FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 15, 2025, 01:47:37 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 391
Post by: Forum on December 15, 2025, 01:47:37 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்

1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025 (https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/rules2.png)

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 391

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/391.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 391
Post by: Luminous on December 15, 2025, 10:31:32 PM
நிலவே… நான் இன்னும் காத்திருக்கிறேன்

இந்த இரவு
மிக நீளமாக இருக்கிறது, நிலவே…
நீ வானத்தில் மெதுவாக நகர்கிறாய்,
நான் மட்டும்
ஒரே இடத்தில்
உயிரோடு உறைந்திருக்கிறேன்.

அவன் போன நாள்
நான் என் நிழலை
இழந்த நாள்.
அவன் சிரிப்பு இல்லாத
இந்த வீடு
என்னை தினமும்
அன்னியமாக்குகிறது.

போர்க்களத்தில்
அவன் எதிரியை பார்க்கிறான்…
இங்கே
நான் ஒவ்வொரு நிமிஷமும்
என் பயத்தை பார்க்கிறேன்.

ஒரு செய்தி…
ஒரே ஒரு செய்தி…
“உயிரோடு இருக்கிறேன்”
என்ற ஒரு வார்த்தைக்காக
என் உயிர்
எத்தனை இரவுகளை
தாண்டிவிட்டது தெரியுமா?

நிலவே…
நீ எல்லா வீட்டுக்கும்
ஒளி தருகிறாய்.
என் வீட்டுக்கு மட்டும்
ஏன் இப்படிப்
பார்வை தவிர்க்கிறாய்?

அவன் இல்லாமல்
என் கைகள் நடுங்குகின்றன.
அவன் இல்லாமல்
என் இதயம்
ஒவ்வொரு துடிப்பையும்
வலியோடு செய்கிறது.

தேநீர் கையில் எடுத்தால்
அவன் நினைவு.
காற்று வந்தால்
அவன் சுவாசம்.
தூக்கம் வந்தால்
அவன் முகம்.
தூக்கம் போனால்
அவன் இல்லாமை.

நிலவே…
நீ தேய்கிறாய்,
ஆனால் மீண்டும் வளர்கிறாய்.
நான் மட்டும்
ஒவ்வொரு நாளும்
உள்ளுக்குள்
சிறிது சிறிதாக
சாகிறேன்.

அவன் திரும்பி வந்தால் ....
இந்தக் கண்ணீர் எல்லாம்
புன்னகையாய் மாறும்.
இந்த உடல்
மீண்டும்
பெண்ணாகும்.

அவன் வராவிட்டாலும் ....
கேள் நிலவே…
என் வலி
தேசத்தை வெறுக்காது.
அவன் ரத்தத்தில் இருந்த
தேசப்பற்று
என் வயிற்றில் வளரும்
இந்தக் குழந்தையில்
மீண்டும் பிறக்கும்.

நாளை
அவன் போலவே
என் மகனும்
தேசத்தின் அழைப்புக்கு
போனால்,
அன்று நான் அழுவேன்…
ஆனால் தடுக்க மாட்டேன்.

ஏனெனில்
ஒரு பெண்ணின் இதயம்
உடைந்தாலும்,
ஒரு தாயின் மனம்
தேசத்துக்கு முன்
மடங்காது.

நிலவே…
நீ வானத்துக்காக
ஒளிர்கிறாய்.
நான்
இந்த நாட்டுக்காக
உயிரோடு எரிகிறேன்.
LUMINOUS 👨‍✈️💜🤰🌚
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 391
Post by: Clown King on December 16, 2025, 12:10:20 AM
கார் மேகங்கள் வானம் முழுதும் கம்பளம் விரிக்க
அதில் வைரங்களை தெளித்தது போல நட்சத்திரங்கள் ஜொலி ஜொலிக்க
நடுவில் தேவதையாய் இராகதிராய் நீ மின்ன உன் பொலிவிற்கும் ஈடேது உண்டு

நீயும் துணை இல்லாமல் தனித்து நிற்கின்றாய்
அதேபோல் நானும் உன்னைப் பார்த்து ஆறுதல் கொண்டு உன் அழகை ரசித்து கொண்டிருக்கின்றேன்

நீ தனித்து இருப்பதை பார்த்த பின்பு தான் தனிமை மனிதனுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் பொருந்தும் என்று ஆம் நாம் இருவரும் கடவுளின் படைப்பு தானே
எனக்காவது நீ இருக்கின்றாய்
உனது  அழகை பார்த்துக் கொண்டே எனது தனிமையின் வலியை போக்கிக் கொள்வேன்
நீயோ பாவம் என்னைப் பார்க்கின்றாயா உன்னால் பார்க்க முடியுமா உனது என்ன குமரல்களை
.தனித்துக் கொள்ளத்தான் முடியுமா

உன்னால் முடிந்தது எல்லாம் மற்றவரை இன்புற்று இருக்கவே
உனது குளிர்ச்சியான கதிர் அலைவு கலை கொடுக்க முடியும் நீ இன்புற்று இருக்க ஏதேனும் ஏற்க முடியுமா

தனிமை ஒற்றை பதம்  எத்தனை வலிகள் அத்தனை வலிகளையும். சகித்துக் கொண்டு நீயும் மிளிர தானே செய்கின்றாய் இது நீ பக்குவப்பட்டதின் அடையாளமோ

உன் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்தாலும் எனது என்ன ஓட்டங்கள் எனையும் தாண்டி செல்கின்றதே தனிமையில் விட்டு சென்ற அவனை நினைத்து நினைத்து ஏங்கிக் கொண்டு அல்லவா இருக்கின்றது எனது இதயமும்

எனது தனிமை போகுமா இல்லை
உனைத் தோழியாக்கிக் கொண்டு நீண்டு தான் செல்லுமா காத்திருக்கின்றேன் அவன் வரவுக்காக .....





Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 391
Post by: Yazhini on December 16, 2025, 03:00:36 AM
தொலையாத கனவாய்
தொலைதூர நிலவாய்
சில உறவுகளும்
அதன் நினைவுகளும்...

இருளில் ஒளி தந்து
மீண்டும் இருளில் உரல விடும்...
மின்மினியின் ஒளி போல
சிறுபொழுது ஒளியைப் பரப்பும்...

தேடாத போது அமுதளித்து
தேடும் போது நஞ்சை பரிசளிக்கும்...
மாயம் நிறைந்த உறவு
மனக்காயத்தை ஏற்படுத்திக் கொண்டே மருந்தளிக்கும்...

தேடிராத அன்பை பொழிந்து
அடிமைப் படுத்தியபின் புறந்தள்ளும்...
மனதிடத்தையும் சிறிது அசைத்து
அதில் ஆனந்தம் கொள்ளும்...

சுதந்திர காற்றையும் கொஞ்சம்
சிறைப் பிடித்து அக்களிக்கும்...
தான் என்ற அகந்தையை
அழித்து அதில் பரவசம் கொள்ளும்...

தன்னிறைவு கொள்ளா இச்சைகளை
வேரோடு பிடிங்கி எறியும்...
உருண்டோடும் திங்களையும் உலவும் திங்களையும்
எள்ளி நகையாடும்...

சிறு புன்னகையில் அரும்பி
உரையாடலில் மலர்ந்து மணம் பரப்பும்...
வீசும் மணத்தில் மனதை
பேதலிக்க செய்து ரசிக்கும்...

நிலையற்ற பிடிமானத்தைத் தந்து
தளர்ந்து சரிவதையே எதிர் நோக்கும்
இறுதியில் தீரா தனிமையை
பரிசளித்து பரிகாசிக்கும்

தொலையாத கனவாய்
தொலைதூர நிலவாய்
சில உறவுகளும்
அதன் நினைவுகளும்...

இருளில் ஒளி தந்து
மீண்டும் இருளில் உரல விடும்...
மின்மினியின் ஒளி போல
சிறுபொழுது மட்டும் ஒளியைப் பரப்பும்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 391
Post by: gab on December 16, 2025, 03:04:50 AM
இரவின் மடியில்
மௌனத்தின் மொழியைத் தழுவி,
நிலவொளியின் வனப்பில்
மிதந்திருந்தாள் அந்த மங்கை.

பொலிவுடன் ஜொலித்த நிலவு,
அவள் வெளிர் முக அழகை
நினைவூட்டியது…

காற்றின் சலசலப்பே
அவள் சிந்தனையை கலைக்குமோ என
மென்மையான ஸ்பரிசமாய்
தீண்டிச் சென்றது.

இரவின் காரிருளைத் துடைத்து,
ஒளியால் அரவணைக்கும்
பால் நிலவின் குளிர்ந்த உள்ளம்
கொண்டவள் அவள்.

நிலவின் கறைகள் போல,
அவள் மனதிலும்
சில காயவடுக்கள் உண்டு…
ஆனாலும் ஒளிர்வதை
அவள் ஒருநாளும்
நிறுத்தியதே இல்லை.

எத்தனை நட்சத்திரக் கூட்டங்களுக்கு
நடுவே இருந்தாலும்,
வானத்தின் வட்டப் பொட்டு போல
தனித்து தெரிவாள்
அத்தனை கூட்டத்திலும்.

எத்தனை இடர்கள் வந்தாலும்
அவைகளை சமாளிக்க எனது
இடக்கையே போதுமென்ற உறுதி கொண்டு,
ஆரவாரம் இல்லாத வெற்றித்திருமகளாய்
உலா வருபவள் அவள்

எத்தனை நாள் இந்த வெண்நிலவு
தனிமையில் வாடிக் கிடக்கிறதோ என,
தேநீர் கோப்பையில் எஞ்சிய
வெப்பம் போல
மௌன மொழி பேசிக்கொண்டிருந்தாள்.

தினம் அவள் வருகைக்காக
எத்தனையோ காத்திருப்புகள்,
தேய்ந்தாலும் தேடச் செய்யும்
அந்த வெண்ணிலவு நிலவு போலத்தான்
இந்த பெண்நிலவும்.


தனிமையின் தோழியாக,
காத்திருக்கும் தரைநிலாவை
விட்டு விலக மனமில்லாமல்
அலைபாய்ந்து கொண்டிருக்கிறது
 வானில் அந்த வெண்ணிலா.

பின்குறிப்பு :

என்னடா இது உருட்டு பலமா இருக்கே
யாரா இருக்கும்னு தானே யோசிக்கிறீங்க?
 
ஆமாங்க ...நீங்க நினைக்கிறது சரிதான்!!!
 
MIND VOICE :
ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும் 
பூசாத மாதிரியும் இருக்கனும்
பக்க பளீர்னு இருக்கணும்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 391
Post by: Thenmozhi on December 16, 2025, 05:14:02 AM
கார்மேகங்கள் விலக,கோடி விண்மீன்கள் நடுவே தவழ்ந்து வரும் வெண்ணிலாவே!
தொலைதூரத்தில் உன் புன்னகை ஒளிவீசி இரவின் இளவரசியாய் அலங்கரிக்கின்றாய்!
மாடியில் இருப்பவனையும், குடிசையில் இருப்பவனையும் இரசிக்க வைத்து மகிழ்விக்கின்றாய்!
குழந்தைக்கு சோறு ஊட்ட,காதல் மொழி பேச,கூட்டாஞ்சோறு உண்டு மகிழ எம்முடன் இருக்கும் தேவதை நீ வெண்ணிலாவே!

நிலாவே உன் ஒளியில் கல்வி கற்ற மகான்கள் ஏராளம்!
நிலாவே கொஞ்சம் நில் !உன்னை வர்ணிக்கும் போது உன்னை விட பேரழகி தென்படுகிறாளே என் கண்களில்!

நிலவின் ஒளி முகத்தில் பிரகாசிக்க,
கார்மேக கூந்தல் காற்றில் அசைய,
வெண்ணிற ஆடை அணிந்து  சமாதான ஒளி விளக்காய்,
அஞ்ஞான இருளை நீக்கி மெஞ்ஞான ஒளியை தேடி,
கரங்களில் நூல் ஏந்தி கல்வியறிவு இயற்றுகின்றாய் பெண்ணே!
விளக்கின் ஒளியில் கல்வி பயில தொடங்கினாய் மின்சாரம் இல்லாத காலத்தில் பெண்ணே!
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்று கூறியதை முறியடித்து விட்டாய் பெண்ணே!
விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை சாதித்துக் கொண்டு தான் இருக்கின்றாய் பெண்ணே!

அமைதியான மனசு வேண்டும் என்று தான் நிலாவை தேடி மாடி வந்தாயோ?
அவள் உன் கூடவே உலா வருவாள் நிழலாய் அன்புத் தோழியாய்!

புத்துணர்ச்சி தரும் தேநீரை அருந்தி விடு!
புத்தகத்தில் கற்ற அறிவினை மெருகூட்டிடு!
புது உலகம் படைத்து விடு!-பெண்ணே!

விளக்கு தன்னை அர்ப்பணித்து ஒளி தருவது போல் உதவுவோம் மற்றவர்களுக்கு!
விண்மீன்கள் தொலைவில் இருந்து ஒளிர்வது போல் நேசிப்போம் நம் உறவுகளை!
விண்ணில் வெண்ணிலா பிரகாசிப்பது போல் சாதிப்போம் வாழ்வில்!





Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 391
Post by: Minaaz on December 16, 2025, 08:35:45 AM
நிலா ஒளியில் நிமிர்ந்து நிற்கும் அழகில் நீந்தும் பதுமை அவள்..
அவளைப் பாடுவதா??!!
அவளின் அழகை உருவகப்படுத்தும்
நிலாவப்பாடுவதா!!??..

கண்ணைக் கவரும் கண்மணியோ 
எத்துனை கனங்களை சுமந்தவளோ!??
தாகித்து தலை நிமிர்ந்து நிலவோடு நியாயம் பாடுகிறாள்...!?

நீந்தும் நிலவின் கதிரில்
அருகிருக்கும் அனல் விளக்குகளும்
தலை கவிழ்ந்து வெட்கத்தோடு மாது அவளின் அருகிருந்திற்று....

வலைந்தோடும் அருவியைப் போல்
அழகிய கார் குழலோடு காத்திருக்கும்
அழகிய சிலையாய் அவளின் ஏக்கத்தில்
தனிமையின் தாக்கங்கள் தலை தூக்கியிருக்கிறது..

நிலாவை தன் துணையாய்
தன் காவலாய் நம்பும் அவள்
என்னதான் தூது அனுப்புகிறாள்!??
என்ற எண்ணங்களும் என்னில் எழாமல் இல்லை..

இரவின் அழகும்
பெண்மையின் புனிதமும்
ஒத்துதலாய் ஒன்றாய் அடங்கியிருக்கும் அற்புதம்..

எதைத்தான் சொல்வது
நானும் தனிமையை தனதாக்கி
அண்ட வெளியில் உலாவும் வெள்ளைப் பந்துக் கோலத்துக்காய்
காத்திருந்து தன் அவலத்தை கொட்டித் தீர்த்தவள் தானே!!??

நிலவு நிலைமை அறிந்தது என்னவோ
அவள் மௌனத்தின் மொழி மட்டும் தான்…
சொல்ல நினைத்த வலிகள்
கண்ணீராய் கரைந்து
ஒளிக்குள் ஒளிந்தன…

தனிமை கூட அவளை
அரவணைக்க மறந்து
அவள் அருகே உறைந்து நின்றது…
காத்திருப்பு ஒரு பழக்கமாய்
நம்பிக்கை ஒரு சுமையாய்
நெஞ்சில் அடங்கியது…
நிலாவிடம் தூது அனுப்பியவள்
பதில் வராத இரவுகளை
எண்ணிக் கொண்டே முதிர்ந்தாள்…

அழகு இருந்தும்
ஆறுதல் இல்லாத
ஒரு பெண்ணின் இரவு அது… 🌑💔
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 391
Post by: SweeTie on December 16, 2025, 08:50:18 AM

இதோ வந்துவிட்டேனடி 
மென்திரையை  விலக்கி எட்டிப்பார்க்கிறேன்
அவள் கண்கள் வைரம்போல் மின்ன
காத்திருக்கிறாள் என் தோழி
காத்திருப்பில்தான்  எவ்வளவு மகிழ்ச்சி

ஆயிரம் மின்மினிகள் நடுவே
மகாராணிபோல்   பிரகாசிப்பவள்  நான்
ஒளிவிளக்கில் பளிங்குச்சிலையாக அவள்
விண்ணிலே நானும்  மண்ணிலே அவளும்
எப்படி  தோழிகள் ஆனோம் தெரியாது
புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று
 
தினம் தினம்   பேசுகிறோம் 
அவள் உள்ளத்தே  வழிந்தோடும்
காதல் உணர்ச்சிகளை 
ஒளியாமல்   மறைக்காமல்
தேனீரை ருசித்து  அருந்தியபடியே
என்னிடம் கொட்டி தீர்க்கிறாள்

மானசீகமான காதலில்  ஒழிவேது
கண்கள்   விடும்  தூதுகளில்  மறைவேது
இடம் மாறும் மூச்சுக்காற்றுகளில் 
இனம் புரியாத   உணர்ச்சிகளில்
ஊறித் தவிக்கும்  காதல்  இதயங்கள் 
 
சித்திரை மாதத்தில் குயில் பாடுவதும்
மார்கழி மாதத்தில் குளிரில் நடுங்குவதும்
இயற்கையின்  காதல்   
காணுகையில்   நாணத்தில் மூழ்குவதும் 
காணாதவேளை   தேடித்  தவிப்பதும் 
இளம் பெண்ணின்  காதல்

மாலைவேளை  இயற்கையின் மௌனம்
சுகமான   தனிமையில் மீட்டும் நினைவுகள்
வந்து போகும்  சிறு சிறு சண்டைகள்
தொடரும்  ஊடலும்  கூடலும்
காதலுக்கே உரித்தான  மீட்டல்கள்
காலத்தால் மாறாத காதல் பண்புகள்

மேகவண்ணன்  மெல்லிய வஸ்திரத்தால்
என்னை தொட்டுச்செல்கையில்  எனக்குள்ளும்
காதல் தோன்றாமல் இல்லை 
நானும்  ஒரு பெண்தானே! 
காதல்   பெண்மையின் சுகமல்லவா ?
வெட்கித்துப்போகிறேன்  நான்
நிலா நீயுமா ? கேட்கிறாள் என்  தோழி