FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Luminous on January 01, 2026, 03:17:51 PM

Title: மௌனத்தின் நிழலில் உருகிய மன்னிப்பு
Post by: Luminous on January 01, 2026, 03:17:51 PM

வர இயலாத அந்த இரு சந்திப்புகள்
நாட்களின் குறையல்ல நண்பா,
என் நெஞ்சின் ஆழத்தில்
நிழல்போல் படிந்த புண்கள்…
முதல் தவறின் வாசலில்
நீ தந்த
“பரவாயில்லை” என்ற ஒரே சொல்,
வார்த்தைதான்
ஆனால் என் மனத்துக்குப்
பெரும் மருந்து…
இரண்டாம் தவறு
வேண்டுமென்ற விலகலுமல்ல,
அலட்சியத்தின் அவமானமுமல்ல,
கடமைகளின் கரங்கள்
என்னைச் சங்கிலிபோல்
பிடித்துக் கொண்டதால்
UC வர இயலவில்லை…
மன்னிப்பு உரைக்க வந்த
என் நாவின்மேல்
நீ போர்த்திய மௌனம்,
அச்சொல்லாத சொல்லே
என் உள்ளத்தை
அதிகமாய் சிதைத்தது…
புத்தாண்டு பிறந்த நாளிலும்
உன் கண்களை நோக்கி
வாழ்த்து உரைக்க இயலாத
அந்த நொடி,
என் மனத்தின்
அமைதியையே கலைத்தது…
இதனை
என் குற்றவுணர்வின் சுமையாகவும்,
என் புத்தாண்டு வணக்கமாகவும்
ஏற்றுக்கொள் நண்பா…
இந்த வருடம்
உன் எண்ணங்கள் எல்லாம்
நன்மையின் மலர்களாய் மலர,
உன் நடைபாதைகள்
ஒளியின் அருளால் நிறைய,
கடவுளிடம்
நிசப்தமாய் வேண்டுகிறேன்…
இப்படிக்கு,
தவறுகளால் வலித்தாலும்
நட்பின் நெறி விட்டு
விலகாத
உன் தோழி…
LUMINOUS 💜💚💛🧡😇🙏