FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Ninja on December 29, 2025, 09:19:52 AM
-
ஒரு காலையில்
எழுந்தவுடனே நினைவுக்கு வந்த உன்னை
மீண்டும் நினைவுகளின் அறைகளில் நிரப்ப
நம் குறுஞ்செய்திகளை
மீள்வாசித்து கொண்டிருக்கிறேன்.
தேட முடியாத தூரத்திற்கு
சென்று விட்டவன் நீ.
இந்த கடிதங்களிலாவது
எங்கேனும் ஓர் இடத்தில்
தென்பட்டு விடமாட்டாயா
என்று ஒவ்வொரு வரியிலும் தேடுகிறேன்.
எல்லா வார்த்தைகளிலும்
நீ நிரம்பி இருக்கிறாய்;
ஆனாலும்
உன்னை கண்டடைய முடியவில்லை.
நம் கடிதங்களில்
புத்தகங்கள் இன்னும்
உரையாடிக் கொண்டே இருக்குமா? திரைப்படங்கள் இன்னும்
வாழ்ந்து கொண்டே இருக்குமா?
இசைக்கோர்ப்புகள் இன்னும்
ஒலித்துக் கொண்டே இருக்குமா?
நீ விட்டுச் சென்ற
ஒரு செண்பகப் பூவின் வாசத்தை
இன்னும் நான் அறிந்திருக்கவில்லை.
நீ காட்டிச் சென்ற அந்தக் குன்றின் முகடு
எந்தத் திசை என
இன்னும் வழி தெரியவில்லை.
தொலைத்துவிட்டேன் உன்னை. ஆனால்
தொலைதல் ஒரு வரம்.
தொலைந்து போவதென்றால் கூட உன்னைப் போல
தடயமின்றி தொலைந்து போக வேண்டும்.
என் இருப்புகளின் அடையாளங்களை
இங்கேயே விட்டுவிட்டு
எங்ஙனம்
நான் உன்னைப் போல தொலைந்து போவேன்?
நீ வரப்போவதில்லை என தெரிந்தும் உனக்கான கடிதங்கள்
எழுதப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.
தொலைந்தாலும்
என் நினைவுகளில்
உன்னை மீட்டெடுப்பேன் நான்.
தொலைந்தாலும்
உன் கடிதங்களில்
உன்னை மீட்டெடுப்பேன் நான்.
நீ தொலையத் தொலைய
உன்னைத் தேடிக் கொண்டே இருப்பேன் நான்.
தொலைதல் ஒரு வரம், பேட்ரிக்.
For Patrick.