FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 22, 2025, 03:24:38 PM

Title: "இயற்கை" !
Post by: joker on December 22, 2025, 03:24:38 PM
மழை நின்று
காற்று மெல்ல வீசி, விலகிச் செல்கிறது,
வானவில் நிறங்கள்
மங்கத் தொடங்குகின்றன

நதியின் ஆழத்தில்
தூய்மை இல்லை,
வறண்ட இரத்தம்போல்
நீரோடை ஓடுகிறது.

மரங்கள் தடுமாறுகின்றன
இலைகள்
கண்ணீராக உதிர்கின்றன.

பறவைகள்
திசை அறியாமல்,
பறக்க இயலாமல்
தவிக்கின்றன.

மேகங்கள்
சுமையால் சுருங்குகின்றன,
இடி மின்னல்கள்
அழுதுகொண்டிருக்கின்றன.

காட்டை அழித்து
நாம் கட்டிய
வீடுகள்,
தண்ணீரில் அடித்து செல்லும்போது
ஒரு காடு எரிந்து
முடிந்தபின் பிறக்கும்
அந்த மௌனம்
இனி நம்மை
ஆறுதல்படுத்தாது.

இயற்கையின்
ஒவ்வொரு அன்புத் தொடுதலும்
இனி
ஒரு எச்சரிக்கையாக
மாறுகிறது.

பூமித்தாய்
அவள் சுமக்கும்
பதற்றம்,
நம்மை
அச்சம் கொள்ளச்செய்கிறது

இனி ஒருமுறை
நாம் திரும்பி பார்க்க கூடுமோ

ஒரு தளிரின்
கண்ணீரும்,
ஒரு காற்றின்
அமைதியான பாதைகளும்
அவளின்
இதயத் துடிப்பே
என
உணர்வோமே



***Joker****