FTC Forum

Friends Tamil Chat FM => நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் => Topic started by: Forum on January 19, 2026, 11:30:14 PM

Title: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)
Post by: Forum on January 19, 2026, 11:30:14 PM
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-002

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

“திருவிழா கொண்டாட்டம்”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠Starting next week onwards, participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)
Post by: Madhurangi on January 21, 2026, 10:33:02 PM
எங்க குடும்ப குலதெய்வம் கண்ணகி அம்மாளாச்சி.
வருஷத்துக்கு ஒரே ஒரு தடவை, 15 நாட்கள் நடக்கிற எங்க கோவில் திருவிழா வெறும் திருவிழா மட்டும் இல்ல… அது எங்க குடும்பத்தோட reunion.

அதுலயும் 12-ம் நாள் திருவிழா எங்க குடும்பத்துக்கு மாத்திரம் உரித்தான  ரொம்ப ஸ்பெஷல் திருவிழா நாள் . போர் காலத்துல வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த என் அம்மாவோட friends கூட, வருஷம் முழுக்க விடுமுறையை சேமிச்சு வச்சு இந்த ஊர் திருவிழாக்கு தான் வருவாங்க. அம்மாளாச்சியைப் பார்க்கறதுக்காக மட்டும் இல்ல… அவங்க விட்டு போன ஊருக்கும், அவங்களுக்கும் நடுவில இருக்குற உறவை மீண்டும் மீட்டி பார்த்து புதுப்பிக்கிறதுக்கும் தான். .

மஞ்சள் பூ , பட்டு சிவப்பு ரோஜா ல செஞ்ச பூ அலங்கார சாத்துப்படி சூடி  எங்க அம்மாளாச்சி பிள்ளையார் முருகன் சகிதம் வெளி வீதி உலா வரும்போது… அப்டியே உடம்பே சிலிர்த்துப் போகும்.
இப்போ எல்லாம் social media-ல noise pollution, Air pollutionன்னு பட்டாசுக்கு எதிரா எத்தனை போராட்டம் நடந்தாலும், அம்மாளாச்சி வெளில வரும்போது காதைப் பிளக்கும் வேட்டு   சத்தமும், கண்ணை பறிக்கும் வாணவேடிக்கையும் இல்லனா… அந்த திருவிழா முழுமையடையாத மாதிரி தான் தோணும்.

“ஏழு கழுதை வயசானாலும்” மாமாவையும் அண்ணாவையும் இழுத்துக்கிட்டு போய் cone ice cream gang ஆ   வாங்கி சாப்பிடுற பழக்கம் இன்னைக்கும் மாறல. வயசு கூடுது… ஆனா அந்த சந்தோஷம் மட்டும் மாறல.

எங்க திருவிழால எனக்கு ரொம்ப பிடிச்ச இன்னொரு விஷயம், மாலை பூஜை முடிஞ்சதும் நடக்கிற ஸ்பெஷல் ப்ரோக்ராம்.
குமரன் நாதஸ்வரக் கச்சேரி, செண்டை மேளக் கச்சேரி, வில்லுப்பாட்டு… பக்தியோட சேர்ந்து கலையும் கொண்டாடற அந்த நேரம் பார்ப்பதுக்கே மனசு நிறைவா இருக்கும் .

WhatsApp group-ல எத்தனையோ படங்களும் மெசேஜ்களும் பகிர்ந்தாலும், நேர்ல cousin-களை சந்திச்சா வருஷம் முழுக்க சேமிச்ச கதைகள் எல்லாம் ஒரே மூச்சில வெளிய வரும்.
“என்னதான் இப்படி ஓயாம பேசுறீங்க?”ன்னு பெரியவங்க சலிச்சாலும், அந்த பேச்சு தான் எங்களை இன்னும் நெருக்கமா கட்டி வைக்குது.

புகைப்படத்துல மட்டுமே தெரிஞ்ச பாட்டி-தாத்தாக்கள் பேர் சொல்லி, ஊர் பெரியவங்க நம்மை பார்த்து
“அந்தக் கண்ணு அப்படியே இருக்கு… அந்த மூக்கு அப்படியே இருக்கு”
ன்னு சொல்றப்போ,அப்பாடா , அண்ணா அடிக்கடி சொல்ற மாதிரி ,
நம்மை யாரோ குப்பைத் தொட்டிலிருந்து எடுத்து வந்துடலன்னு ஒரு சின்ன reassurance மனசுக்குள்ள கிடைக்கும்.

முடிவா சொன்னா,
இந்த திருவிழா எங்களுக்கு சாமி தரிசனம் மட்டும் இல்ல.
உறவுகளை மீண்டும் சேர்க்கிற விழா.
நினைவுகளை புதுப்பிக்கிற விழா.
“நம்ம வேரு எங்க இருக்குனு” ஒவ்வொரு வருஷமும் நினைவூட்டற விழா
.
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)
Post by: Thenmozhi on January 21, 2026, 10:35:19 PM
  எனக்கு யாழ்ப்பாணத்தில் அன்பான அழகான தாத்தா பாட்டி இருந்தாங்க.நாங்கள் அவர்களுடன் தினமும் போனில் பேசுவோம்.போன் பேசினாலே பாட்டி கேட்கும் கேள்வி "எப்போ ஊருக்கு வாரீங்கன்னு".பாட்டி ஆகஸ்ட் மாதம் லீவு வருவோம் என்று சொல்லுவோம்.உடனே பாட்டி சொல்லுவாங்க நல்லூர்த் திருவிழா வருது வாங்க போகலாம் என்று.எப்போ ஆகஸ்ட் மாதம் வரும் என்று வெயிட் பண்ணிட்டு இருப்பேன்.
   யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளம் நல்லூர் கந்தசுவாமி கோவில். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 25 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் உச்சக்கட்டமே தேர்த் திருவிழா.யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு நிறைய உறவுகள் இருக்கிறார்கள்.நான் எங்கள் குடும்பத்துடனும் ,உறவுக்காரர்களுடனும் அந்த தேர் திருவிழாவை பார்க்க போயிருந்தேன்.
    அழகாக பட்டுப்பாவாடை உடுத்தி,தலைக்கு பூ வைத்து ,என்னை கண்ணாடியில் பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது.அனைவரும் கலாச்சார உடையில் தான் வந்தார்கள்.ஏனெனில் கலாச்சார உடையில் செல்லும் பக்தர்களைத்தான் கோயிலின் உள் நுழைய அனுமதிப்பார்கள்.
    செல்லும் வீதி எல்லாம் ஒரே பக்தர் கூட்டம்.தண்ணீர் பந்தல்கள், தெருக்கடைகள் தெரு ஓரங்களில் காட்சியளித்தன.கடைகளை வேடிக்கை பார்த்து வந்தேன்."அப்பா அங்க பாருங்க ஐஸ்கிரீம் கடை"."கோவில் கும்பிட்டு வரும் போது வாங்கி தாரேன்" என்று அப்பா கூற மனதை அடக்கி கொண்டு நடந்து சென்றேன்.
  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லூரின் நான்கு வீதிகளிலும் கூடி இருந்தார்கள்.இலங்கையின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தமிழர்களும் ,வெளிநாட்டவர்களும் அங்கே வந்திருந்தனர்.பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தேன்.அப்பா என்னை தோளில் சுமந்து சென்றார்.இந்தத் தருணம் அப்பா தான் எனக்கு கடவுளாக தெரிந்தார்.
  அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேரில், வள்ளி-தெய்வானை சமேதராய் முருகப்பெருமான் எழுந்தருளி, நான்கு வீதிகளிலும் பவனி வந்தார்.பக்தர்கள் "அரோகரா" முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பல்லாயிரக்கணக்கான தேங்காய்கள் சிதறு தேங்காய்களாக "படார் படார்" என்று உடைக்கப்பட்டன.மேள,தாள, நாதஸ்வரங்கள் இசைக்கப்பட்டதைக் கேட்டு நான் இசையில் மெய் மறந்து விட்டேன்.ஆண்கள் அங்கபிரதட்சணம்,பெண்கள் அடி எடுத்து வைத்தல்,பாற் காவடி ,பறவை காவடி ,தூக்கு காவடி என பக்தர்கள் நேர்த்திக்கடன் தீர்த்தனர்.பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
  இரு பக்கமும் இரு வடங்கள் பிடித்து தேர் இழுக்கப்பட்டு வந்து கொண்டிருந்தது.நேரடி அஞ்சல் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது."இறுக்கமாக கையப் பிடி தொலைந்தால் இந்த ஆட்களுக்குள்ள பிடிக்க இயலாது"அம்மாவின் உரத்த தொனி. என் மனதில் பயம் ஆரம்பித்தது."ஐயோ நான் தொலைந்தால் வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியாதே" .அம்மாவை கேட்டேன் "தொலைந்தால் எங்கே நிற்க வேண்டும் என்று".அம்மா ஒரு மரத்தினை காண்பித்தார் அப்பாடா  என்று நிம்மதி.
    பக்தர்கள் தேரின் பின்னால் பஜனை பாடியபடி வந்தார்கள்.இந்த காட்சிகளை பார்ப்பது என் மனதுக்கு சந்தோசமாக இருந்தது.கோவில் உள்வீதி, வெளிவீதி என வலம் வந்து வணங்கினோம்.மிகப் பிரமாண்டமான கோவில்.
  இந்தக் கோவிலில் எனக்கு மிகவும் பிடித்தது சரியான குறிப்பிட்ட நேரத்தில் பூஜைகள் ஆரம்பித்து நிறைவேறும்,அர்ச்சனை டிக்கெட் ஒரு ரூபாய்,கோவிலைச் சுற்றியுள்ள மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டமை.இதனால் நிறைய பக்தர்கள் பயனடைந்தார்கள்.தேர் இருப்பிடத்தை வந்ததும் சுற்றி கும்பிட்டோம்.சாமிக்கு பச்சை சாத்துதல் இடம் பெற்று,பூஜைகள் நடைபெற்று, இனிதே தேர் திருவிழா நிறைவு பெற்றது.
     திருவிழா நிறைவுற்றது என் மனசு நிறைவாகனும் அல்லவா?ஸ்பெஷல் ஐஸ் கிரீம் ,காரச் சுண்டல்,கச்சான்,இனிப்பு வகைகள் சாப்பிட்டு இன்புற்றோம்.வந்தவர்கள் "என்ன toys வேணும் "என கேட்க நானும் கையை காட்டினேன்.கை நிறைய toys  அடுக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
   நல்லூர் திருவிழா என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அது ஈழத்தமிழர்களின் பக்தி, கலாசாரம் மற்றும் ஒற்றுமையின் அடையாளம்.இதுவே என்னால் என்றும் மறக்க முடியாத திருவிழா கொண்டாட்டம்.



   

 
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)
Post by: Oonjal on January 22, 2026, 03:12:42 PM
பக்கத்து ஊர் கோவிலில் இன்று 10 ம் நாள் தெப்பத்திருவிழா போகலாம் என்று அப்பா சொன்னவுடன் நானும் அம்மாவும் சந்தோஷமாக தயாரானோம். நான் பட்டு பாவாடை சட்டை தான் போடுவேன் என்று அடம் பிடித்து எனக்கு பிடித்த மாம்பழ கலர் பட்டு பாவாடை காவி கலர் சட்டையும் போட்டு கிளம்பினேன்.அம்மா தலை வாரி ரெட்டைசடை போட்டு பிச்சிப்பூவும் கனகாம்பரம் பூவும் சேர்த்து கட்டிய பூவை வைத்து விட்டார்கள். கை நிறைய கண்ணாடி வளையலை எடுத்து போட்டேன். நான் வெளியே போகும் போது எல்லாம் வைக்கும் திஷ்டி பொட்டை அம்மா வைத்து விட்டார்கள்.         நாங்கள் தயார் என்று சொன்னதும் அப்பா வீட்டை பூட்டி பஸ் நிலையம் அழைத்து சென்றார்.பஸ் எப்போ வரும் என்று எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் பஸ் வர அதில் ஏறி பக்கத்து ஊரில் சென்று இறங்கினோம். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அந்த கூட்டத்தில் நாங்களும் கலந்து நடந்தோம். சிறிது தூரத்தில் கோவில் வாசல் தெரிந்தது. உள்ளே சென்று சாமி தரிசனம் பார்த்தோம்.   
     ஒவ்வொரு சாமியாக கும்பிட்டு விட்டு வெளியே வந்தோம். கோவில் வெளியே எங்கு பார்த்தாலும் கடைகள் .அதை சுற்றிலும் மக்கள் பிடித்ததை வாங்கி கொண்டு இருந்தார்கள். நானும் அம்மாவும் முதல் கடையில் நுழைந்தோம். கலர் கலரா கண்ணாடி வளையல்கள், விதவிதமான சடைமாட்டிகள், சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள் ,nailpolish எல்லாம் பார்த்ததும் ஆசை ஆசையாய் எனக்கு பிடித்ததை எடுத்து அம்மாவிடம் கொடுத்தேன்.
     அடுத்த கடையில் கலர் கலர் பலூன்கள் பறந்து கொண்டு இருந்ததைப் பார்த்து அங்கு ஓடினேன். பிடித்த கலரில் எல்லாம் பலூனை எடுத்து அப்பாவிடம் நீட்டினேன். கடைக்காரரிடம் பணத்தை கொடுத்து விட்டு அடுத்த கடை பக்கம் போனோம். கலர் கலரான குளிர்பானங்கள் விற்பனை நடந்து கொண்டிருந்து. எனக்கு பிடித்த மாம்பழ juice வாங்கி குடித்து கொண்டிருக்கும் போது மக்கள் எல்லாரும்" தெப்பம் எடுக்க போறாங்க ஓடி வாங்க "என்று சத்தமிட்டபடி ஓடினார்கள் .நாங்களும் கூட சேர்ந்து ஓடினோம்.
    அங்கு இருந்த கூட்டத்தில் எனக்கு தெப்பம் தெரியவே இல்லை .அப்பா என்னை தோளில் தூக்கி வைத்து கொண்டார். தடிமனான கயிறை நிறைய பேர் சேர்ந்து இழுக்க தெப்பத் தேர் நகர ஆரம்பித்தது .தண்ணீரில் தேர் போவதை கண்டு நான் சந்தோசத்தில் கைகள் தட்டி ஆர்ப்பரித்தேன். பல சுற்றுகள் சுற்றி முடியவும் மக்கள் கலைந்து சென்றனர். நாங்களும் வீட்டுக்கு கிளம்பலாம் என்று வரும் வழியில் அன்னதானம் வழங்கி கொண்டிருந்தார்கள் .அங்கு சென்று அமர்ந்தோம். வாழை இலையில் சுடசுட கலவை சாதம் பரிமாறினார்கள். சாப்பிட்டு விட்டு பஸ் நிலையம் வந்தோம். பஸ் ஏறி வீடு வந்து சேர நடுசாமம் தாண்டிவிட்டது. அன்றைய நாள் சந்தோசம் நீண்ட நாட்கள் மனதில் நிலைத்து இருந்தது.
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)
Post by: Sadham on January 22, 2026, 08:49:38 PM
ரம்ழானும்  நானும்

   இடைவிடாது 30நாள் நோன்பு வைத்து  காத்திருக்கும் பெருநாள் தான் ரம்ழான். ரம்ழானில்  சிறந்த இரவாக  27th லைலத்துல் கத்ர் இரவு இருக்கும். இரவு மிகச் சிறந்த தொழுகை  இருக்கும்.
       குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை அணிந்து  இரவு தொழுகைக்குப் பள்ளிவாசலுக்குச் செல்வோம் . பள்ளிவாசல் வண்ண ஒளி விளக்கினால் அலங்கரிக்கப்பட்டு அற்புதமாக காட்சி அளிக்கும்.நான் அந்த வண்ண ஒளிகளை பார்த்து ரசிப்பேன் .கூட்டம் அலை மோதி இருந்தாலும்  தொழுகை நேரத்துல் அவரவர் வரிசையில் நின்று அந்த புனித மிகு இரவின்  சிறப்பு தொழுகை நிறைவேற்றுவோம்.
       அந்த இரவு முழுவதும் திருக்குர்ஆன் உடன் பிரார்த்திப்போம் . பண்டிக்கு 2நாள் முன்னாடி உறவினர்கள் மட்டும்  அல்லாமல் ஏழை ,எளியவர்களுக்கு புது துணி  எடுத்து கொடுத்து மகிழ்வது போல சந்தோஷம் நிறைந்த மாதம்  தான் ரம்ழான் மாதம்.
        எங்க ஊரில் உள்ள அனைத்து   (முஸ்லிம்) சமுதாய மக்கள் அனைவரும் ஒன்று கூடி பெருநாள் தொழுகையை  நிறை வேற்றுவோம் . தொழுகை முடிந்ததும் பிற சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம். மற்றும் நண்பர்களுடன்   வெளியே வந்து, அவர்களுக்காக பிடித்த ஆடை வாங்கி கொடுத்து,உணவு உண்டு மகிழ்வோம் .பின்பு வீடு வந்து சேர்ந்து தோப்புள் கொடி உறவான சமூகம் ,நண்பர்கள் ,வீட்டிற்கு உணவு கொடுத்து மகிழ்வோம். சொந்தம் பந்தம் வீடு சென்று பெரியோர்களிடம் ஆசி வாங்க ஆவலாகக் காத்திருப்பேன்.
         குடும்ப நண்பர்கள் உடன் ஒருவரை  ஒருவர் இனிப்பு ஊட்டி மகிழ்வோம். அதன் பிறகு நண்பர்கள் உடன் ஊர் சுற்றிப் பார்க்க  போறது அளவில்லா   மகிழ்ச்சியைத்  தரும்.மீண்டும் அந்த ரம்ழான்  எப்போ வரும் .... இந்த நாட்கள் இனிய நினைவாக என் மனதில்....
        மகிழ்ச்சி மட்டும் அல்லாமல் எனக்கு எங்க அப்பா அம்மா சொல்லி கொடுத்த விடயம் இந்த ரம்ழான் நோன்புக்கு ஏழை, பணக்காரன்னு சொல்ல கூடாது.அனைவரும் சமம் தான். பெரும் நோயாளியைத் தவிர அனைவருக்கும்  நோன்பு கட்டாயம் ஆக்க பட்டது என்று சொல்லிக் கொடுத்தார் அப்பா.நான் சிறு வயதில்  இருந்தே நோன்பு  வைப்பேன் .மற்றும் என் குடும்பமும் என்னற்ற மழைச்சி உடனும், குடும்பத்தில் சந்தோஷம் ஆகவும் நான் வாழ்கிறேன்.
   இருளும் சோகமும் விலகி வளர்பிறையாய் வாழ்க்கை பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். ஐந்து வேளை தொழுகை என்பது நோன்பு முடியும் வரை அல்ல இந்த உலகை விட்டு நம் உயிர் பிரியும் வரை இனிய ரம்ழான் ....
வருகை வருகை என வரவேற்கின்றேன்
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)
Post by: Sethu on January 22, 2026, 10:03:56 PM
நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எங்கள் கிராமத்தில் ஆண்டுதோறும் ஒரு மாத காலம் விரதம் இருந்து பழனிக்கு நடந்து சென்று பழனி முருகனை தரிசிப்பது வழக்கம் .அவ்வாறு செல்லும் போது தினம்தோறும் சில விதிமுறைகள் .விதிமுறைகளை பின்பற்றி  இறை வழிபாடு செய்ய வேண்டும்.
      தினமும் அந்த விதிமுறைகள் என்னவென்றால் காலை நேரத்தில் மிக வேகமாக தூங்கி எழ வேண்டும். பின்  குளித்துவிட்டு இறைவனை வழிபட வேண்டும் .அதேபோல் மாலையிலும் குளித்து இறைவனை வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதினால் உடல் சுறுசுறுப்பாகவும் மனதில் தெளிவான சிந்தனையும் கிடைக்கும்.
      அந்த நாள் முழுவதும் மிக மகிழ்ச்சியாகவும் ,மிகச் சிறப்பாகவும் இருக்கும். இவ்வாறு ஒரு மாத காலம் விரதம்  இருந்து நானும் எனது நண்பர்களும் பழனி பாதயாத்திரை செல்வோம். இதைப் போல  போன ஆண்டு இறுதியிலும் பாதயாத்திரை செல்ல தயாரானோம் .
      நானும் எனது நண்பர்களும் அப்படி தயாராகும் போது, எனது  தாய் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்று செல்ல தயாரானேன். அவ்வாறு பாதயாத்திரை செல்லும் போது என் நண்பர்களுடன் நகைச்சுவை செய்து கொண்டு முருகன் பாடல்கள் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டு மிக மகிழ்ச்சியோடு செல்வோம் .அப்படி காட்டின் வழி செல்லும் போது வழியில் நிற்கும் கல் கூட பூவாக தெரியும் அதிசயம் .அதிசயத்தை நானும் எனது நண்பர்களும் உணர்வோம்.   சாலையோர இருபுறமும் கண்ணுக்கு அழகான பூக்களும் ,பட்டாம்பூச்சிகளும் அங்கும் இங்கும் ஓடுவது  மிக அழகாக இருக்கும் .அதனை கண்டு கொண்டேன்.   
      எங்கள் பாதயாத்திரை நாங்கள் தொடர்வோம் மிக மகிழ்ச்சியாக ....எங்கள் கிராமத்தில் இருந்து பழனிக்கு 120 கிலோமீட்டர் தூரம் ஆகும் .ஒரு நாள் ஒன்றுக்கு 40 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும் காலையில் 20 கிலோமீட்டர் நடந்து சென்ற பின் ஓய்வெடுப்போம் .அதேபோல் மாலையில் 20 கிலோமீட்டர் நடந்து சென்ற பின் ஓய்வு எடுப்போம் .இவ்வாறு எங்கள் பாதயாத்திரை மூன்று தினமாக தொடரும்.   
     இவ்வாறு நடந்து செல்லும் போது நானும் எனது நண்பர்களும் கோயில்களில்  அன்னதானம் இருக்கும். அந்தக் கோயில்களில் அமர்ந்து மிக மகிழ்ச்சியாக உணவுகளை சாப்பிட்டு மகிழ்வோம். இவ்வாறு செல்லும் போது கிடைக்கும் தின்பண்டங்களை நானும் எனது நண்பர்களும் பகிர்ந்து சாப்பிட்டு கொண்டே எங்கள் பாதயாத்திரை தொடர்வோம். இவ்வாறு செல்வதினால் கால் வலி தெரியாது .நண்பர்களுடன் நடந்து செல்லும் மகிழ்ச்சி மட்டுமே மனதில் நிற்கும் . 
    எப்பொழுது இந்த நாள் வரும் என்று காத்துக்  கொண்டிருப்போம் .எங்கள் கிராமத்தில் நாங்கள் இவ்வாறு மூன்றாம் நாள் முடிவில் பழனியை சென்றடைவோம். பிறகு நண்பர்களோடு பழனி மலையில் அமர்ந்திருக்கும் முருகனை தரிசித்து முருகனின் அருளை பெறுவோம். பிறகு அம்மா அப்பா கொண்டு வந்திருக்கும் வாகனத்தில் அமர்ந்து எங்கள் கிராமத்தை சென்றடைவோம். அங்கு எங்கள் வீட்டில் உணவுகளை சமைத்து முருகனுக்கு விரதத்தை முடிப்போம்.இது எனக்கு மறக்க முடியாத திருவிழா கொண்டாட்டம்....
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)
Post by: Yazhini on January 23, 2026, 06:45:25 AM
  திருவிழா கொண்டாட்டம்:
    அப்பா கடை நடத்திட்டு வந்ததால அதிகமா எங்கும் வெளிய போனது இல்ல.... ஆனா ஆண்டுக்கு ஒருமுறை மாதா கோயில் திருவிழாக்கு கூட்டிட்டு போவாங்க... Bus ல பயணம்.... சந்தோஷமா அம்மா அப்பா அக்கா கூட கிளம்பிடுவேன்... அங்க இருக்குற கடைங்க மற்றும் ராட்டினத்துக்காக.... எப்பவாது கிடைக்கும் வாய்ப்ப தவர விடலாமா??? கண்டிப்பா இல்ல...

அப்பா நேரா கோயில் குள்ள கூட்டிட்டு போயிடுவாங்க...ஆனா நம்ம மனசோ ரங்க ராட்டினதுல சுத்திட்டு இருக்கும். எப்போ டா கோயில விட்டு போவோம் ராட்டினத்துலன்னு ஏறுவோம் ன்னு இருக்கும்.

ஒரு வழியா திருப்பலி ஒண்ணு முடிஞ்சதும் வெளியே இருக்கும் திருவிழா கடைக்கு கூட்டிட்டு வருவாங்க... எத வாங்க எத விடன்னு மனசு அல்லோல் படும்... கண்ணு கடைய முழுசா ஆராஞ்சு வழக்கம் போல ஒரு முடி வச்ச பொம்மை ல போய் நின்னுடும்... கைக்கு வந்த பொம்மைக்கு என்ன என்ன hair style பண்ணலாம் ன்னு யோசிசுட்டே அடுத்து ராட்டினம் தான் 😁...

கூடை மாதிரி இருக்குற இருக்கை... அக்காவும் நானும் ஒண்ணா இருந்தோம். ரெண்டு சுத்து தான் சுத்திருக்கும், அம்மா ராட்டினம் போய்ட்டு வந்து ice cream சாப்டு ன்னு சொன்னத மீறி சாப்ட ice cream தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடுசு... வயத்த பிரட்டிட்டு வர, சரியா மேல போகும் போது கீழ இருந்தவங்க தலையில அபிசேகம் தான்... பாவம் யார் பெத்த பிள்ளையோ... ராட்டினம் சுத்தி முடிச்சதும் அங்க ஏன் நிக்கிறேன்... இறங்குனதும் யார் கிட்டையும் மாட்டாம தப்பிச்சு அம்மா இருந்த இடத்துக்கு போயாச்சு.... அக்காவும் நானும் ஒரே மாதிரியான colour dress ... பாவம் அவ எனக்கு பதிலா மாட்டிகிட்ட... அக்கா இருக்கிறது அப்போ தான் நிம்மதியா இருத்தது... அப்பாட நம்ம தப்பிசோம் 😁

முடி வச்ச பொம்ம, நிறைய பலகாரம், கம்மல், வளையல் கொஞ்சம் பக்தி வருடா வருடம் இதே கத தான்... ஆனா அதுக்கு அப்புறம் ராட்டினம் போய்ட்டு வந்து தான் ice cream 🍨 - இது நகரத்துல திருவிழா ன்னா.... ஊர் பக்கம் கேக்கவே வேணாம்...  ஆனா.....

முழு ஊருமே உறவுமுறைக்குள்ள இருந்தாலும் நகரத்துல பொறந்து வளர்ந்து எப்போவாது ஊருக்கு போற பசங்களுக்கு எல்லார்கிட்டயும் பழகிறது கொஞ்சம் கடினம் தான்... திருவிழா வ தொலைக்காட்சி குள்ள தான் பாக்க முடிது. பல பேர் திருவிழா பற்றி பக்கம் பக்கமா பேசும் போது மனசுக்குள்ள ஏக்கம் அலாதியா இருக்க தான் செய்யுது...

சொந்த ஊர விட்டு நகரமையம் ஆகுதலின் பாதிப்புல இதுவும் ஒன்று 💔

நகர கூண்டு வாழ்க்கைக்கு ஜன்னல் வழி காற்று திருவிழா 😊😊
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)
Post by: Ninja on January 23, 2026, 01:59:48 PM
வருஷத்துக்கு ஒரு முறை நடக்குற குறிச்சிகுளம் திருவிழா. சுத்துப்பட்டு ஊர்ல இருந்துலாம் வருவாங்க. ஏழூரு மக்க சேர்ந்து நடத்துர திருவிழா, ஜே ஜேன்னு இருக்கும். வெளியூர் என்ன, வெளிநாட்டுக்கே போயிருந்தாலும் ஊர்காரங்க குறிச்சிகுளம் திருவிழாக்கு மட்டும் சரியா வந்துடுவாங்க. எங்க சாமி 'திரௌபதி அம்மன்'. துடியான சாமின்னு சொல்லுவாங்க, ஆனா அம்மன் முகத்தை பார்த்தா அவ்வளவு அழகா கருணை பொங்கி வழியும். சின்ன வயசுல ஸ்கூலுக்கு லீவு போட வச்சு கூட்டிட்டு போயிடுவாங்க. கலர் கலரா கடைங்க, விதவிதமா பலூன் பறக்கும், ஊர் முழுக்க கலர் பேப்பர் தொங்கவிட்டிருப்பாங்க. கோலாகலாமா இருக்கும் ஊரே. சின்ன ஊரு தான் ஆனா ஒவ்வொரு வீட்டுக்கும் அஞ்சு பத்து பேரு வெளியூர்ல இருந்து வந்திருப்பாங்க. வாசல்ல வச்சு பொங்கல் வைக்கிறது, சமைக்கிறதுன்னு கலகலப்பா இருக்கும். ஊரு, ஆள் பேரல்லாம் தெரியாட்டியும் எல்லாரும் ஒன்னுமன்னா சேர்ந்து வேலைய பார்த்துக்கிட்டு இருப்பாங்க.

திருவிழாவும் சும்மா கிடையாது, கொடியேத்ததுல ஆரம்பிக்கும் திருவிழா. கொடியேத்தனவுடனே ஊர்காரங்க காப்பு கட்டுவாங்க, அது முடிஞ்சு முத நாளே மொளபாரி போடுவாங்க, கடைசி நாள் அந்த மொளபாரி எல்லாம் மொளைச்சு, முளைப்பாரிக்கட்டு நடக்கும். எல்லாரு வீட்லயும் முளைப்பாரி போடுவாங்க. தினமும் தெருகூத்து நடக்கும், மகாபாரத சொற்பொழிவெல்லாம் நடக்கும். அம்மன் தினமும் வீதி உலா வருவாங்க தேர்ல, பெரிய தேரு கடைசி நாள் தான் வரும். அம்மன் உலா வரும்போது எல்லார் வீட்டு வாசல்லயும் தண்ணி தெளிச்சி கோலம் போட்ருவாங்க. எல்லா தெருமுக்குலையும் நின்னு தீபாரதனை காட்டி விபூதி பூசிவிடுவாங்க. சில வீடுகள்ல தனியா சாமிக்கு தேங்காய் உடைப்பாங்க.

கடைசி நாள் தேர்திருவிழாக்கு முன்னமா தீமிதி திருவிழா நடக்கும். நான்லாம் சின்ன வயசுல தீமிதினா கொத்திக்கிற நெருப்புல நடந்து வருவாங்கன்னு நினைச்சிப்பேன், ஆனா தீங்கங்கும் சாதாரணமில்ல கொழுந்துவிட்டு எரியிற தீ மாதிரி தான், கங்கு போடும்போதே அனலடிக்கும். அந்த தீமிதியும் மொட்ட வெயில்ல தான் நடக்கும். படத்துல காட்ற மாதிரி மெதுவாலாம் நடந்து வந்துட்டு இருக்கமாட்டாங்க. திபுதிபுதிபுன்னு ஓடிவருவாங்க அந்த பக்கத்துல இருந்து இந்த பக்கத்துக்கு. சின்ன பசங்களை பார்க்க கூடாதுன்னு சில சமயம் வீட்ல இருக்கவங்க இழுத்துட்டு போயிருவாங்க.

அப்புறம் வரும் பாருங்க இந்த திருவிழாவோட ஹைலட்டே கோவில் பக்கத்துல இருக்கிற க்ரவுண்ட்ல பெரிய சிலை மாதிரி செம்மண்ண புடிச்சி வச்சிருப்பாங்க படுத்த வாக்குல, சும்மா சின்ன செலயெல்லாம் இல்ல ரொம்ப பெருசா புடிச்சி வச்சிருப்பாங்க. பார்க்கவே பயங்கரமா இருக்கும்.  இத நாங்க அரவான் களபலின்னு சொல்லுவோம். ஊர் கூடி பொங்கல் வச்சு முடிச்ச அப்புறம், அரவான் பலி கொடுக்கிறது நடக்கும். சின்ன பசங்க பார்க்க கூடாதுன்னு தான் சொல்லுவாங்க ஆனா நாம என்னைக்கு கேட்டிருக்கோம். பெரிய சாமி அரிவாள வச்சு அரவான் மேல இருக்க கோழிய வெட்டி அரவான பலி கொடுத்து அதுல ரத்த சாதத்த பிசைஞ்சு சுத்தி இருக்க எல்லார் மேலயும் வீசுவாங்க.

அந்த களபலிய பார்க்கவே கூட்டமான கூட்டமா இருக்கும். பக்கத்துலயே ஏரிக்கரை வேற, இளந்தாரி பசங்கள்லாம் மரத்துமேல ஏறி உட்கார்ந்துட்டு பார்ப்பாங்க, சின்னபசங்கள்லாம் அம்மா, ஆத்தா புடவைக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு பார்ப்பாங்க. பூசாரி சாமியாடுறத பார்க்கவே பயங்கரமா இருக்கும். அப்புறம் ஊர் பொம்பளைங்கள்லாம் முளைப்பாரி தூக்கிட்டு வந்து கோவில்ல பொங்கல் வச்சு சாமி கும்பிடுவாங்க. தேர் வடம் பிடிக்கவும் அவ்வளவு கூட்டமா இருக்கும். ஆடி அசஞ்சு வர்ர தேர மாதிரி மனசும் இதையல்லாம் அச போடுது.
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)
Post by: Vethanisha on January 23, 2026, 04:47:30 PM
திருவிழா

திருவிழா கொண்டாட்டம் என்றாலே  எனக்கு என் சின்ன வயசு ஞாபகம் தான் வருது.
வீட்டுக்குப் பக்கத்துலே நடந்து  போகுற தூரத்துலே கோவில் . என் நாட்டுலே இப்படி எல்லா வசிப்பிடத்துலயும் அமையாது.
வலது பக்கம் போன அழகா கருமாரியம்மன் வீற்றிருக்க , அருகே சீன ஆலயத்தில் குர்ணியம்மா இருக்க இடது பக்கம் பள்ளிவாசல் என மொத்த ஆசிர்வாதமும் நிறைஞ்ச ஊர் எனது . இதுவும் கடவுள் கொடுப்பினை  தான் அம்மா அடிக்கடி சொல்வாங்க . அப்பா சிரிச்சிட்டே மழை வெயில்ன்னு போராடி வீடு வாங்குனது நானு ஆனா பாராட்டு கடவுளுக்கானு அம்மாவ சீண்டி கேலி பண்ணுவாரு.

அப்பா பொதுவா எங்களை எந்த ஒரு திருவிழாக்கும்  சட்டுனு  அழைச்சிட்டு போக மாட்டாரு .
கோவிலே வசிப்பிடம் , கடவுளே உறைவிடம் அப்படி வாழ்ற அம்மாவுக்கும்  எல்லாமே உன் செயலின் வெளிப்பாடு தான் , முயற்சியை மட்டும் நம்பு என்று பகுத்தறிவு பேசுகிற அப்பாவுக்கும் இடையிலே   ஐயோ ! இந்த முறையும்  திருவிழா கோவில் சாப்பாடு போய்டுமா என்று கவலை படுற குட்டி பசங்க நாங்க .

திருவிழா என்றால் கோவிலில்   அடிக்குற உறுமி மேளம் வீடு வரைக்கும் கேட்கும் , அப்படியே ஏக்கத்தோடு அப்பாவே பார்ப்போம் .
சிரிச்சிட்டே போயிட்டு வாங்க மா சொல்வாரு . உடனே தீபாவளிக்கு எடுத்த சட்டையைப்  போட்டுக்கிட்டு நேரா என் தோழி மலர் வீட்டுக்குப்  போய்ட்டு அவளையும் என் பட்டு பாவாடை வண்ணத்துலே உடை அணியச்  சொல்லி கோவிலுக்கு  ஓடியே போவோம்.

சாமி கும்புடறது என்னமோ 10  நிமிடம் தான் . முதல்ல தட்டு தூக்கிக்கிட்டு வரிசையிலே நின்னுடுவோம். அது என்னமோ திருவிழா சாப்பாடுனாலே தனி ருசி. அதோடு கோவிலுக்கு வெளியே போடுற கடைக்குக் கைகோர்த்துட்டு உலா போயிடுவோம் நானும் என் தோழியும்.
எங்க ஊர் திருவிழா சுத்துவட்டாரத்தில் கொஞ்சம் பிரபலம் என்றே சொல்லலாம்.

எல்லா கோவிலிலும் காலையிலே திருவிழா ஆரம்பித்து மதியம் நிறைவிடையும் ஆனா எங்க கோவில் திருவிழாவே மதியம் 2  மணிக்கு தான் ஆரம்பம் ஆகும். ஆத்தங்கரை இருந்து கிரகம் தூக்கி வருவது சாஸ்திரம் ஆனா எங்க கோவில் கிரகமோ சீன கோவில் இருந்து எடுத்து வரப்படும். திருவிழாக்கு 11 நாள் முன்பதாகவே கிரக குடம் சீன கோவிலில் இருக்கும் குரணியம்மா கையிலே ஒப்படைப்பாங்க.  திருவிழா அன்று மேளதாளத்தோடே சீன கோவிலில் இருந்து மீண்டும் அம்மன் கோவிலுக்குத் தூக்கி வருவாங்க . சீன நண்பர்கள் அலகு குத்துறதும் தீமிதி இறங்குறது என கோலாகலம் என்றால் இதுதான் என்று சொல்ற அளவுக்கு இருக்கும் .

இது எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா அமையுறது தேர் வெளியாகும் இரவு நேரம் தான் . தேர் நேரா முதலில் என் வீட்டுக்கு தான் வரும். அம்மா சாமிக்கு சீர் தவிர்த்து உடன் வர எல்லாருக்கும் டீ , காபி கலக்கி தருவாங்க. சாப்பிட ரொட்டி , கடலை இப்படி எல்லாமே இருக்கும் . பாத்தீங்களா சாமி முதல்ல நம் வீட்டுக்குத் தான் வராங்கனு அம்மா அப்பாவே பெருமிதமா பாக்க .
ஏன்னா நான் நல்லவன் மா என்று அப்பா மீண்டும் அம்மாவைச் சீண்டுவாரு. என் கையிலே 100  ரிங்கிட் கொடுத்து உண்டியிலே போடுமா என சொல்லி அப்பா அவர் வேலையை பாக்க போக நானும் என் அக்கா அண்ணாவும் தேருடன் நடக்க  ஆரம்பிப்போம்.
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)
Post by: Tejasvi on January 23, 2026, 10:43:06 PM


திருவிழா : தேர்த்திருவிழா
==================

திருவிழான்னு சொன்னதும் எனக்கு எங்க ஊரு தேர்த்திருவிழா தான் நினைவுக்கு வருகிறது.

அது சிவசைலநாதருக்கும் பரமகல்யாணி தாயாருக்கும் நடக்கும் திருமணவிழா தான். 3 ஊருக்குள் நடக்கும் திருவிழா அது. மாப்பிள்ளை ஊரு சிவசைலம். பெண் ஊரு கீழ ஆம்பூர் ன்னு ஒரு சிறிய கிராமம். திருமணம் நடப்பதோ ஆழ்வார்குறிச்சி என்ற கிராமம்.

மாப்பிளை அழைப்பு, பெண் அழைப்பு, திருமணம். பெண் மறுவீட்டுக்கு போவது என்று பல நாட்கள் நடக்கும். எனக்கு என்னமோ சாமீ கூட்டம் எல்லாம் கண்ணுக்கு தெரியாது. என்னுடைய தாத்தா  வருடத்திற்கு 2 முறை புதிய உடுப்பு எடுத்து தருவாங்க. ஒன்று தை பொங்கல், மற்றும் ஒன்று இந்த தேரோட்டத்துக்கு தான். அதிலும் இந்த திருவிழா நமது பள்ளிக்கூடம் கோடை விடுமுறையில் தான் வரும். அதனாலே செம மகிழ்ச்சிய இருக்கும்.

எனக்கு அந்த தேரோட்டத்தில் நிறைய பிடிக்கும். அதிகாலையில் 6.30 எழுந்து, புது ஆடை எல்லாம் போட்டுட்டு  ஓடுவோம். எங்கள் வீட்டுக்கும் கோவிலுக்கும் குறைந்தது 2 km இருக்கும்.  ஓடி போய் சாமி எல்லாம் கும்பிடுறோமோ இல்லையோ. ஆண்டு முழுவதும்.. பள்ளி சீருடையில் பார்த்த என் சக தோழியர்களை வண்ண வண்ண உடையில் பார்க்க போறேன்ன்னு வானளாவிய சந்தோசம் இருக்கும் .

4 தேரடி வீதியில் நிறைந்து வழியும் கூட்டத்தில், என்னோட நண்பர்கள் ஒருவர் ஒருவராக தேடி கண்டு பிடித்து பேசுவதில் அப்படி ஒரு திருப்தி இருக்கும். அதிலும் என் கண்கள், எப்போதுமே படிப்பை பாதியில் விட்டு போன தோழியர்களை தான் அதிகம் தேடும். எங்கள் ஊருல  பொண்ணுகளை அவ்ளோவா படிக்க வைக்கமாட்டாங்க. சிறுவயதிலே திருமணம் செஞ்சு வச்சுருவாங்க.  அப்படி திருமணம் ஆனா என் தோழிகள் அவளின் குழந்தையை என் கையில் கொடுத்து அத்தை பார் அத்தை பார்ன்னு சொல்லும் போது, சிரிப்பாகவும் லேசாக மனமும்   கனத்துதான் போகும்.

அடுத்து என் மனம் அலைந்து தேடுவது.. நீர் மோர் தான்... மோர் எங்கே பெரிய பெரிய அண்டாவில் வச்சு கொடுக்கிறாங்கன்னு தேடி தேடி போய்.. ஒரு செம்பு நிறைய வாங்கி குடிச்ச தான் தேரோட்டம் வந்த திருப்தி வரும்.  அதுக்கு பிறகு. என்னோட தாத்தாவின் கல்லூரி. எனது தாத்தா வேலைபார்க்கும் கல்லூரி இந்த ரதவீதியில் தான் இருக்கிறது.

அங்கே குடுகுடுன்னு ஓடி போய். college canteen ல லட்டு பாதுஷா எல்லாம் வச்சு இருப்பாங்க.. கைக்கு இரண்டு எடுத்துட்டு.. ஓடிருவோம்.. காசு எல்லாம் கொடுக்க மாட்டோம்.. அப்படி ஓடுவதில் ஒரு சந்தோசம். அதன் பிறகு ஒரு ஒரு வகுப்பாக போய் எங்களின் பெயர்களை.. அங்கே இருக்கும் கரும்பலகையில் முத்திரை பதித்து விட்டு மறுபடி.. கோவிலுக்கு திரும்புவோம்.

அதற்குள் சாமீ தேர் நிலைக்கு வந்து இருக்கும். அம்மன் தேர் இழுக்க பெண்கள் எல்லாம் வரிசை கட்டி நிப்பாங்க.  நானும் கூட்டத்துக்குள் நுழைத்து தேரின் வடத்தை பிடித்துக்கொள்வேன் ரொம்ப பெருமையாக. ஆனால் இந்த போலீஸ்காரர்  போ போ சின்னப்புள்ளையெல்லாம் பிடிக்க கூடாது ஓடி ஓடி ன்னு விரட்டிருவாங்க..

நானும், சரி போங்க போலீஸ் அண்ணா ன்னு சொல்லிட்டு ஓடி போய் அடுத்த வேலை பார்க்க போயிருவேன். அது வேற ஒன்னும் இல்லை..  தேர் நிலைக்கு வரும் போது அதே பார்த்து ஓஒ ன்னு கைகள் தட்டி ஆரவாரம் பண்ண.. ஒரு வசதியான இடம் தேடுற வேலை  தான்.

தேர் நிலையத்தில் சரியாக கொண்டு வந்து தேரை நிறுத்தவும்.. பூ போட்டு கைதட்டி முடித்தவுடன். அடுத்து எங்கே ஓடுவோம் தெரியுமா? மிட்டாய் பெட்டி வாங்க தான். தாத்தா கைய பிடிச்சுட்டு..   தாத்தா சீவல் 1kg தாத்தா பூந்தி 1 kg கைநிறைய பலகாரம் வாங்கிட்டு வீறுநடை போட்டு வீடு வந்து சேர்வோம்.  தேர்த்திருவிழா மறுநாள் சித்திரை விஷு... அதற்குரிய பூ பழங்கள் எல்லாம் அங்கேயே என்னுடைய ஆச்சி அங்கேயே வாங்கிட்டு வருவாங்க.. எல்லோரும் சந்தோசமாக வீடு வருவோம்.

வருடங்கள் பல கடந்தாலும், அந்த தேரோட்டம் கூட்டத்தின் சந்தோச கூச்சல், தேரினை இழுப்பவர்களுக்கும், பின் சக்கரத்துக்கு பெரிய தடி.. போடுபவர்களை உற்சாக படுத்தும் விதமாக எழுப்பப்படும் "நகரம்(முரசு)" ஒலியும் சரி.. இன்றும் என் நினைவில் நீந்தி கொண்டு தான் இருக்கின்றது..