(https://i.ibb.co/4RgzDt2L/558095567-122255266448037466-6197810192872267625-n.jpg) (https://ibb.co/s9JnDRC4)
ஒரு பெரும்படையை வழி நடத்திச் சென்று முன்னால் வழி காட்டிக் கொண்டு போகின்றவனும் தலைவன் தான் (போரின் போது பெரும்பாலும் நம் இந்திய அரசர்கள் இப்படித் தான் இருந்தார்கள்).
அதுவே, தனது சேனைகளை முன்னால் அனுப்பியபடி, 'அவர்கள் சரியான விதத்தில் தடங்களை பதித்துச் செல்கிறார்களா?' என்று நோட்டமிட்டு, அப்படி ஒருவேளை இல்லாத பட்சத்தில் அவர்களை சரியான வழியில் இனம் கண்டு இயக்கித் திருத்துபவனும் தலைவன் தான். இப்படிப் பட்ட தலைவனை ஆங்கிலத்தில் 'நல்ல மேய்ப்பன்'. அதாவது 'Good Shepherd' என்றும் சொல்வார்கள். ஆனால், ஒரு நல்ல தலைவனுக்கு இது மட்டும் போதாது.
எனில், 'யார் சிறந்த தலைவனாக இருக்க முடியும்?' என்று கேட்டால். இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்னர் ஒளவையாரின் வரிகளை கொஞ்சம் பார்ப்போம். அதாவது, ஒளவையாரிடம் சென்று 'உலகில் பெரியது எது?' என்று கேட்கிறார்கள். அதற்கு ஒளவையார் 'இது தான் பெரியது' என்று ஒரே வரியில் சொல்லிவிடாமல், இப்படியாக ஒரு விளக்கத்தை அளிக்கிறார். அதாவது...
"பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன் கரிய மாலோ அலைகடல் துயின்றோன் அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம் அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம் உமையோ இறைவர் பாகத் தொடுக்கம் இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.".
இதன் பொருள், சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஒளவை கூற்றுப் படி 'தொண்டு தான் பெரியது' என்கிறார் ஒளவையார். அதாவது ஒரு நல்ல தலைவன் முதலில் நல்ல தொண்டனாக இருத்தல் வேண்டும். ஒரு நல்ல தொண்டன் மட்டுமே பிற்காலத்தில் நல்ல தலைவனாக இருக்க முடியும். அதன் படி, கிறிஸ்துவ வேதாகமத்தில் மோசஸும், ஜீஸசும் கூட தொண்டு செய்தே மக்களுக்கு வழி காட்டியவர்கள். அதனால் தான் ஆன்மாக்கள் அவர்களிடம் மண்டியிடுகின்றன.
அதுபோல, தொண்டு உள்ளத்துக்கு இன்னொரு உதாரணம் கர்ம வீரர் காமராஜர். அவர் ஒரு 'நல்ல தலைவர்' என்று சொல்லத் தான் வேண்டுமோ?. இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால்,' எனது சுவடுகளை பின்பற்று' என்று சொல்கிறவன் சிறந்த தலைவன் அல்ல. அவன் உண்மையில் சிறந்த தலைவனாக ஆகவும் முடியாது. ஆனால், அதே சமயத்தில், எந்த சூழ்நிலையிலும் தனது எண்ண அலைகள் பாதிக்கப்படாமல், தனது சகாக்களை எப்போதும் நல்வழியில் நடத்துபவனே நல்ல தலைவன்.
தலைவன் என்பவன் குரு. அவர் வழியும் காட்டுவார். வாழ்ந்தும் காட்டுவார். அடங்கிய மனமே குரு.