FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on September 06, 2025, 08:23:29 AM

Title: பகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...?
Post by: MysteRy on September 06, 2025, 08:23:29 AM
(https://i.ibb.co/hJr3Ld8y/542591466-122250663254037466-207799480780906183-n.jpg) (https://imgbb.com/)

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும்தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்பவெப்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை மட்டும்தான் தூங்குவதற்கு ஏற்ற காலம் என்றும் கூறுகிறார்கள்.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும். அதாவது நோய்களும் பற்றி கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர். அதில் உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.