FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 24, 2025, 07:53:39 AM

Title: உடல் கூறும் எச்சரிக்கைகள்..
Post by: MysteRy on October 24, 2025, 07:53:39 AM
(https://i.ibb.co/TD18w2ZG/570235190-122258133260037466-7393702108792695692-n.jpg) (https://imgbb.com/)

நம் உடல் நம்முடன் தொடர்ந்து தகவல் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி நமக்குத் தெரிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் நிலையான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. இதனை உடலின் Bio Feedback-க்குகள் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
உதாரணத்திற்கு தலைவலி என்றால், உங்கள் உடலின் நீரிழப்பு அல்லது அசுத்தமான குடல் இருப்பதைக் குறிக்கும். தொடர் மூச்சுத்திணறல், கொட்டாவி போன்றவை முளைக்கு அதிக ஆக்ஸிஜன் தேவை என்று எடுத்துச் சொல்பவை. உடல்கூறும் இந்த செய்திகள் நமக்கு ஆரம்பத்தில் சிறிதாகத் தோன்றலாம். அவற்றைப் பொருட்படுத்தாமல், புறக்கணித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டால், பிறகு மிகப்பெரிய சிக்கல்களுக்கு வழி வகுக்கும். உடல் வெளிப்படுத்தும் பொதுவான அறிகுறிகளையும், அதற்கான அர்த்தங்களையும் தெரிந்து கொள்வோம்.
...
#சளி, இருமல், காய்ச்சல்:

உடலில் நுழையும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடவும், அவற்றை அழிக்கவும் முற்படும்போது, நம் உடலின் வெப்பம் உயர்கிறது. இதனால் வரும் காய்ச்சல் நல்லது. ஜலதோஷம், இருமல் வந்துவிட்டால் நாள் முழுவதும் மூக்கை உறிஞ்சிக் கொண்டும், இருமிக் கொண்டும் இந்த சளி பாடாய் படுத்துகிறது என்று நொந்துகொள்வோம். சளி, இருமல் ஆகியவை நம் உடலினுள் இருக்கும் நச்சுக்கள், தூசி, பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றை வெளியேற்றுவதற்கான சிறந்த வழி என்பதை உணர்ந்தால் இனி அதுபற்றி புலம்ப மாட்டோம்.
...
#சருமம் மற்றும் கூந்தல் பிரச்னைகள்:

உங்கள் சருமம் மற்றும் கூந்தல் கூட உங்கள் உடல் ஆரோக்கியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும்.
இவற்றை வலுப்படுத்தக்கூடிய உடலின் அடிப்படை உள் கட்டமைப்பை பராமரிக்காவிட்டால் எவ்வளவு உயர் ரக ஷாம்பூக்கள், சருமப் பராமரிப்பு க்ரீம்கள், லோஷன்கள் என டப்பா, டப்பாக்களாக உபயோகித்து எந்தப் பலனும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சருமம் பொலிவிழந்து, வறண்டு காணப்பட்டால் உங்கள் உடலுக்கு அதிக தூக்கம், நீர், ஊட்டச்சத்துக்கள் தேவை அல்லது உங்கள் குடலுக்கு கூடுதல் கவனிப்பு தேவை என்று பொருள். கூந்தல் வெடிப்பு, முகத்தில் பருக்கள் தோன்றினால் அதற்கு ஹார்மோன்களின் சமநிலையின்மை அல்லது மனஅழுத்தம் காரணங்களாகின்றன.
...
#ஆற்றல் குறைவு:

எப்போதும் உடல் சோர்வாக இருப்பதை உணர்ந்தாலோ அல்லது அடிக்கடி காபி அருந்தும் பழக்கம் கொண்டிருந்தாலோ, உங்கள் உடலுக்கு போதுமான தூக்கம் மற்றும் நீர் பற்றாக்குறை இருக்கலாம். மேலும், உங்கள் மனதில் எப்போதும் எதிர்மறை எண்ணங்களை ஓட விட்டுக்கொண்டே இருப்பவராக இருக்கலாம். இவை உங்கள் ஆற்றலை உறிஞ்சுபவை. காபி குடிப்பதை நிறுத்துவதும், தேவையற்ற சிந்தனைகளை கட்டுப்படுத்துவதும் அதற்கான சிறந்த வழிகள்.
...
#வாய் துர்நாற்றம்:

இரவில் செரிமான மண்டலம் உடலின் நச்சுக்களை வெளியேற்றும் வேலையைச் செய்வதால், காலை பல் துலக்குவதற்கு முன் துர்நாற்றம் வீசும் வாயுடன் எழுந்திருப்பது இயல்பானது. எனினும் அது நாள் முழுவதும் வாய் துர்நாற்றம் நீடித்தால், உங்கள் குடல் ஆரோக்கியத்தை சரி பார்க்க வேண்டும். நாக்கு உட்பட நமது வாய்வழி ஆரோக்கியம், நமது முழு உடல் அமைப்பை எடுத்துக் காட்டும் வரைபடமாகும். தொடர்ந்து இருக்கும் மலச்சிக்கல் கூட குடல் துர்நாற்றம் மற்றும் வாய் துர்நாற்றத்துக்கு வழிவகுக்கும்.
...
#கண்களில் கருவளையம்:

கண்களுக்கடியில் கருவளையம் தோன்றினால் சரியான உறக்கம் இல்லை என்போம். ஆனால், அதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது. இது சிறுநீரக பிரச்னையையும் எடுத்துரைக்கும் அறிகுறி என்பது நமக்குத் தெரியாது. கருவளையத்தை உடனே மேக் அப் போட்டு மறைத்துக் கொள்வது அதற்கான தீர்வாகாது. சிறுநீரக ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வதும் முக்கியம். அதற்காக கருவளையம் இருப்பவர்களுக்கு, ஏதோ பெரிய பிரச்னை என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. சிலருக்கு பரம்பரைத் தன்மைக் காரணமாகக்கூட கருவளையம் வரலாம். ஆனால், பிற்காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதன்மீது சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இதுபோன்ற பல வழிகளில் நம் உடல் நம்மிடம் பேசுகிறது. நாம் அந்த சமிக்ஞைகளை கவனமாகக் கேட்கும்போதுதான், அதை ஒப்புக்கொள்ளவும், ​​நம் உடலுடன் ஒத்துப்போகவும் முடியும்; அதே வேளையில் அதற்காக ஏதாவது நன்மை செய்யவும் முடியும்.