இல்லாதபோது
அவனின் நினைவுகள்
அவளுக்கு அதிகமாய்
அவள் காதலின் ஆழத்தைச்
சொல்லித் தரும்

ஆணின் காதல்
சொல்லாத அழுகைகளை
உள்ளுக்குள் சேமித்து வைக்கும் அமைதி
கரைந்து போன அகம்பாவம்
உனக்குள் மறைந்திருந்த
குழந்தையை வெளிக்கொண்டு வரும்
அந்த நிமிடம்
நீ சொன்னா சரி என
தன்னை முழுதாய் ஒப்படைத்து
அமைதியிலே நிற்கும்
ஒரு கம்பீரம்

காதல் தோல்வி என்றால்
காதல் பொய்யானது அல்ல
சேர முடியாத நேரங்களின்
மௌனத்தின் தீர்ப்பு
பிரிவும் கூட
ஒரு விதமான காதல்தான்
என்று புரியும் போது
வலி அர்த்தமாகிறது

ஆனால்

எல்லாவற்றுக்கும் மேலாக
ஒரு உண்மை இருக்கின்றது
யாருக்காகவும்
நம்மை முழுதாகத்
தொலைக்காமல்
நம்மை நாமே
அன்புடன் அணைத்துக்
கொள்வதுதான்
உண்மையான காதல்

ஏனென்றால்
 
உலகமே விலகினாலும்
நாம் நம்மோடு இருந்தால்
அந்த self love தான்
எல்லா காதல்களுக்கும்
முடிவும் !
முழுமையும் !

பொழிவதில் அழகு
ஒன்று மழை
மற்றொன்று காதல்

அதனால்
காதல் பொழிவோம்
சக மனிதர்களுக்கு
சக மனிதர்களாக

அனைவருக்கும்
காதலர் தின நல்வாழ்த்துகள் !

Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: joker on February 01, 2026, 10:42:10 PM
நான் உன்னை
முதல்ல பார்த்தது
கண்களால இல்லை,
ஒரு notification-ல்தான்.

உன் “hi”
எந்த poetry-யையும் விட
என்னை அமைதியிழக்கச் செய்தது.
அன்றிலிருந்து
என் கைபேசி
என் இதயத்தோட
ஒரு extension ஆ மாறிடிச்சி

நம் காதல் வளர்ந்தது
“online” என்ற ஒரு பச்சை புள்ளி எரிகிறதா
என பார்த்து பார்த்து அனுப்பும் குறுஞ்செய்தியில்

முதன் முதலில் உன்னை பார்த்தது
உன் DP.
முதல் உரையாடல்
துடிக்கும் இதயம் அல்ல
“typing…” என்று மினுமினுக்கும்
மூன்று புள்ளிகள்

நேரம் கிடைக்காத உலகத்தில்
நாம் ஒருவருக்கொருவர்
“time” கொடுக்க முயன்றோம்.
Metro-வில் நின்றபடி,
Traffic-ல் சிக்கியபடி,
Meeting நடுவே மறைவாக
“miss you” அனுப்பியபடி.

நீ அருகில் இல்லாத இரவுகளில்
உன் குரல்
Voice note-ஆக வந்து
என் தனிமையைத் தழுவியது.

நான் அருகில் இல்லாத நாட்களில்
என் presence
Blue tick-ஆக உன் திரையில் உறங்கியது.

நாம் சண்டை போட்டோம்
கோபமாக இல்லை,
Seen-இல் விடப்பட்ட
நம் மௌனம்

மன்னிப்பு கேட்டோம்
வார்த்தைகளால் இல்லை
ஒரு emoji-யால் 🙂

இந்த காதல்
பூக்கள் கொடுத்து வளர்க்கப்படவில்லை,
Data pack-களாலும்
Late night calls-களாலும்
காத்துக் கொள்ளப்பட்டது

ஆனால்
இந்த வேகமான யுகத்தில்
காதல் மட்டும்
இன்னும் மெதுவாகத்தான் இருந்தது.
Reply வர காத்திருக்கும் அந்த நிமிடங்கள்,
“Call pannalama?” என்று
உள் மனம் நடுங்கும் தருணங்கள்.

நாம் ஒருவருக்கொருவர்
Perfect அல்ல,
ஆனாலும்
“Available” ஆக இருந்தோம்.
Busy வாழ்க்கையிலும்
“I’m here” என்று சொல்லும் அளவுக்கு.

நீ “online” வரும்போது
என் மனசும்
தானா active ஆகும்.
நீ “offline” போகும்போது
என் நாள்
pause ஆகும்.

இந்த உலகம்
Fast forward-ல ஓடினாலும்,
நீ இருக்குற இடத்துல
என் மனசு மட்டும்
Still-ஆ நிக்குது.

இந்த modern life-ல
real  ஆ எனக்கு
கிடைத்த பொக்கிஷம்
நீ தான்
.


****Joker"""
Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: Luminous on February 01, 2026, 10:46:14 PM
ரோஜாவும் சாக்லேட்டும் கடந்த காதல்...
காதலர் தினம் வந்தாலே
ரோஜா மலருக்கு நாணம்,
சாக்லேட்டுக்கு இனிப்பு அதிகம்..
ஏனெனில்
அவை காதல் பேசப் போகும் நாள்.
சாதாரண நாளில்
ரோஜா வாசனை மட்டும்,
சாக்லேட் சுவை மட்டும்.
ஆனால்,
பிப்ரவரி 14
இரண்டும் இதயமாய் மாறும்.
ஜாதி,மதம்,
பணக்காரன்,ஏழை,
படித்தவன்,படிக்காதவன்
என்ற எந்தப் பாகுபாடும் இன்றி
அன்றொரு நாளில்
ரோஜாவும் சாக்லேட்டும்
இரு மனங்களில் கை கோர்க்கும்.
உயிரற்ற பொருள்கள் தான்
ரோஜாவும் சாக்லேட்டும்,
ஆனால்
உயிருள்ள இரு இதயங்களில்
உணர்வுகளை,பரிமாறிக் கொள்ளும்
உன்னத தூதர்கள்.
அதனால்தான்,காதலர் தினத்தில்
ரோஜாவும் சாக்லேட்டும்
ஒரே கையில்,ஒரே இதயத்தில்,
இணை பிரியாமல்
காதலாய் மலர்கின்றன.


உங்கள் அன்பை
நீங்கள் எங்களிடம் பகிர்ந்துகொள்ளும் போது,
எங்களுக்கும் விழாவே… 🌹🍫
ஆனால் காதலர்களே,
ஒரு கேள்வி…
ஒரு சிறு மாற்றம்…
ஒரு பெரிய அர்த்தம்…
இந்த காதல் தினத்தில்
ஒரு முறை
ரோஜாவை மணக்க விடாமல்,
சாக்லேட்டை இனிக்க விடாமல்,
உங்கள் காதலை
முதியோர் இல்லத்தின் வாசலில்
வைத்து பார்ப்பீர்களா?
ஏன் அங்கே?
என்று கேட்டால் ,
கேளுங்கள்…இதயம் திறந்து கேளுங்கள்.
இன்று,காதலர்களாக நிற்கும் நீங்கள்
நாளை கணவன்,மனைவி,
நாளை மறுநாள் பெற்றோர்,
மெதுவாக…மெதுவாக…
“முதியவர்கள்” ஆகி விடுவீர்கள்.
அப்போது உங்களுக்கும் தேவைப்படும் ....
ஒரு பார்வை, ஒரு வார்த்தை,
ஒரு அரவணைப்பு.
அந்த நேரத்தில்
இந்த உலகம் உங்களுக்கு
ஒரு தனிமை இல்லமாக
மாறிவிடக் கூடாதல்லவா?
அதற்காகத்தான்
காதலர் தினத்திலேயே
உங்களை அங்கே வரச் சொல்கிறோம்.
அங்கே சென்றால் தான் புரியும் ,
வயதான கண்களில் ஒளி குறைந்தாலும்,
பாசம் மட்டும் என்றும் குறையாதது என்று.
அவர்கள் எதிர்பார்ப்பது
ஆடம்பர வாழ்க்கை , அழகிய உடைகள்,
சுவை மிகுந்த உணவுகள் அல்ல.
அவர்களின் ஆசை ஒன்றே…
“நான் சின்ன வயதில்
என் குழந்தையை அரவணைத்தேன்,
என் மூப்பிலும்,அதே குழந்தை
என்னை அரவணைக்க வேண்டும்”
என்ற மௌன வேண்டுகோள்.
அதனால் காதலர்களே,
ஒரு வேண்டுகோளாக,
உங்களிடம் கேட்கிறோம் .
இந்த காதல் தினத்தை
ஒரு முறை , அங்கே கொண்டாடுங்கள்.
அப்போது தான், வயதான காலத்தில்
என்ன தேவை, என்ன எதிர்பார்ப்பு
என்று இப்போதே புரிந்துகொண்டால்,
திருமணத்திற்குப் பிறகு
பெற்றோரை தனிமையில் விட்டுவிட மாட்டீர்கள் அல்லவா?
காதல் என்றால்
ரோஜாவும் சாக்லேட்டும் மட்டும் அல்ல…
அது காலம் கடந்தும்
தொடரும் பாசம்.
💖 இனிய காதலர் தின வாழ்த்துகள் 💖

LUMINOUS 😇💜🙏💐😇
Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: Thenmozhi on February 01, 2026, 10:50:13 PM
 "உண்மைக்  காதல்"

வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாத உணர்வு காதல்!
இரு ஆழமான மனங்கள்
சம்பந்தப்பட்டு இணைவது காதல்!
நம்பிக்கை, மரியாதை தன்னகத்தே   
கொண்டது உண்மையான காதல்!

காதலர்களின் நம்பிக்கையால்
அதிகரிக்கும்  அவர்களது
அன்னியோன்யம்!
எந்த  எதிர்பார்ப்புமின்றி
தூய அன்பைக்  கொண்டது
புனிதமான காதல்!

காதலர்களிடையே ஒளிவு,
மறைவின்றி நேர்மை இருப்பின் 
அது உண்மையான காதல்!
இன்பம், வெற்றிகளை கொண்டாடுவதிலும்,
துன்பங்களில் தோள் கொடுப்பவர் ஆகவும்
அமைவது தான் உண்மையான காதல்!

உடல் ஈர்ப்புக்கு அப்பாற்பட்டு, உணர்வுபூர்வமான நெருக்கமானது உண்மையான காதல்!
காதலர்கள் விழி பார்வையால்
அவர்களின் மனதை அறிந்து கொண்டால் அது தான் உண்மையான காதல்!

தனது நேரத்தை ஒதுக்கி தொடர்பில் 
இருக்க வேண்டும் துணையுடன்....
சின்னச் சின்ன சண்டைகள்
வரவேண்டும் காதலர்களிடையே!
சீக்கிரம் சமாதானம் ஆகிட
வேண்டும் ஒற்றுமையாக....
அது தான் உண்மையான காதல்!
 
சாதி,மத,மொழி பேதமற்றது
உண்மைக் காதல்!
அந்தஸ்து, அதிகாரம் பார்க்காது
உண்மை காதல்!
ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு
இல்லாதது உண்மைக் காதல்!

எந்த சூழ்நிலையிலும் 
விலகிச் செல்லாது
உண்மைக் காதல்!
எதிர்ப்புகளை கூட இருந்து
எதிர்கொள்ளும் உண்மைக் காதல்!

காதல் ஜெயிக்கவில்லை என்று கோழைத்தனமான தற்கொலை
முயற்சிகளை  எடுக்காது
உண்மைக் காதல்!
காதலை ஜெயிக்க வைக்க
போராடும் உண்மைக் காதல்!

"ஒருத்தனுக்கு ஒருத்தி "
என்று இருப்பது உண்மை காதல்!
காதல் என்ற பெயரில் என்னென்னவோ பண்ணுகிறார்கள் இந்த காலம்!
"காதல்"என்ற புனிதமான சொல்லை
உன் சுயநலத்துக்காக களங்கடிக்காதே!

உண்மை காதலை மதிப்போம்!
உண்மை காதலர்களை போற்றுவோம்!
உண்மைக் காதலர்களை ஆதரிப்போம்!
உண்மையான காதலை வாழ வைப்போம்!

அனைத்து உண்மையான காதலர்களுக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...











Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: Shreya on February 01, 2026, 11:06:02 PM
நான்கு கண்கள் சந்தித்த அந்த முதல் நொடி,
நமது உலகம் ஒரு சிறு புன்னகையில் அடங்கி போனது..
நிழல் நிஜமாய் மாறிய அந்த திருநாள்
அக்னி சாட்சியாய் உன்னில் சரிபாதி ஆனேன்!!
முத்தங்களும், செல்ல சண்டைகளும்,
தீராத உரையாடல்களும்..
காதல் ஒரு மதுரமான கனவாக
நம்மை சுற்றி இருந்தது..!!!

​வாழ்க்கை எனும் ஓட்டத்தில் ஏனோ திசை மாறினோம்,
மெல்ல மௌனங்கள் வளர்ந்து,
இமயம் போல் ஓர் இடைவெளி,
புரிதல்கள் குறைந்து பிரிவுகள் பெரிதாக தெரிந்தன..
வேண்டாம் இந்த பந்தம் என
இதயம் கதறிய தருணங்கள்
நாம் தொலைத்த காதல்,
மீண்டும் கிடைக்காதோ என ஏங்கினோம்..!!!

​ஆனால் காலத்தின் கரங்கள் நம்மை
மீண்டும் பிணைத்தன,
தவறுகளை மன்னித்து காயங்களை
மறைக்க கற்று கொண்டோம்..
அன்று பார்த்த இளமையை விட இன்று பேரழகனாய்,
மரணம் வரும் அந்த இறுதி நொடி வரை
உன் விரல் கோர்த்து,
உன் மார்பில் சாய்ந்தே கிடக்க ஆசை..
மறுபிறவி என்பது உண்மை என்றால்,
நீயே என் கணவன்...நான் உன் மனைவி..!!!

​காதலின் சிறப்பு என்ன தெரியுமா?
இளமையில் கொண்டாட்டமாக, இடையில் பாடமாக,
முதுமையில் ஒரு பெரும் வரமாக இருக்கும்!!
நீ துணை இருந்தால் என் இறுதி பயணம் கூட
திருவிழாவே!
முடிவே இல்லாத ஒரு பயணத்தில்,
முடிவே இல்லாத ஒரு காதலில்..
மூழ்கித் திக்குமுக்காடுவோம்..!!!

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!

Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: Yazhini on February 02, 2026, 12:02:00 AM
ஓயாமல் அலை போல உரையாடியவனே...
கண்களில் நீர் தேங்கிய வேளையிலும்
இதழோரம் புன்னகை பூக்க செய்தவனே...

தீராத நினைவுகளை அள்ளி தந்தவனே
தனிமையின் வெற்றிடத்தை கவிதையாய் மொழிபெயர்த்தவனே
அலைபேசியின் ஒவ்வொரு ஒளிக்கீற்றிலும் மின்னியவனே

கைகோர்த்து பயணிக்க ஆசையைத் தூண்டியவனே
தோல் சாயும் தோழனாய் உடனிருப்பவனே
தாயின் ஸ்பரிசத்தை நினைவூட்டுபவனே...

நம்பிக்கை என்னும் நாங்கூரத்தால்
காதலை திடமாக பேணுபவனே
ஆயிரம் ஊடல் கொண்டாலும்
சிறுசொல்லில் அதை மறக்க செய்பவனே

இன்று
ஓடும் உன் கடிகாரத்தில்
எனக்கென்ற நிமிடங்கள்
குறைந்து தான் போனாலும்...
ஓயாமல் அலை போல்
இருந்த உரையாடல்
நடுகடலின் அலையாகி போனாலும்

என் தேடல் அனைத்தும்
உன் ஒற்றை சொல்லில்
ஒளிந்து கிடக்க -  உன்
கைப்பிடிக்குள் நாணமும் காணாமல் போக
முழுமையாக உன்னவள் ஆகிறேன்..
காதல் என்ற குமிழிக்குள்
Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: Evil on February 02, 2026, 01:00:13 AM
அவளிடம் நான்
பதில் எதிர் பார்த்து
காத்திருந்த நாள் இன்று!
ஆனால் அவளோ பதில்
அளித்துவிட்டாள் முன்னவே!

அவளின் பதிலை பார்த்ததும்
ஒரு நொடி என்னை நான் மறந்த நேரம்!
நான் கடிதம் எழுதும் முன்பே அவளிடமிருந்து பதில் வந்ததில்...
 திக்குத் தெரியாமல் திகைத்து நின்றேன்!


இமைக்கும் ஒவ்வொரு நொடியும்
உன் முகம் தான் வந்து செல்கிறதே!
கனவு என்று நினைத்தாலும்,
அந்த கனவே போதும்
என்கிறது என் மனது!
கனவில் கூட என் நினைவு
எல்லாம் உன்னிடம் என்றேன் !
என் உயிரே நீ என்றேன்!
பதிலுக்கு, ஒரு மௌனச் சிரிப்பால்..
என்  இதயத்தையும் திருடிச் சென்றாள் அந்த ராட்சசி!

என்னவளை ஏன் நான்
ராட்சசி என்றேன்?
அவளை அனுதினமும்
பார்க்க துடிக்கும்
என் இதயத்துடிப்பை
நிறுத்தி விட்டு சென்றவள்!
ராட்சசி இல்லாமல் என்னவென்று
நான் சொல்ல......

அவளை நேரில் கண்டதும்
நானும் அவளும் முதன் முதலில் பேசிய ஒரு வார்த்தை
 என்னவென்று நினைத்தால் இன்று கூட இனிக்கும்......
 அவள் சொன்ன அந்த 'Hello'..!

அதன் பின்பு  இருந்த
மெளன புன்னகையும் ....
அவளும் பேச துடித்தாள்!
நானும் பேச துடித்தேன்!
நாங்கள் பேசியது
"ஹலோ ஹலோ" என்ற
ஒரே வார்த்தை தான்....

அவளை நேரில்  கண்ட
ஒரு நொடியில் உலகமே
நின்று போனது....
என் மனதிடம் கேட்டேன்
ஏன் உலகமே நின்றது ? என்று
இதோ நிற்கிறாள் பாரு
இந்த பாவை....
இவளே உன் உலகம்
என்றது என் மனது!

அவளை ஏன் எனக்கு பிடித்தது?
இந்த ராட்சசியை எனக்கு
பிடிக்க காரணம் என்ன ?
என்று எனக்குள்ளே
இருக்கும் அவளின்
மனதிடம் கேட்டு பார்த்தேன்
அவளின் மனது சொன்னது
ஒரு வரை பிடிக்க வில்லை
என்றால் ஆயிரம் காரணம்
சொல்ல முடியும் என்னால் ....

அவளை ஏன் பிடித்தது?
எதற்காக பிடித்தது?
ஒரு காரணமும் எந்தக் கவிஞன் சொன்னாலும்
அது முற்றுப்பெறாத கவிதை என்றது அவள் மனது!

நாள் தோறும் அவளை
பார்க்க துடிக்கும்
அவளின் அவன் ...
என்றும் அவளே என் அழகிய ராட்சசி!

அனைவருக்கும் என் இனிய
காதலர் தின வாழ்த்துக்கள்.
ஐயோ இல்லை இல்லை ராட்சசி தின  நல்வாழ்த்துக்கள்...
Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: Sankari on February 02, 2026, 06:18:17 AM
என் உயிரில் ஒரு இடம் 💙

 இந்த காதலர் தினத்தில்,
ரோஜா வேணாம், சாக்லேட் உம் வேணாம்…
அவன் எல்லை இல்லாத பாசம்
எனக்கு போதும்.

இது பலர் நினைக்கும் காதல் இல்லை.
இது ஒரு புனிதமான,
ஆழ்ந்த காதல்.

என் வாழ்வில் ஒரு பூகம்பம் போல் நீ வந்தாய்.
நான் உன்னை தத்து எடுக்கவில்லை,
நீ தான் என்னை தத்து எடுத்தாய்.

நம் கண்கள் சேர்ந்த அந்த நொடியில்
என் மனதை பரித்து விட்டாய்.
நீ ஒரு மாயவனா ? 
நம் இருவரும் ஒரு நிமிடம் ஒன்றாக இணைந்தும் .

காதல் எவ்வளவு ஆழம் என உணர வைத்தாய்,
பாசம் அளவு இல்லாதது என காட்டினாய்.
பொறுப்பு என்ன  என்று  கற்று கொடுத்தாய்,
ஒருவித தாய்மை எனக்கு உணர்த்திநாய்

என் மகிழ்ச்சியை உன் வெற்றியாக கொண்டாடினாய்.
என் கண்ணீர், என் துன்பம்,
என் உள்ளில் இருக்கும் எல்லா நிறங்களும் நீ பார்த்துக் கொண்டாய்,
 ஒரு ஆதரவாக நின்றாய்

இந்த வருடங்கள் எப்படி கடந்துபோனது,
எனக்கும் தெரியவில்லை.

காலம் கடந்துபோனது ஏன் ?
உனக்கு வயது ஆனதும் நான் மறந்து விட்டேன்.
ஆனால் அதை இயற்கை மறக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு
நீ சோர்ந்து போகும் நிலையில்,
வாழ்க்கை நிரந்தரமல்ல என எனக்கு உணர்த்தினாய்.

நீ இல்லாமல் நான் என்ன செய்வேன் என
நினைத்து பார்க்க முடியாத நிலை.
என் நிழல் போல என்னை சுற்றி வருகிறாய்.
உன் விசுவாசத்திற்கு ஒரு எல்லையும் இல்லை.

உன் அன்புக்கு நான் தகுதி ஆனவளா என்று
தினமும் சிந்திக்கிறேன்.
எத்தனை காலங்கள் நான் காதலன் வருவான் என்று நான் காத்திருந்திருப்பேன் ?
அவன் காதலுக்காக ஏங்கிருப்பேன் .
ஆனால் உன்னுடைய எல்லையற்ற அன்பு எனக்கு இருக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை.
உன்னை இன்னும் காதலிக்க, நேசிக்க, ரசிக்க,
இந்த வாழ்க்கை எனக்கு மறுபடியும் கற்று கொடுத்தது.
உன்னை இன்னும் அதிகமாக காதலிக்கிறேன்.

என் உயிரில் உள்ள வரை உன்னை நேசிப்பேன்.
என் உயிரில் இருக்கும் அந்த இடம்
உனக்கே மட்டுமே சொந்தம்.
நாலு காலில் ஓடும், என் அன்பே💙🐾
Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: Ninja on February 02, 2026, 11:38:39 AM
நீளும் கவிதை - காதல்

சிருஷ்டியில் உருவான
ஏதேன் தோட்டத்து
ஆதாம் ஏவாள்
காதலை சிருஷ்டித்தனர்
ஆதாமின் முதல் இதய துடிப்பே காதல்
ஏவாளின் முதல் பார்வையில் மலர்ந்த உணர்வே காதல்

காலங்கள் கடந்தாலும்
காதல் உறைந்தே நின்றிருந்தது

பார்வையற்றவளின் மனதை படித்த
வாலண்டைனின் முதல் கடிதமே
காதல்.
காதலை வாழ வைத்து காதலில் மடிந்து என்றென்றுமாய் காதலை
வாழவைத்த வாலண்டைனின்
தியாகமே காதல்

ரோமியோ ஜூலியட்டின்
மரணத்தை வென்றதும் காதல் தான்
அமராவதியின் மௌனத்தில்
வாழ்ந்ததும் காதல் தான்

விதியும் சதியும் பிரித்தபோதெல்லாம்
வென்றிருந்தது காதல் தான்.
போரில் வீழ்ந்தாலும்
மரணத்தில் இணைந்த
அந்தோனி கிளியோபாட்ராவின்
வீழ்ச்சியும் காதல் தான்
புதைந்தாலும் மாண்டாலும்
சலீமின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டே இருந்ததும்
அனார்கலியின் காதல் தான்.

காலம் காதலை உருவாக்கியது
காதல் மனிதனை உருவாக்கியது
உலகம் கற்றுக்கொண்ட முதல் பாடமே
காதல் தான்.
உயிர்களுக்கு மொழியாய் வந்தது காதல்
பசியில் பகிர்ந்து கொண்டது காதல்
பயத்தில் துணிந்து நிற்க வைத்தது காதல்
மொழி கடந்து மதம் கடந்து
சாதி கடந்து
வாழும் மனிதமே காதல்.
காதல் வெற்றி பெற வேண்டியதில்லை
வாழ்ந்து காட்டுதலே அதன் வெற்றி
மனிதனை மனிதாக்கும்
உண்மையே காதல்
ஆதலால் காதல் செய்வீர்
Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: Pradeepa on February 02, 2026, 03:36:41 PM
​தொலைதூரக் காதல்....

பிரிவு என்பது வெறும் தூரம் மட்டுமல்ல,
அது நம் காதலைச் சோதிக்கும் ஒரு அக்னிப் பரீட்சை!

நீ இருக்கும் ஊரின் திசை நோக்கி
தினமும் என் கண்கள் மேய்கின்றன...

தூரத்து மேகமாவது உன்ல முகம் பார்த்து வருமா என்று!

​நூறு முறையாவது பார்த்து விடுகிறேன் - உன்
புகைப்படத்தை அல்ல,
நம் உரையாடல் நிறைந்த அந்தச் சிறு திரையை!

உன் குரல் கேட்கும் அந்தச் சில நிமிடங்கள் தான்
எனது முழு நாளுக்குமான உயிர்ச்சத்து!

​கண்களை மூடினால் நீ அருகில் இருப்பது போன்ற பிரமை,
கண்களைத் திறந்தால் தனிமையின் வெறுமை!

இருந்தும், இந்தத் தூரம் நம்மைப் பிரிக்கவில்லை,
மாறாக...
ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை
ஒவ்வொரு நொடியும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

அழகிய  கோபக்காரன்...

அதிகாரக் குரலில் நீ என்னை அதட்டும் போது - உன்
அன்பின் ஆழத்தை நான் ரகசியமாய் ரசிக்கிறேன்!

வார்த்தைகளில் நீ காட்டும் அந்தச் சின்னஞ்சிறு கோபம்,
வெறும் மேகமூட்டம் தான் என்று எனக்குத் தெரியும்...

ஏனெனில், அடுத்த நொடியே
மழைத்துளியாய் நீ பொழியும் பாசத்தில் நான் மொத்தமாய் நனைந்து போகிறேன்!

​உலகமே எதிர்த்தாலும் எனக்காக நீயே நிற்பாய்,

உன் கோபத்தின் பின்னால் இருப்பது வெறுப்பல்ல,
நான் தொலைந்து போய்விடக் கூடாதென்ற
ஒரு  அதீத பயம் கலந்த அக்கறை!

நீ முறைத்துப் பார்க்கும் போது வரும் பயத்தை விட,
நீ சமாதானம் செய்யும்போது காட்டும் அந்தக்
குறுஞ்சிரிப்பில் தான் என் உயிர் ஊசலாடுகிறது.

​உன் பிடிவாதங்களும், உன் அதிகாரங்களும்
எனக்குக் கிடைத்த வரங்கள்!

ஏனென்றால்... நீ கோபப்படும் ஒரே உரிமையும்,
நீ கொஞ்சும் ஒரே உயிரும் நான்..

​நான் தடுமாறும் போதெல்லாம், "நான் இருக்கிறேன்" என்று சொல்லாமல் சொல்லும் என் நம்பிக்கை நீ.

​உலக வரைபடத்தில் நான் தொலைந்து போனாலும், உன் இதயத்தின் முகவரியில் நான் என்றும் பத்திரமாக இருப்பேன்.

​ஒரு சிறு வேண்டுதல்
​காலங்கள் மாறலாம், நம் தலைமுடி நரைக்கலாம்,
ஆனால் உன் கைகளை கோர்த்துக்கொண்டு நடக்கும்
அந்த முதல் நாள் சிலிர்ப்பு மட்டும் எனக்கு என்றும் வேண்டும்.

என் கண்ணீருக்கு முதல் துடைப்பவனாகவும்,
என் சிரிப்பிற்கு முதல் காரணமாகவும் நீ மட்டுமே இருக்க வேண்டும்.
​இந்த ஜென்மம் போதாது உன்னை நேசிக்க...

இன்னொரு பிறவி இருந்தால், அங்கேயும் உனக்காகவே
முன்பதிவு செய்து காத்திருப்பேன் என் அன்பே!
​என்றும் உன்னவள்...
Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: Sethu on February 02, 2026, 06:21:52 PM
என்னவள் திட்டும் போதும்
கோபப்படும்போதும் என்னடா
வாழ்க்கை என்று தோணும்....
ஆனால் கொஞ்ச நேரத்துல வந்து
பேசும்போது வாழ்ந்தால்
இவ கூட தான் வாழனும்னு தோணும்
இதுதானே அன்பு
இது தானே காதல் !

என்னை தவிக்க விடும் அன்பு வேண்டாம் தவறவிடும் அன்பு வேண்டாம்
தவறாக புரிந்து கொள்ளும் அன்பு வேண்டாம் தடுமாற வைக்கும் அன்பு வேண்டாம்
என்னிடம் காலம் காலமாக காட்டும்
அன்பும் காதலும் போதுமடி....

புரியாதவர்களுக்குத்தான் ஆயிரம்
விளக்கம் வேண்டும்
புரிந்த என் காதலுக்கு
உன் சிரிப்பு ஒன்று போதும் ...
உன் எண்ணத்தை நான் அறிவேன்
என்னவளே!

எப்பொழுதும் என்னுடன் இரு என
உனக்காக ஏங்குவது
உன்னிடம் இருக்கும் சொத்து
சுகத்திற்காக அல்ல...
இந்த உலகில் நான் வாழ
மூச்சுக்காற்றை விட அதிகம்
தேவைப்படும்  உனது  அன்பும்
உனது காதலும் அதற்காகத்தான்!

காதலுக்குத் தெரியாது ஜாதி
காதலுக்கு தெரியாது மதம்
காதலுக்குத் தெரியாது இனம்
இவற்றையெல்லாம் கடந்து காதலை
காற்றாக சுவாசிப்போம்
வாழ்க அன்பு
வாழ்க  காதல்!

எத்தனை கஷ்டம் வந்தாலும்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
அதில் நீயே வேண்டும் என்
காதலியாக மட்டுமல்ல என் உயிராக...
Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: AgNi on February 04, 2026, 09:53:00 PM


ஒரு காலத்தில்.....
கணப்பொழுதில் மின்னிமறையும்
மின்மினி அல்ல நீ!
அண்டமே வெடித்து சிதறும்
ஆகாய பிழம்பு நீ!

முடிந்து விட்ட பாலை வனத்தில்
மூச்சு அவிழா மொட்டுகளின்
மரகத சோலைவனமாய் நீ!

ஆன்மாவை அரிக்கும் காதலை..
கண்ணீராலும் இரத்ததாலும்
அணைக்கட்டி முடியாமல் உள்ளுக்குள்
சிதறிக்கிடக்கிறேன்!

அடர்ந்த காட்டின்...
ஆழ்ந்த அமைதியைப் போல
நிசப்தமாகிப் போனது
உனக்கான என் ஏக்கங்கள்!

தூக்கத்தை தொலைத்த இரவுகளில்
இதயத்தை பிழிந்த ரணங்களாலும்
என் இருப்புகளை அலட்சியப்டுத்திய
ஒவ்வொரு நொடியில்...
ஏதோ ஓர் உயிர்நரம்பு அற்றுபோகும்...

மறதி உனக்கான தண்டனை அல்ல...
எனக்கே நான் சூட்டிக்கொண்ட மவுன கிரீடம்...

என்றோ நீ வாங்கிக்கொடுத்த  துப்பட்டா...
இன்றும் என் வீணையை
உயிரோடு மூடி வைத்து உள்ளேன்..அது
தூங்கி போன ராகங்களை மட்டுமல்ல..
என் முகாரிகளையும் சேர்த்தே மறைக்கின்றது!

முடக்கப்பட்ட உன் அலைபேசி எண்
தடுக்கப்பட்ட அழைப்புகளாக  பார்க்கும்போது
தவறிப்போன நம் வாழ்வை எண்ணி
தனித்த வாழ்வு வாழ்கிறேன்...
நீ அருகில் இருந்தாலென்ன?
இல்லாவிடில்  என்ன?


Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: BreeZe on February 05, 2026, 02:17:02 PM


ரொம்ப நாளிக்கு அப்பரம்
கவிதை எழுதுறேன்…
அதான் கொஞ்சம் பிரஷர்
ஒழுங்கா வரணும் கவிதை,
இல்லாட்டி
“இதோட நா காதல விட்ருவேன்,
உன்னை ஃபார் சேல் னு சொல்லி,
அப்பரம் நானேய திரும்ப வாங்கிடுவேன்”

அச்சோ… அச்சோ…
நீ பயப்படாத
உன்னலாம் விக்க மாட்டேன்,
இது சும்மா கவிதையோட
காமெடி வார்னிங் தான்

பென்-ஆ எடுத்து
வாலென்டைன்ஸ் டே-க்கு
கவிதை எழுதலாம்-னு யோசிச்ச அப்போ தான்
அடுத்த தாட்…
ஐயோ!

பென்-ஆ இல்ல… என் கை அடுத்த
உன்னோட லவ்-ஆ நெனச்சி…
சி சி! வெக்கமாஹ் வருதே

சரி சரி…
டிராமா எல்லாம் ஸ்டாப் பண்ணிட்டு
இப்போ உனக்கொரு
வாலென்டைன்ஸ் கவிதை
எழுத ட்ரை பண்ணுறேன்

“காதல்… காதல்… காதல்…”
னு யோசிச்சாலே
ஃபர்ஸ்ட்-ஆ என் பிரெயின்-ல
உன் முகம் தான் லோடிங்

உன்னை தவிர வேற யாரையாவது
யோசிக்க ட்ரை பண்ணினாலும்,
பிரெயின் சொல்லுது
“ரிபீட் மோட்-ல நீ தான்” னு

என்ன பண்ணறது…
இந்த ஜென்மத்துல
நீ தான் எனக்கு,
நா தான் உனக்கு-னு
நான் யோசிக்குறேன்…

பட் ஒரு சின்ன டவுட்
நான் மட்டும் தான் இப்படியே யோசிக்குறேனா?
இல்ல… நீயும் யோசிப்பியா?

யோசிச்சா நல்லது…
இல்லாட்டி… ஹ்ம்ம்…
நான் சொல்ல மாட்டேன்
உனக்கே தெரியும்-லே

இப்படிக்கு -->
இந்த கவிதையோட காப்பிரைட்ZZZ
உன் கதாளி ப்ரீஸ்





Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: Vethanisha on February 05, 2026, 03:47:42 PM
காதல்…

இந்த மூன்றெழுத்து செய்யும்
மாயம் தான் எத்தனை!

அதை நீ மதித்த நேரம்

எதிரியை நண்பனாக்கி,
நண்பனைக் காதலனாக்கி ,
காதலனைக் கவிஞனாக்கி,
கவிஞனைக் கணவனாக்கி,
கணவனைக் காவலனாக்கி
வித்தை காட்டும்!

நீ அதை உதறிய வேளை

உரியவனைக் கயவனாக்கி,
கயவனைப் பகைவனாக்கி,
பகைவனை அந்நியமாக்கி,
நம்பிக்கையை நொறுக்கி,
நினைவுகளை நெருப்பாக்கி
வேடிக்கை காட்டும்!

நட்பு,
பாசம்,
நேசம்,
பற்று
என்றெல்லாம்
பரிணாமம் எடுக்கும்
 இந்த அன்பின்
காதல் உணர்வுக்கு
மவுசு அதிகம்
எப்போதும்!

கண்களில் தொடங்கி,
ஊன் உயிரில் கலந்து,
கண் சிமிட்டி சிரிக்கும்!

எதிர்பார்ப்புகளை உருவாக்கி,
எண்ணமெல்லாம் பிணைத்து,
எட்டி நின்று ஏகத்தாளம் செய்யும்!

"ஆம்" என்ற வார்த்தையில்
உறவினை உருவாக்கி,
"போ"  என்றவுடன்
உயிர் நொறுக்கி செல்லும்!

இருந்தும்

அற்புதங்கள் பல காட்டும்
இந்த
அன்பினிலே காலமெல்லாம்
 அடிமையாவோம்
 
காதலில் விழுந்து
காதலையும் காதல்
செய்வோம்

இனிய அன்பர் தின நல்வாழ்த்துக்கள் ♥️

Title: Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
Post by: VenMaThI on February 06, 2026, 04:47:49 AM


காலையில் எழுந்ததும்
" அப்பா உன் மூஞ்சில முழிப்பேன்னு தெரியாதா? இங்க வாப்பா "
என அதட்டிய நாட்கள் போய்
" அவன்ட்ட இருந்து ஏதும் குறிஞ்செய்தி வந்துருக்கா? "
என அலைபேசியை தேடும் காலம்
எல்லாம் காதல் செய்யும் வேலை 🤦‍♀️

அம்மா கொடுத்த காப்பி
கொஞ்சம் ஆறி இருந்தாலும்
"எனக்கு சூடா வேணும்னு தெரியாதா? வேணாம் போ..
என கோபம் கொண்ட நாட்கள் போய்
"வச்சுட்டு போமா அப்புறம் குடிச்சுகிறேன்" ன்னு சொல்லிட்டு
பச்ச தண்ணி போல் ஆறுவது தெரியாமல்
குறிஞ்செய்தியில் தகவல் பரிமாற்றம்...
எல்லாம் காதல் செய்யும் வேலை 🤦‍♀️

வேலைக்கு செல்லும் அக்காவிடம்
"வேலைக்கு தான போற
எதுக்கு இவ்வளவு அலங்காரம்? நீ பிறப்பிலேயே அழகு தன் அங்குட்டு போ"
என கூறிய காலம் போய்
உச்சி முதல் பாதம் வரை
"மேட்சிங் ஆ இருக்கா?.. கம்மலும் வளையலும் இந்த உடுப்புக்கு ஒத்துப்போகிறதா? என்ற கேள்வியில்
காலனியும் சேர்ந்து கொண்ட காலம் இது..
எல்லாம் காதல் செய்யும் வேலை 🤦‍♀️

மதிய உணவு வேளையில்
"சாப்பிட போறேன் அம்மா நீ சாப்டாச்சா? என்ன பண்ணிட்டு இருக்க? சாப்டுட்டு கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு"
என்ற பாசமாய் பேசிய நாட்கள் போய்
"அட client call ல இருக்கேன் மா கொஞ்சம் call அ கட் பண்றயா"
என கூறி அடுத்த நொடி அவனுக்கு கால் போகும் நாட்கள்
எல்லாம் காதல் செய்யும் வேலை 🤦‍♀️

பெற்றோருக்கு பிடித்த மலிவு விலை பாவாடை தாவணி
எடுப்பான தோற்றம் கொடுத்தாலும்...
அவனுக்கு பிடிக்கும் என்பதால் - கொஞ்சமும் பொருந்தாத அயல்நாட்டு உடுப்பை அதிக விலை கொடுத்து வாங்கி உடுத்தும் காலம்
எல்லாம் காதல் செய்யும் வேலை 🤦‍♀️...

அவனுக்கு என்னை பிடிக்கும்
எனக்கு அவனை பிடிக்கும்
என கூறும் நொடியில்...
பிறப்பிலிருந்து பிடித்த பெற்றோர் கூட பிடிக்காமல் போகும்..
எல்லாம் காதல் செய்யும் வேலை 🤦‍♀️
...
காதலர்களே ஒரு சிறிய அறிவுரை...
அல்ல அல்ல..
அறிவு உடையவருக்கு தான் இந்த உரை மனதில் பதியும்
காதலில் விழுந்த உயிரிங்களுக்கு அறிவு தான் கொஞ்சம் மங்கிப்போகிறதே...
ஆக இது அறிவுரை அல்ல..

பட்டு புண்பட்ட நெஞ்சம்
கற்றுக்கொண்ட பாடம் என கூறலாம்..

காதலுக்கு நான் எதிரியல்ல..

பார்த்து பார்த்து பொக்கிஷமாய் வளர்த்த
பெற்றோரை பின் தள்ளி...
காதலில் ஜெயித்து விட்டோம் என்றென்ணி
காதலை ஜெயித்துவிட செய்யாதீர்..

கள்வனைக்கூட காதல் செய்
அவன் கள்ளத்தனமதை விட்டு
கடினமாய் உழைத்து உன்னை காப்பாற்றும் அளவிற்கு
அவனை மாற்றும் திறன் உன்னிடம் இருக்குமானால்.....

யாரையும் புண்படுத்தாமல்
யார் மனதையும் காயப்படுத்தாமல்...
வேண்டாம் எனக்கூறும் பெற்றோர்
"எங்களுக்கு முழு சம்மதம்'- என கூறும் அளவிற்கு
அவர்தம் கண்களுக்கு குறையாய் தெரிந்த அனைத்தையும்
நிறையாய் மாற்றி...

கஷ்டங்களை தீர்க்கவும் நம் கைகள் ஒன்றாய் இருக்கும்..
நம்மை காக்கும் கடவுளை வணங்கவும் நம் கைகள் ஒன்றாய் இருக்கும்...
இன்று பிடிக்கும் உன் கரங்களை
எந்த நிலையிலும் விடேன் ...என்று
நீங்கள் நம்பும் உங்கள் காதல் மேல் சத்தியம் செய்து...
இனிதாய் உங்கள் வாழ்க்கையை தொடருங்கள்..
காதலை வென்ற காதலர்களாய்....