FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 15, 2025, 08:34:05 AM

Title: கொழுப்பை கரைக்கும் கொத்தவரங்காய்...
Post by: MysteRy on September 15, 2025, 08:34:05 AM
(https://i.ibb.co/YBj30DHM/548194933-1257953779699180-553337068687993676-n.jpg) (https://imgbb.com/)

கொத்தவரங்காய் சுவையான ஓர் உணவு என்பதை நாம் அறிவோம். அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதை இக்கட்டுரையில் காண்போம். கொத்தவரைக் காய்க்கு சீனியவரை என்றொரு பெயரும் உண்டு.
தினமும் உணவோடு கொத்தவரை பசையை சேர்த்து உண்டு வந்ததால் முதல்நிலை சர்க்கரை நோயாளிகள் தமது உணவுக்குப் பின் எடுத்த ரத்த சோதனையில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்து வந்ததை ஓர் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

கொத்தவரையில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தினைக் குறைக்க உதவுகிறது. மேலும் சீரண உறுப்புகள் சீராக இயங்கவும் சீரணப் பாதையை சுத்தம் செய்யவும் இந்த நார்ச்சத்து மிகவும் உபயோகமாக உள்ளது. கொத்தவரையில் பொதிந்து விளங்கும் மாவுச்சத்தும், புரதச்சத்தும் உடலுக்கு நல்ல எரிசக்தியைத் தந்து உடல் இயக்கத்துக்குத் துணை செய்கிறது. அதிக உடல் எடை உள்ளவர்கள் மற்றும் உடல் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு சில பவுண்டுகளாகிலும் உடல் எடையைக் குறைக்கும் வகையில் உதவி புரிவதாக விளங்குகிறது.

கொத்தவரையில் அபரிமிதமான விட்டமின் ஏ சத்தும், விட்டமின் சி சத்தும், விட்டமின் கே மற்றும் போலேட்ஸ் ஆகியன அடங்கியுள்ளன. இவை அத்தனையும் உடல் நலத்துக்கான பல்வேறு மருத்துவ குணங்களைப் பெற்று விளங்குகின்றன. இதில் விட்டமின் சி சத்து மிகுதியாக உள்ளதால் பற்களையும் எலும்புகளையும் பலமுடையதாகச் செய்யத் துணை புரிகிறது. இதில் அடங்கியுள்ள விட்டமின் கே சத்து கர்ப்பிணிகளின் வயிற்றில் உதித்து வளர்ந்து வரும் கரு சீராகவும் வலுவாகவும் வளர வகை செய்கிறது.

கொத்தவரை மலச்சிக்கலைத் தீர்க்க உதவுகிறது. மேலும் பேதியை நிறுத்தவும், வயிற்றுப் போக்கைத் தடுக்கவும், ஐ.பி.எஸ். என்று ஆங்கிலத்தில் குறிக்கப் பெறும் நோய், சர்க்கரை நோய், உடல் பருமன் ஆகியவற்றைக் குறைக்க உதவி செய்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து மாரடைப்பு வராத வண்ணம் தடுத்து உதவுகிறது.

கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க உதவுகிறது. மேலும் கொத்தவரைச் செடி பசி அடக்கியாகவும், வலி நிவாரணியாகவும், நுண்கிருமி நாசினியாகவும், வீக்கம் கரைச்சியாகவும், வற்றச் செய்யும் குணமுடையதாகவும், வயிற்றுப் புழுக் கொல்லியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டு வலிக் குறைப்பானாகவும், கட்டிகளைக் கரைப்பானாகவும், புண்களை ஆற்றியாகவும், நீர்ப் பெருக்கியாகவும், கோழைக் கரைச்சியாகவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும், சுரப்பிகளைக் கட்டுப்படுத்தவும் உதவும் தன்மைகளைப் பெற்றுள்ளன.