FTC Forum

தமிழ்ப் பூங்கா => காலக்கண்ணாடி => Topic started by: MysteRy on October 03, 2025, 08:14:20 AM

Title: ஒரு சகாப்தம் முடிந்தது...
Post by: MysteRy on October 03, 2025, 08:14:20 AM
(https://i.ibb.co/xKgv3yJp/558401563-122254764464037466-7352968811473329504-n.jpg) (https://ibb.co/tw2f3S87)

1975ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று, காமராஜர் தமது 73ஆவது பிறந்தநாளை வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடினார். காலை 9 மணிக்கு கேக் வெட்டினார். 11 மணிக்குப் பத்திரிகை நிருபர்கள் வந்து வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு, உடல்நலம் பற்றி விசாரித்தார்கள்.

“நல்லா பசிக்கு..., ஆனா, ஒரே களைப்பா இருக்கு. நாளைக்கு வெளியே போகலாமுனு டாக்டர் சொல்றார்” என்றார் காமராஜர். காமராஜருக்கு உடல்நலம் குன்றியதிலிருந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்தார். அக்டோபர் 1ஆம் தேதி, சிவாஜி கணேசனின் பிறந்தநாள். உடம்புக்கு முடியாதிருந்தும், அதைப் பொருட்படுத்தாமல் அருகில் இருக்கும் சிவாஜி வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துக் கூறிவிட்டு வீடு திரும்பினார்.

காமராஜர் கடந்த ஒரு வார காலமாகவே மிகவும் தளர்வாய்க் காணப்பட்டார். அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தி பிறந்த நாளன்று சற்று இயல்பாயிருந்தார். அன்று காலை, தன்்மைப் பார்க்க வந்தவர்களிடம் சகஜமாகப் பேசினார். பிற்பகல் 1.30 மணிக்கு சாப்பிட்டதும் வழக்கம்போல் தூங்கப் போனார். மாலை சுமார் 3.05 மணிக்கு அவருக்கு உடம்பு முழுவதும் வியர்த்து கொட்டியது. அந்த அறையில் ஏர்கண்டிஷன் போட்டிருந்தும் அவருக்கு வியர்த்தது. காமராஜர் தமது உதவியாளர் வைரவனை அழைத்து டாக்டரைக் கூப்பிடும்படி கூறினார். உடனே, டாக்டர் சௌரிராஜனுக்கும், டாக்டர் ஜெயராமனுக்கும் டெலிபோன் செய்யப்பட்டது. டாக்டர் ஜெயராமனுடன் காமராஜர் டெலிபோனில் பேசினார். கொஞ்ச நேரத்தில் எல்லாம் காமராஜரின் உடம்பு ‘ஜில்’ என்றாகிவிட்டது. உடம்பைத் துடைத்துவிட்டு, போர்வையால் போர்த்திவிட்டார் வைரவன்.

அறையைவிட்டு வைரவன் வெளியே போகும்போது, டாக்டர்கள் வந்தால் தம்மை எழுப்பும்படி கூறிய காமராஜர், “விளக்கை அணைத்து விட்டுப் போ” என்று கூறினார். பத்து நிமிடத்திற்குள், அதாவது 3.15 மணிக்கு, முதலில் வந்திறங்கிய டாக்டர் சௌரிராஜன், காமராஜரின் அறைக்கு விரைந்தார். அவசர அவசரமாக அவரைச் சோதித்துக்கொண்டே, “ஐயோ..! பெரியவர் நம்மைவிட்டுப் போய்டாரே...!” என்று வீறிட்டு அழுதார். தொடர்ந்து வந்த டாக்டர் ஏ.எல்.அண்ணாமலையும் டாக்டர் ஜெயராமனும் காமராஜரைப் பரிசோதித்து பார்த்துவிட்டு, ‘ஆவி போய்விட்டதை’ உறுதிப்படுத்தினார்கள். உடனே, ஆளுநர் கே.கே.ஷாவுக்கும், முதலமைச்சர் மு.கருணாநிதிக்கும் டெலிபோன் மூலம் செய்தியைத் தெரிவித்தார் டாக்டர் அண்ணாமலை. காமராஜரின் உயிர் பிரியும்போது வைரவன், ரங்கராஜன், ராமபத்ரன் ஆகியோர் உடனிருந்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காமராஜர் வீட்டிற்குள் நுழையும்போதே, துக்கம் பெருக்கில், “போச்சே... போச்சே...” என்று கதறி அழுதார். கருணாநிதி அவரை அணைத்துக்கொண்டு தேற்றினார். காமராஜர் கொஞ்ச நாள்களாகவே பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். கடைசியாக அவர் விடுத்த அறிக்கை, காந்தி ஜெயந்தி தொடர்பான வாழ்த்துச் செய்தியாகும். ஆனால், காந்தி பிறந்தநாள் அன்றே அவர் அமரராகி, தாம் மகாத்மாவின் உண்மையான பக்தன் என்பதைக் காட்டிவிட்டார் காமராஜர்!

டாக்டர்கள் வந்து தெரிவிக்கும் வரை, காமராஜரின் உயிர் பிரிந்தது எவருக்கும் தெரியாது. காரணம், அவர் படுத்திருந்த தோற்றத்திலோ, பொலிவான முகத்திலோ எந்தவொரு வித்தியாசமும் தென்படவில்லை. நன்கு அயர்ந்து தூங்குவதுபோல் அவர் இருந்தார்.
“அக்டோபர் 2, திருமலைப்பிள்ளை தெரு வீட்டிலிருந்து காமராஜரின் உடலை ஒரு விசேஷ வாகனத்தில் மாலை 5.30 மணிக்கு ராஜாஜி மண்டபத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு ராஜாஜி மண்டபத்திலிருந்து, மவுண்ட் ரோடு, மர்மலாங் பாலம் வழியாக கிண்டி காந்தி மண்டபத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். காந்தி மண்டபத்தின் இடதுபக்கத்தில் தகனம் செய்யப்படும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பா.ராமச்சந்திரன் அறிவித்தார்.

ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே, கடல்போல் விரிந்து மக்கள் கூட்டம் காணப்பட்டது. மறைந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்த கூட்டம் கூட்டமாய் மக்கள் வந்தவண்ணம் இருந்தனர். இரவு சுமார் 7.30 மணிக்கு, கூட்டம் கட்டுக்கு அடங்காமல் போனதால், போலிஸார் கண்ணீர்ப் புகை குண்டைப் பிரயோகித்தனர்.

அன்று இரவு ராஜாஜி மண்டபம் முழுவதும் மக்கள் முற்றுகையிட்டனர். ஜன சமுத்திரத்தைச் சமாளிக்க முடியாமல் போலிஸார் திணறினர். மூவண்ண தேசியக் கொடியால் காமராஜர் உடல் போர்த்தப்பட்டிருந்தது. 'காமராஜர் மறைவுக்காக அரசு சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்தது. நகரில் சினிமாக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

காமராஜர் உடல் தேசியக்கொடியால் போர்த்தப்பட்டு, பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டது. பிற்பகல் 3.30 மணிக்கு ராஜாஜி மண்டபத்திலிருந்து கிண்டியை நோக்கி இறுதி யாத்திரை தொடங்கியது.
காமராஜரின் உடலைத் தாங்கிய பீரங்கி வண்டி, ராஜாஜி மண்டபத்திலிருந்து மெதுவாக வெளியே வரத் தொடங்கியதும், லட்சக்கணக்கான மக்கள் வாய்விட்டு அழுதார்கள். கைகளைக் கூப்பி அஞ்சலி செய்தார்கள். முதலில் வானம் சிறிது தூறலாகத் தொடங்கி, பிறகு பெருமழையாய்ப் பெய்தது. எனினும், மக்களின் உறுதி குன்றவில்லை. நனைந்தவண்ணம் ‘காமராஜர் வாழ்க!’ என்ற கோஷத்தைப் பலமுறை எழுப்பினர்.
மவுண்ட் ரோடு நெடுகிலும், இருமருங்கிலும் உள்ள பல மாடிக் கட்டடங்களிலும், ஆண்களும் பெண்களும் நிரம்பி வழிந்தனர். பீரங்கி வண்டியில் காமராஜர் சடலம் செல்வதைக் கண்ட ஆயிரக்கணக்கானோர், மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கதறி அழுதனர்.

ஊர்வலத்துக்கு வழிவிடச் செய்வதற்காகக் குதிரைப்படைப் போலிஸார் முயன்றதைப் பொருட்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பீரங்கி வண்டியின் இருமருங்கிலும் சோகமே உருவாக நடந்து சென்றனர். மவுண்ட் ரோடு முழுதும் ஜனசமுத்திரமாகத் தெரிந்தது.. பெரிய பெரிய விளம்பரப் பதாகை, விளக்குக் கம்பங்கள், பால்கனிகள், டெலிபோன் கம்பங்கள் ஆகியனவற்றில் இளைஞர்கள் ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர். தீ விபத்துக்குள்ளான எல்.ஐ.சி. கட்டடமும் இதற்கு விதிவிலக்கல்ல. ராஜாஜி மண்டபத்திலிருந்து புறப்பட்ட காமராஜரின் இறுதி ஊர்வலம், காந்தி மண்டபத்தை அடைவதற்கு 3 மணிநேரம் ஆகிவிட்டது.

3.10.1975 அக்டோபர் 3 அன்று, மாலை 6.35 மணிக்கு, பூதஉடல் நீத்துப் புகழுடல் எய்திய பெருந்தலைவர் காமராஜரின் உடல் தகனம் முழு இராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. சிதைக்குத் தீமூட்டும் முன்பு, பீரங்கிகள் மூன்றுமுறை முழங்கின.
மகாத்மா காந்தியின் உண்மைத் தொண்டர் காமராஜரின் உடல், கிண்டியிலுள்ள காந்தி மண்டபத்திற்கு அருகே எரியூட்டப்பட்டது. காமராஜரின் தங்கை நாகம்மாளின் பெயரன் கனகவேல், சிதைக்கு எரியூட்டினார். அப்போது அங்கே குழுமியிருந்த காங்கிரஸ் ஊழியர்கள் கதறிக் கதறி அழுதனர். காந்தி மண்டபத்தில் ஓர் ஓரமாய் போடப்பட்டிருந்த மேடையில் இருந்தபடி பிரதமர் இந்திரா காந்தி, காமராஜர் சிதைக்குத் தீமூட்டுவதைக் கண்டு கண்கலங்கினார். அருகிலிருந்த காங்கிரஸ் தலைவர்கள் வாய்விட்டழுதனர். இறுதிச்சடங்கு 15 நிமிடங்கள்.. அவ்வளவுதான் அத்துணையும் முடிந்துவிட்டது. ஒரு சகாப்தம் முடிந்தது!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பத்து ஆண்டுகளும், தமிழ்நாட்டு முதலமைச்சராக ஒன்பதரை ஆண்டுகளும் அரசியலில் தீவிர பணியாற்றினார். அதன்பின் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்று, இரண்டு பிரதமர்களைத் தேர்வு செய்யும் ‘பெருந்தலைவர்’ தகுதியைப் பெற்று, ‘வரலாற்று நாயகர்’ ஆனார்.

தென் இந்தியாவின் கடைக்கோடியிலுள்ள விருதுநகர் என்னும் கிராமத்திலிருந்து, தேசத்தின் தலைநகர் புதுடெல்லி வரை சென்றது காமராஜரின் மிக நீண்ட அரசியல் பயணமாகும்.

தமிழ்ச் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்த காமராஜர், ஒரு சாதாரணத் துணிக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்தார். அதிகம் படித்திராத அந்தச் சாமானியர், சகிப்புத்தன்மையுடன் கடின உழைப்பால், தன்னிகரற்ற சேவையால், இந்திய அரசியலில் நிகழ்த்திய அரிய பல சாதனைகள், வரலாற்று ஏடுகளில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. இது, தமிழகத்தில் பிறந்த எந்த ஒரு தமிழருக்கும் கிடைக்காத பெருமையாகும். இது பெருந்தலைவர் காமராஜருக்குக் கிடைத்துள்ள பெருமை!
காமராஜர் இந்த மண்ணுலகைவிட்டுப் பிரிந்தாலும், உலக மக்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும் வகையில், அவரது தனி மனித ஒழுக்கமும், அரசியல் வாழ்வும் அமைந்திருக்கும்.
‘தியாகச் சுடர்’ காமராஜரின் பூதவுடல் மறைந்தாலும், அவரது புகழ் என்றென்றும் மறையாது...