(https://i.ibb.co/5xrdypNP/561344118-122256553760037466-2564755608388858183-n.jpg) (https://imgbb.com/)
காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு வைப்பதில்லை என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை அமையப்பெற்ற மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.
ரொடோடென்ரன் (Rhododendran) என்றழைக்கப்படும் இந்த மரத்தின் அருகில் நெருப்பு சென்றால், பல அடுக்குகளாக அமைந்துள்ள இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கிவிடும். இதனால் இம்மரத்திற்கு நெருப்பினால் அழிவு ஏற்படாது.
பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இம்மரங்கள் பறவைகளைக் கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாசஸ்தலமாக விளக்குகின்றன. பலத்த காற்றினையும் தாங்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் சாறு மருத்துவத் தன்மை கொண்டது.
தமிழில் காட்டுப் பூவரசு எனவும் நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி எனவும் அழைக்கப் படுகிறது. இம் மலர்கள் போரஸ் என்று பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவரால் அழைக்கப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் (நீலகிரி, ஆனைமலை, பழனி, மேகமலை) கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இதனை அழைக்கலாம்.
இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் ரொடோடென்ரன் மரங்கள் காணப்படுகின்றன.