FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on August 26, 2025, 12:49:59 PM

Title: சுதந்திரம்!
Post by: joker on August 26, 2025, 12:49:59 PM
அதிகாலையில் சூரியன் உதிக்கும் நேரம்,
முதல் கதிரின் வெப்பத்தில்
வானத்தை நோக்கி
இரு சிறகுகளை விரித்து பறக்கும்
பறவைகளை பார்த்தேன்.
அதன் பார்வையில் பூமி சிறியதாய்,
ஆனால்
அதனுள் ஒளிந்திருப்பது
அளவற்ற பரந்து விரிந்த சுதந்திரம்

காற்று தள்ளினாலும்,
மேகம் மூடினாலும்
அது நிற்கவில்லை,
அது பின்னோக்கிப் போகவில்லை
காற்றோடு சேர்ந்து பறக்கும்
அதன் அறிவு
அதன் இரு சிறகுகளும்
உறுதியின் குறியீடு.

அது பாடும் சுருதி
“இது என் உலகம்,
என் வானம்
என் சுதந்திரம் என

கூண்டுக்குள் வைக்கப்பட்ட தருணங்களில் கூட
அதன் நெஞ்சம் நம்பிக்கையோடு
துடித்துக்கொண்டுதான் இருந்தது
“ஒருநாள் வானம் வசப்படும் என

மனிதன் கட்டியமைத்த
கூண்டுக்களோ சுவர்களோ
அதன் உடலை தான் கட்டிவைக்க முடிந்தது
உள்ளத்தை அல்ல

பறவையின் சுதந்திரம்
மனிதனின் கனவுக்கு நிகரானது
அது பறப்பது போல்
ஓர் நாள் நம் வாழ்வும் நம்
இலட்சியத்தை நோக்கி பறக்க வேண்டும்

சுதந்திரமே மூச்சு
அது தானே வாழ்வின் அர்த்தம்



****JOKER****