FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on September 21, 2025, 06:03:50 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 383
Post by: Forum on September 21, 2025, 06:03:50 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்

1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025 (https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/rules2.png)

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 383

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/383.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 383
Post by: VenMaThI on September 22, 2025, 10:01:26 PM


எங்கள் ஊர் இது..

எங்க திரும்பினாலும் பசுமை
சுத்தமான காற்றும் சில்லென்ற ஓடையும்
பல பறவைகளின் வீட்டிற்கு உரிமையாளராம் ...
உயர்ந்து வளர்ந்த மரங்கள்....

சுத்தமான காற்றை சுவாசிக்க - இந்த
சின்ன கிராமத்தை தேட வேண்டி உள்ளது..
வானத்திற்கும் எனக்கும் இடையில் பல மேக கூட்டங்கள் -
இவ்வளவு தெளிவாய் இதுவரை கண்டதில்லையே நான்!...

காற்றுடன் கலந்த தூசியும்
வாகன புகையும் என பலவித கலப்படங்கள்
அது தான் காற்று என நம்ப வைத்ததென்னை... நானும் நம்பினேன்
இந்த தூய காற்றை சுவாசிக்கும் இந்த நொடி வரையில்...

அடுக்குமாடி குடியிருப்பில் - எங்கோ ஒரு மூலையில்
அளவெடுத்து செய்த தொட்டியில்
தண்ணீரை நிரப்பி விளையாட சொன்னார்கள்
அது தான் ஏதோ நீச்சல் குளமாம்..

இதோ இங்கே மரங்களின் நடுவே
சில்லென்ற ஓடையில் தெளிவான நீரோட்டம் - சுத்தப்படுத்தவோ
எந்த ரசாயணமும் தேவையில்லை
பல மூலிகையின் நற்குணத்தை கொண்டு உணவே மருந்தென்ற கூற்றிற்கு ஏற்ப....

அள்ளிப்பருகி தாகம் தீர்த்தேன்..
ஒரு சொட்டு நீரை உட்கொண்டதற்கு
"சளி பிடித்து காய்ச்சல் வரும் இதை குடி" என்று.... என்றோ ஒரு நாள்
ஒரு மூடி மருந்தை மூக்கை பிடித்து
அம்மா ஊற்றிய அந்த நொடி என் கண்முன் வந்து சென்றது...

கள்ளங்கபடமற்ற மழலை செல்வங்கள்
அந்நிய மொழி கலக்காத செந்தமிழ் சொற்கள்
ஆயா கொடுத்த ஒரு முருக்கைக்கூட
பகிர்ந்துண்ணும் பாசமான உள்ளங்கள்

"அனைவரும் சென்று ஒளிந்து கொள்ளுங்கள்
நூறு வரை எண்ணிவிட்டு உங்களை தேடி வருகிறேன்" எனக்கூறி
மரத்தில் முகம் பதித்து எண்ணத்தொடங்கினேன்
தாயின் மடியில் முகம் பதித்த உணர்வு

சிறிது காலம் பின்னோக்கி நகர்ந்து
மனக்கதவை திறந்து பார்த்தேன்
பார்க்கிங் லாட்டில் பிள்ளரை தொட்டபோது
துணி அழுக்காகும் என முதுகில் பளாரென அம்மா அடித்த அடி இப்போதும் வலித்தது...

சட்டென திரும்பி பார்க்க
"என்ன ராசா" என பாட்டியும்
"ஏதோ பயந்துட்டான் போல" என தாத்தாவும்
"நாங்க இருக்கோம் ராசா எதுக்கும் பயப்படாதே" என்று ஒன்றாய் கூற
சரி என்று வாய் கூற மனமோ ஓடியது பட்டண வாழ்வின் நினைவுகளை தேடி...

பணத்தின் பின்னால் ஓடும்
பம்பரம் போன்ற வாழ்க்கை சுழற்சி
அம்மா பயமா இருக்கும்மா என கதறினாலும்
"அம்மாக்கு விடுப்பு இல்ல தங்கமே மருந்தை சாப்டுட்டு தூங்கு இரவு வந்துவிடுவேன்" என்ற வார்த்தைகள்..

இப்போது தான் புரிகிறது
இந்த பாலாய்ப்போன மனதிற்கு
கிராமத்து வீட்டை விட்டு பட்டணத்திற்கு வர மறுக்கும்
பல பாட்டன் பாட்டிகளின் மனநிலை என்னவென்று....

மனம் எதையோ நினைத்து ஏங்க
கண்களோ மனதின் மௌன மொழியறிந்து சற்றே கலங்கின...
இங்கயே இப்படியே இன்பமாய் இருந்திடலாம்
மனதின் புலம்பல் காதுகளில் அசரீரியாய் ஒலித்தது

"பணத்தின் பின் ஓடி பிணியுடன் படுக்கையில் விழுவதை விட
உழைப்பில் உருவாகும் உணவை உண்டு
உற்றார் உறவினருடன் உற்சாகமாய்
உயிருள்ள வரை நிம்மதியாய் வாழலாம் போலவே? "

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 383
Post by: TiNu on September 22, 2025, 10:02:20 PM


என் விழிகளில் காண்பது கனவா... இல்லை நினைவா?
மரகத கற்கள் போல மின்னும் புற்கள் நடுவே...
குட்டி குட்டி நட்சத்திரம் போல சிரிக்கும் பூக்கள்..
பூக்கள் மேல் நர்த்தன ஆடும் அழகு பட்டாம்பூச்சிகள்!

என் விழிகளில் காண்பது கனவா... இல்லை நினைவா?
பூமி தாயின் இடையில் ஆடும் மேகலை போல
ஜொலித்து.. கண்ணைப்பறிக்கும் நீரோடை- அந்நீரோடையில்
நீந்தும் மீன்களுக்கு கொடையாகும்..  மரங்கள்!

என் விழிகளில் காண்பது கனவா... இல்லை நினைவா?
கரைகளில் அருகே..  விரிந்து கிடைக்கும்
பச்சை கம்பளத்தில் மேல் - முகத்தில் மகிழ்ச்சி
பொங்க..  ஆடும் மூன்று தேவதைகள்!

என் விழிகளில் காண்பது கனவா... இல்லை நினைவா?
மனித வாழ்க்கையின்... கடமைகளில் எல்லாம்
நிறைவுடன் முடித்துவிட்ட.. சந்தோஷத்தில்..
தன் துணையுடன் பேசி மகிழும் பெரியோர்கள்!

என் விழிகளில் காண்பது கனவா... இல்லை நினைவா?
4 மனிதன் கட்டியணைத்தாலும்.. கைகளுக்குள் அடங்காத
பருத்த வேர்களை கொண்ட தூர்களின் மேல் - ஒய்யாரமான..
கிளைகளில் மேல் ஆடும் சிறு.. சிறு.. இலைகள்!
 
என் விழிகளில் காண்பது கனவா... இல்லை நினைவா?
பல நூற்றாண்டுகள் கண்ட மரத்தின் மீது..
தன் பிஞ்சு கைகள்... கால்கள்... கொண்டு..
தத்தி தத்தி... எற முயற்சிக்கும் குறும்பு சிறுவன்!

என் விழிகளில் காண்பது கனவா... இல்லை நினைவா?
யார் இவள்... இவள் யார்?...  இயற்கை அன்னையே
பெண் உரு கொண்டு... உயிர் பெற்று எழுந்தது..
என் கண்முன்னே அழகாக சிரிக்கும் மின்மினி யார் இவள்!

என் விழிகளில் காண்பது கனவா... இல்லை நினைவா?
இந்த முகம் என் மனதில் நன்கு பதிந்த முகம் ஆயிற்றே...
என் உயிருடன் கலந்தவள் போல் உணர்கின்றேன்..
ஐயோ.. இது என்னவள்.. என் ஆருயிர் மனையாள்!

என் விழிகளில் காண்பது கனவா... இல்லை நினைவா?
அங்கே பட்டம் பூச்சிகள் போல பறப்பது என் மகள்களா?
அங்கே மகிழ்ச்சியில் தனை மறந்து பேசுபவர்கள் என் பெற்றோரா?
இங்கே மரத்தின் மீது ஏற நினைப்பவன் என் மகனா?
இங்கே எல்லோரையும் காத்து நிற்பவள் என்னவளா?

பல ஆண்டுகளுக்கு முன்னே ஓர் விபத்தில்.. - சிக்கி
என் உடலை இழந்து...  உணர்வை இழந்து. அருவமாக நிற்கும்
நான் காணும்... இந்த காட்சியாவும்.. என் குடும்பமா?
என் விழிகளால் காண்பது கனவா... இல்லை நினைவா?
   
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 383
Post by: Clown King on September 22, 2025, 10:40:23 PM

இயற்கை அன்னையின் மடியில் நாம் வாழ்வது சுகம் தானே
எழில் கொஞ்சம் இளவேனில் வேலை
கதிரவனும் இளைப்பாறும் நேரம்
தென்றல் வீசிட அதில் அவள் பரவசம் அடைய கண்களை மூடி புல் மெத்தையில் அந்த நிமிடம் அந்த நொடி நாளைய கவலைகளை மறந்து மனம் மகிழ்வது சுகம் தான்

மழலைச் செல்வங்கள் இயற்கையோடு உறவாடி பூக்களின் நடுவே பூக்களாய் இயற்கை அன்னைக்கு இதைவிட அழகு சேர்க்க வேறென்ன இருக்கின்றது

மரங்களுக்கும் நம் உணர்ச்சிகள் புரியும் நாம் காதலித்தால் நாம் அன்பு காட்டினால் அதை ஏற்றுக் தன்னால் இயன்றதை திருப்பிக் கொடுத்துவிடும் அந்த அன்பை அதை அல்லவோ அந்த சிறுவன் மனமார ஏற்றுக்கொண்டு ஆறத் தழுவும் காட்சி அவன் முகத்தில் ஒளிரும் புன்னகை சுகம் இல்லாத வேறொன்றும் உண்டோ

அமைதியை வேண்டி வந்தவர்களுக்கு ஒரு குறையும் இன்றி அள்ளித் தந்திருக்கின்றாள் இயற்கை அன்னை மிதமான ஓடையின் ஓட்டத்தில் வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஓய்வெடுக்கும் அருமையான தருணம் இதைத்தானே வேண்டி வந்திருப்பார்கள் வாழ்க்கை துணை அருகில் இருக்கும் போது இயற்கை அழகும் நிகர் அல்ல

தனக்கு பிடித்தவள் கையை விடாது உன் அழகை விட இந்த இயற்கை அழகு எம்மாத்திரம் என்ற இயற்கை பொறாமை கொள்ளச் இந்த தம்பதிகளின் வருகை சலிக்காதடி உன்  அழகு என்று வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கு மட்டுமே சுகம் தெரியும்

வெள்ளைப் புறாக்கள் அன்பின் அடையாளம். காதலின் அடையாளச் சின்னம் தன் இனத்துடன் பாதுகாப்பாக அன்பைப் பரப்பி காணும் நெஞ்சங்களுக்கும் சுகம் அள்ளிக் கொடுக்கின்றது

சொர்க்கம் எத்தனை அழகு என்று கண்டதில்லை கண்டுகொண்டேன் சொர்க்கத்தின் அழகே இங்கு
இது போன்ற வாழ்க்கையைத் தேடி
அலையும் சாமானியன் நானும் தான்
Clown kimg 🤡





































Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 383
Post by: Yazhini on September 22, 2025, 10:50:06 PM
இயந்திரத்தனமான இயக்கத்தில்
இதயங்களும் இறுகி போக
கொஞ்சம் கொஞ்சலாக வாரி அணைத்துக்
கொள்கிறாள் இயற்கை அன்னை....

தென்றலாய் நெற்றி வருடி
மழையாய் உச்சி முகர்ந்து
புல்வெளி மெத்தை அமைத்து
மலர்களின் நறுமணத்தால்
கல்லாய் இறுகிய மனமும்
இதமாய் கனிந்து தான் போகிறது
எரிமலையாய் குமுறும் உள்ளமும்
கொஞ்சம் குளிரதான் செய்கிறது...

கடிகார முட்களுடன் சண்டையிட்டு
ஓடி ஓடி கலைத்து போகும்
மனமும் மண்டியிட்டு அடங்கிதான் போகிறது
ஒளி திரைகளைப் பார்த்து பார்த்து
சோர்ந்து போகும் கண்களும்
இயற்கை அழகில் கிறங்கிதான் போகிறது....

ஒய்யாரமாக ஒற்றைக்காலில் நடனமாடும்
வண்ண வண்ண பூக்களுடன்
கொண்டாட்டம் போடத்தான் தோற்றுகிறது....
காற்றோடு கலக்கும் மண்வாசனையில்
குழந்தைத்தனமும் கொஞ்சம் எட்டிதான்
பார்க்கிறது.. குதுக்களிக்கிறது...

பறவையின் சிறகடிக்கும் ஓசையில்
வளைந்து செல்லும் ஓடையில்
முகில்கள் மோதும் முகடுகளில்
மனித சிந்தனை வேட்கையும்
கொஞ்சம் தனிந்துதான் போகிறது....

இயற்கை அன்னையே... நீ
பூமியின் உயிர்நாடி..
சிந்தைக்கு மீண்டும் மீண்டும்
புத்துயிர் தரும் கருவறை...
வாழ்க்கை சக்கரம் நிறைவுறும் போது
இருகரம் விரித்து
அணைத்துக் கொள்ளும் தாய்மடி...
உன்னில் இணைவதே எம் நிறைவு....
அதுவே இப்பிறப்பின் சிறப்பு...


அனைத்து பயணங்களும் இயற்கையோடு முடிவடைகிறது
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 383
Post by: Thenmozhi on September 24, 2025, 02:50:47 AM
    பசுமை நினைவுகளை பகிர்ந்திடுவோம்

முதுமை ஆண்: முகத்தில் சுருக்கம் விழுந்து முடி நரைத்துப் போனாலும் உன் அழகு கூடிகிட்டே போகிறதே என் அன்பே!

முதுமை பெண்: நீயும் முகத்தில் சுருக்கம் விழுந்து, முடி நரைத்து ,பொக்கை வாயால் புன்னகைகிறாயே என் மன்மதா!

முதுமை ஆண்: இந்த இடத்தில் நம் பசுமை நினைவுகள் பட்டாம்பூச்சியாய் என் மனதில்  பறக்கிறதே என் கண்ணே!

முதுமை பெண்: நம் பசுமை நினைவுகளை கவியாக சொல்லுகின்றேன் இரசித்திடு என் மணாளனே!

வானம் நீலமதில் வண்ணமயமான முகில் கூட்டங்கள் பயணிக்கும்!
வானத்தை தொடும் விருட்சங்கள் பரந்த கிளைகளுடன்!
வானத்தில் வட்டமிட்டு ஒலி எழுப்பும் புள்ளினங்கள்!
வண்ண வண்ண நிறங்களில் பறக்கும் பட்டாம்பூச்சிகள்!
வளைந்து ஓடும் ஓடை கரை ஓரம் சிறு சிறு பாறைக் கற்கள்!

பச்சைப் பசேல் என்று வளர்ந்த புற்கள் தரையை அழகுபடுத்தும்!
பச்சைப் புற்களின் இடையே பல வகையான வண்ண நிற மலர்கள் அழகுபடுத்தும்!
பள்ளி விட்டு வீடு வந்ததும் பட்டாய் பறந்து வந்திடுவோம் விளையாடலாம் என்று!
பலமாக நீ மரத்தினை கட்டி பிடித்து மறைந்து இலக்கம் சொல்ல நாங்கள் ஓடி ஒளிந்திடுவோம்!

ஓடை நீரில் கல் எறிந்தும் ,கப்பல் செய்து விட்டும் மகிழ்வோம்!
ஓர் நாள் என் கையை விளையாட்டாகப் பிடித்து என்னை பிடிக்கும் என்றாய்!
இன்றுவரை என் கையை விடாமல் பிடிதிருக்கிறாய் என் ஆசை கணவா!

பருவம் அடைந்த பின் நான் தனியாக இங்கே  வந்து, இயற்கை காற்றை சுவாசிப்பேன்!
பாட்டுகள் பாடி ஆடி மகிழ்வேன்!
பதுங்கி இருந்து நீ என்னை இரசித்திடுவாய்!
பாரு எவ்வளவு பசுமை நினைவுகள் அல்லவா?

இந்த இருக்கையில் அமர்ந்து காதல் வசனம் பேசினோம் அப்போ!
இப்போ கல்யாணமாகி மலரும் நினைவுகளை மீட்டுகின்றோம் அல்லவா!

முதுமை ஆண்: - உன் கவி கேட்டு பசுமை நினைவுகளால் மெய் சிலிர்த்துப் போனேன் கண்மணியே!

முதுமை பெண்:- உன் அருகில் எப்போதும் பிரியாத வரம் வேண்டும் கண்ணா!


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 383
Post by: Ninja on September 24, 2025, 12:49:46 PM
இறுக்கிப் பிடித்திருக்கும்
நிகழ் பிணைகளிலிருந்து
விடுவித்துக் கொண்டு
முரண்களில் இருந்தது விலகி
மலர் நாடி ஓடினாள்
மங்கை ஒருத்தி

மலர் படுகை விரித்திருந்த புல்வெளி
பூவென தாங்கியது அவளையும்.
அன்னையின் தலைதொடுதலாய்
ஆறுதல் அளித்தாள் பூமித்தாய்
அல்லற்படும் மனதை
ஆற்றுபடுத்த ஆதூரமாய் அணைத்தது தென்றலும்
சலசலத்து ஓடிய ஆறு சலன மனதை
ஆசுவாசப்படுத்தி
நித்திய தாலாட்டு பாடியது

மஞ்சள் முகம் மலர
அன்புக் கதை பேசி அமர்ந்திட்ட
இணையர்களின் அழகில்
லயித்து
சிறு வண்டுகளும் ரீங்காரமிட்டு
இன்பராகம் பாடின
சிறுவர்களின் குதூகல சிரிப்பு
மென் கானமாய் மனதை நிறைக்க
அந்நொடியில்
சிறு குழந்தையென மலர்ந்தாள் அவளும்

நியதிகள்,
நிபந்தனைகள்,
நிர்பந்தங்களின் பிடியில்
கேட்பாரற்று கிடைந்த பிரியங்களை
நதி நீரில் கால் நனைத்து கரைத்தாள்.
சிலிர்க்க சிலிர்க்க சேகரித்தாள்
அப்பொழுதின் நினைவுகளை.
முரண்களை மறந்து
மகரந்தங்களின் மணம் நுகர்ந்த
முயல்குட்டி போலானாள்

இறக்கை விரித்து வானளக்கும் பறவையின் சிறகாய் மாறிட
வா வா என்றழைத்தது
பொன்மஞ்சள் வானம்.
நேசக்கதவுகள் வழி யாரேனும்
வந்துவிட மாட்டார்களா
என ஏங்கி தவித்த மனதை
ஓர் யுகமென வாழும் இயற்கையின்
வேர்கள் பற்றிப் படர்ந்தன.
இது தான் விடுதலை
இது தான் விடுதலை
எனக் கூக்குரலிட்ட அவள் மனதினை
திறந்து உயிர் கொடுத்தது
இந்த இயற்கை
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 383
Post by: Madhurangi on September 24, 2025, 02:08:59 PM
முப்பருவங்களின்  சங்கமம்

கட்டுப்பாடுகள் பல உண்டு..
சாது மத பேதம் அறியா  நல்லுள்ளம் கொண்டு..
களைப்பின்றி  ஓடி திரிந்தே,
கவலைகள் இன்றி கதைகள் பல பேசி, 
வாழ்வின் சுமையறியாது புத்தக சுமை மட்டுமே அறிந்த ,
மழலை பருவம் கடந்தேன்..

காதல் கலந்த மனதும் உண்டு..
சமூகத்தின் மடமையை எதிர்க்கும் துணிவும் உண்டு ..
துடிப்பும்  ,துள்ளலும் நிறைந்த..
ஆர்வமும்  கனவுமே உருவான..
மழழை கோலம் களைந்து இளமை பூண்ட மங்கை பருவமும் கடந்தேன்..

இன்று இளமைக்கோலம் உதிர்ந்து போக...
சுருக்கம் கொண்ட கைகளும், பொக்கை வாய் சிரிப்பும்
முதுமையினை பறைசாற்ற..
நெஞ்சம் நிறைந்த அன்பின் வடிவமாக..
அமைதியும் அனுபவமும்  உருவாக..
நீயின்றி துணையேது.. என  தோள் சாயும் முதுமை பருவம் காண்கின்றேன்.. 

பருவங்கள் பல மாறலாம்..
கோலங்கள் பல காணலாம்..
இன்றைய பொழுதை ரசித்து வாழ்வதே..
மானிடராய் பிறந்ததின் அர்த்தமாகும் என உணர்கிறேன்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 383
Post by: SweeTie on September 24, 2025, 07:00:09 PM
கதிரவன்  எழுந்த காலைப்பொழுதில்
காக்கைகள்  கரையும்  சத்தம்
இரவெல்லாம் தூங்க இடமளித்த
மரங்களுக்கு நன்றி சொல்லி 
உணவு தேட  ஆயத்தமாகிறார்கள்
 
இடையை மறைத்துநிற்கும் நூல் ஆடைபோல்
மேலாடையாக மரத்தை  மறைத்து நிற்கும் இலைகள்
ஊடாக  பட்டு தெறிக்கும் சூரிய  கதிர்கள்
மாந்தரை தொட்டு தழுவி நிற்க
புதியதோர்   உற்சாகம்  பிறக்கிறது 

பச்சை பாவாடைக்கு  ஏற்றாப்போல்
நீலத்தாவணி அணிந்து நிற்கும் நிலமகள்
ஓடும் நீரோடையின் குளிர்ச்சியால்
 புத்துயிரோடு  காட்சியளிக்கும் பசும் புற்தரை
கண்ணனுக்கு விருந்தல்லவா?

பிஞ்சு கால்கள்  பஞ்சு பேத்தைமேல்
துள்ளி  விளையாடி  மகிழ்வதும் 
கன்னி அவள்  கண்மூடி  தியானம்செய்ய
காலம் கடந்தாலும் தீராது 
எம் காதலென  அங்கே ஒரு ஜோடி
உக்காந்து பேசுவதும் அழகே

நிர்மலமான   வானும்
பசும்புற்கள்  பதித்த பூமியும்
ஓடையின்  குளிர்ந்த நீரும்
இதயத்தை சுத்திகரிக்கும் காற்றும்
சூரிய கதிர்களின்  உஷ்ணமும்
நம்மை காக்கும் பஞ்சபூதங்கள்
வணங்குவோம்   வழிபடுவோம்
 நற்பயன் பெறுவோம்!!