(https://i.ibb.co/0jYJcqx2/517636772-1201378865356672-7585162269143833221-n.jpg) (https://ibb.co/DDwKt4ZW)
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு வகைகளை உண்ண வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்தில் என்ன பங்கு வகிக்கிறது என்பதும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. எல்லா நாடுகளிலும் பொதுவாக அறியப்படும் உண்மை என்பது உணவானது மனதிற்கு நிறைவையும், சக்தியையும், ஆரோக்கியத்தையும் தர வேண்டும் என்பதேயாகும்.
ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் சம்பா அரிசி, கோதுமை, ரவை, அறுபதாம் குருவை, ஆட்டு இறைச்சி, அரைக்கீரை, முள்ளங்கி, நெல்லிக்காய், திராட்சை, புடலங்காய், வெல்லம், சிறுபயறு, சுத்தமான நீர், பால், நெய், மாதுளம்பழம், இந்துப்பு போன்றவற்றை சாப்பிட்டு வரலாம்.
வாழைப்பழம், பலாப்பழம், மோதகம் முதலியவற்றை முதலில் சாப்பிட வேண்டும். புளிப்பானவற்றை நடுவில் சாப்பிட வேண்டும். கசப்பாக உள்ளதை கடைசியில் சாப்பிட வேண்டும்.
இரைப்பையில் பாதி அளவு திட உணவும், கால் பாகம் திரவ உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும். எஞ்சிய கால் பாகத்தை வாயுவுக்கும், அதன் அசைவுக்கும் விட்டு விட வேண்டும்.
நவீன மருத்துவர்கள் கலோரி என்ற கண்ணோட்டத்தில் உணவைப் பிரித்து பேசுகிறார்கள். ஆனால் ஆயுர்வேதம் ‘அறுசுவை’ என்ற தத்துவத்தின் கீழ் உணவை பற்றி பேசுகிறது.
இதய நோய், புற்றுநோய்கள், மது மேக நோய் போன்றவை தவறான உணவு பழக்கத்தால் உருவாகி மனிதனின் உடலை பாதிக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 2 ஆயிரம் கலோரி அளவுக்கு உணவு தேவைப்படுகிறது. கலோரி என்பது உடலுக்கு தேவையான சக்தி ஆகும். இதை பெறுவதற்கு பல விதமான உணவு வகைகளை பயன்படுத்தலாம். குறிப்பிபாக தானியங்கள், பழங்களை கலந்து சாப்பிட வேண்டும்.
ஓட்டல்களில் அதிகம் சாப்பிடக்கூடாது. பழங்களையும், பருப்பு வகைகளையும், நார்ச்சத்துள்ள உணவு வகைகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு உணவில் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பு ஈரப்பதம் கொண்டதாகும். பண்டைய காலத்தில் உப்பு அதிகம் உட்கொண்டவர்களுக்கு இளநரை போன்ற நோய்கள் ஏற்பட்டது. மேலும் உப்பானது வீக்கம் போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்று சரகர் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2.5 கிராம் முதல் 3 கிராம் அளவுக்கு உப்பு சேர்த்தால் போதும்.
உணவை சாப்பிட்டால் மட்டும் போதாது. உடலுக்கு அசைவு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். உணவை நன்றாக மென்று தின்ன வேண்டும். சாப்பிடும் போது மனம் இயல்பாக இருக்க வேண்டும். பரபரப்பாக இருப்பதை தவிர்க்க வேண்டும். சிறிய அளவு உணவை பல தடவை சாப்பிடுவது இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வெள்ளை தானியங்கள், வெள்ளை மைதா, வெள்ளை அரிசி, சீனி போன்றவை மோசமான மாவு பொருட்களாக கருதப்படுகிறது. இவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென கூட்டி நீரழிவு நோய் உருவாக காரணமாக அமைகிறது. எனவே வெள்ளை சீனியை அறவே தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
காம்பிளக்ஸ் கார்போஹைட்ரேட் என்று சொல்லக்கூடிய மாவு பொருட்கள் உடலுக்கு நன்மையை செய்கிறது. தானியங்கள், பீன்ஸ், பழவகைகள், காய்கறிகளில் சேனை, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை காம்பிளக்ஸ் கார்போஹைட்ரேட் என்கிறோம்.
பதப்படுத்தப்பட்ட உப்பு சேர்த்த வறண்ட உணவான பிஸ்கட் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தானியங்களை உடைத்து தவிடு நீக்காமல் முழு தானியங்களை பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாகும். நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை தாராளமாக பயன்படுத்த வேண்டும்.
பீன்ஸ், பழங்கள், ஓட்ஸ் போன்ற வையே நார்ச்சத்து உணவு களாகும். ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின், தாதுப் பொருட்கள் போன்றவை இருப்பதால் அதையும் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். உரம் போடாத காய்கறிகள் கிடைத்தால் அவை உடலுக்கு மிக மிக நல்லது. கொட்டை உணவு வகைகளில் பாதாம் பருப்பு உடலுக்கு நல்லது.
தினமும் 2 அல்லது 3 பாதாம் பருப்பை சாப்பிடலாம். எண்ணெய் வகைகளில் தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றை அளவுடன் பயன்படுத்த வேண்டும். நல்லெண்ணையே நல்லெண்ணையாகும். இது உடலுக்கும் நல்லது. பழச்சாறுகளை குடிக்கும் போது அதில் சீனி சேர்க்க கூடாது. பொதுவாக பகல் 11 மணி முதல் ஒரு மணிக்குள் தினமும் 10 நிமிடமாவது வெயிலில் நிற்க வேண்டும். அல்லது உடலில் சூரியனின் கதிர்கள் படுவது போல் இருக்க வேண்டும்.
எப்போதும் வழக்கமான உணவையே உண்ண வேண்டும். சுத்தமான உணவை உரிய நேரத்தில் உண்ண வேண்டும். எளிதில் சேரிக்க கூடிய நெய்ப்பு, உஷ்ணம், இனிப்பு ஆகியவை கொண்ட உணவையே உண்ண வேண்டும். அறுசுவை உணவை ரசித்து, ருசித்து உண்ண வேண்டும். நன்றாக மென்று சாப்பிட வேண்டும். குளித்து விட்டு சுத்தமாக அமர்ந்து சாப்பிட வேண்டும்.
உணவை உட்கொள்பவர்களும், அதனை கொடுப்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். உணவில் சற்று திரவமும் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் ஆயுர்வேதத்தின் அஷ்டாங்க ஹிருதயத்தில் கூறப்பட்டுள்ளது.
கெட்டுபோன உணவு அதிகமாக உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிட கூடாது. இரவில் தயிர் சேர்த்து உண்ண கூடாது. சமைக்காத முள்ளங்கி, பன்றி, செம்மறி ஆடு, பசு இறைச்சி போன்றவற்றைச் இரவில் ஒரு போதும் சாப்பிடக்கூடாது. உளுந்து, மொச்சை, சிறுகடலை போன்றவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.