(https://i.ibb.co/CKcBs4MZ/536516320-122247949844037466-3697102469027080473-n.jpg) (https://imgbb.com/)
மழைக் காலங்களில், தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிவரும் வானிலைச் செய்தியில், மேகச்சுருள் (சுழலும் மேகக்கூட்டங்கள் / படர்ந்த கடல் பகுதியைக் காட்டும், செயற்கைக் கோள் படங்களைப் பார்த்து இருப்பீர்கள். இந்த மேகச் சுருள் எப்படி உருவாகிறது? இது நமக்குக் கூறும் செய்தி என்ன? இந்த இயற்கை நிகழ்வைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்!
1.பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் (Equator), வெப்பத்தால் கடல் நீர் சூடாகிறது.
2. இதனால் ஆவியாகும் நீர், கடலின் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள காற்றுடன் கலக்கிறது. இந்த சூடான ஈரக்காற்று, செங்குத்தாக நேர் மேலே (Vertically Upwards) செல்கிறது. கடலின் மேற்பரப்பில் இருந்த பெரும்பாலான காற்று மேலே சென்று விடுவதால், அந்த இடத்தில் குறைவான காற்றே மீதம் உள்ளது. இதனால், அந்த வளிமண்டலப் பகுதியில், காற்றழுத்தம் குறைகிறது.
3. இந்த குறை அழுத்தத்தை நிரப்ப, அதன் சுற்றுப் பகுதியில் உள்ள வளி மண்டலக் காற்று சுழன்று (Whirl) விரைகிறது.
4. இவ்வாறாக, மேலே சென்று தங்கும் சூடான ஈரக் காற்று, குளிர்ந்து, நீர்த்திவலைகள் உறைந்த மேகமாகிறது (Clouds). இந்த மேகமானது, காற்றுடன் சேர்ந்து சுழல்கிறது.
மேலே உள்ள படிப்படியான நிகழ்வுகள் 1 முதல் 4 வரை, மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது.
இப்படித் தொடர்ந்து, ஏற்படும் ஆவியாதல் (Vaporization) நிகழ்வால், அந்தப் பகுதியை மையமாகக் கொண்டு பெரிய அளவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் (Depression) உருவாகிறது. அதற்கேற்றபடி, இந்தக் குறை அழுத்தப் பகுதியை நிரப்ப, வலிமையான காற்று தேவைப்படுகிறது. இந்தக் காற்று, குறை அழுத்த மையப் பகுதியைச் சுற்றி, சுழன்று அதி வேகத்துடன் சென்று, அந்தப் பகுதியை நிரப்ப முயலுகிறது.
காற்றின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்வதால், அது புயலாக (Tropical Cyclone) மாறுகிறது. இதனால் தான் இந்த சுழலும் மேகக்கூட்டங்கள், செயற்கைக் கோள் படத்தில் வட்டமான துளை கொண்ட மையப் பகுதியை உடைய மேகச் சுருள் போல் காட்சி அளிக்கிறது. இந்த வட்டமான மையப் பகுதிக்கு கண் (Eye) என்று பெயர். செயற்கைக் கோள் படத்தில் உள்ள சுழலும் மேகச்சுருளின் வேகத்தையும், அடர்த்தியையும், பரப்பளவையும் பொருத்து அதன் வலிமையைப் புரிந்து கொள்ள இயலும். இந்த சுழலும் மேகக் கூட்டத்தை உள்ளடக்கிய காற்று, நகர்ந்து கரையை அடையும் போது, நிலப் பகுதியை சூறாவளிப் புயலுடன் கூடிய மழையாகத் தாக்குகிறது. நிலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் போது இந்தக் புயல் காற்று வலுவிழக்கிறது.