FTC Forum
Special Category => வலை செய்திகள் => Topic started by: mandakasayam on July 12, 2025, 07:32:15 AM
-
நாசா ; பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெர்மியன்-டிரயாசிக் பேரழிவு காரணமாகப் பூமியின் பெரும்பகுதி அழிந்து போனது. அதன் பிறகு பூமி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வர பல லட்சம் ஆண்டுகள் ஆனதாம்.
அப்போது என்ன நடந்தது.. கொதிக்கும் வெப்பத்திற்குப் பூமி தள்ளப்பட்டது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சுமார் 252 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெர்மியன்-டிரயாசிக் பேரழிவு, பூமியில் இருந்த உயிரினங்களில் சுமார் 90% அழித்தது. இந்தப் பேரழிவு குறித்து கடந்த சில காலமாகவே ஆய்வுகள் நடந்தாலும் சில முக்கிய விவரங்களை ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
அந்த காலகட்டத்தில் துல்லியமாக என்ன நடந்தது என்பதை ஆய்வாளர்களால் புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இதற்கிடையே பேரழிவிற்கு விடுபட்ட காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்
பூமியின் மர்மமான காலநிலை பேரழிவுகளில் ஒன்றாக அறியப்படும் இந்த பெர்மியன்- டிரயாசிக் பேரழிவு குறித்து இந்த புதிய ஆய்வு வெளிச்சம் பாய்ச்சுவதாக இருக்கிறது. அந்த மிகப் பெரிய பேரழிவு முடிந்த பிறகும் கூட பல லட்சம் ஆண்டுகள் கிரகத்தில் அதீத வெப்பம் நிலவியதாம். அதாவது அந்தக் காலகட்டத்தில் தாவரங்கள் போதுமான வேகத்தில் வளராததால் பூமியில் அதீத வெப்பமே பல காலம் நிலவியிருக்கிறது.
பெர்மியன்-டிரயாசிக் பேரழிவு என்பது சுமார் 252 மில்லியன், அதாவது சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. இதனை ஆய்வாளர்கள் மாபெரும் பேரழிவு எனக் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பேரழிவு நடந்த போது பூமியில் இருந்த உயிரினங்களில் சுமார் 90% உயிரினங்கள் மொத்தமாக அழிந்து போய்விட்டதாம். கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தால் பூமியே கூட முழுமையாக அழிந்திருக்கும்.
சைபீரியாவில் ஏற்பட்ட பெரிய எரிமலை வெடிப்பு ஒன்றே இதற்குக் காரணமாகும். இந்த எரிமலை வெடிப்பால் க்ரீன் ஹவுஸ் கேஸ் எனப்படும் பசுமை இல்ல வாயுக்கள் பூமியில் அதிகளவில் வெளியேறியது. இதனால் பூமியில் வெப்பமயமாக்கல் அதிகரித்து. இதுவே பேரழிவுக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர்
50 லட்சம் ஆண்டுகள் கொதித்த பூமி..
ஆனால், எரிமலை வெடிப்பு நின்ற பிறகும் பூமியின் வெப்பம் சுமார் 50 லட்சம் ஆண்டுகளுக்கு அதிக அளவிலேயே நீடித்தது ஏன் என்ற கேள்வி இத்தனை காலம் இருந்தது. அப்போது பூமி முழுக்க முழுக்க கொதிக்கும் வெப்பத்தில் இருந்துள்ளது. இந்தக் கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். அதற்கான காரணம் மண்ணில் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தாவரங்கள் : இந்தப் பேரழிவு எரிமலை வெடிப்பின்போது பூமி முழுக்கவே தாவரங்களின் வாழ்க்கையும் மாறி இருந்ததாம். அதில் ஒரு விஷயம் மிகத் தெளிவாகவே தெரிந்தது. அதாவது அதீத வெப்பத்தால் தாவரங்கள், குறிப்பாக வெப்பமண்டலப் பகுதிகளில் இருந்த செடி, கொடிகள் கிட்டதட்ட முழுமையாக அழிந்துவிட்டதாம். இதனால் தாவரங்களால் கார்பன் உறிஞ்சுதல் மிகவும் குறைவாக இருந்தது.
இப்படிப் பூமியில் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததால்.. காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி நிலத்தில் சேமிக்க முடியாமல் போனது. இந்த சுழற்சி காரணமாக CO2 அதிகரித்து, உலக வெப்பநிலையும் அதிகரித்ததாக நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் காலநிலையைப் பேணுவதில் தாவரங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையே இது காட்டுகிறது. தாவரம் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழிவு நிலத்தில் உள்ள வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை. அது ஒரு ஆபத்தான சுழற்சியை உருவாக்கியது. அதாவது தாவரங்கள் குறைவாக இருந்தால் காற்றில் CO2 அதிகமாகும். இதன் காரணமாக வெப்பம் அதிகரித்து மீண்டும் தாவரங்களே வேகமாக அழிக்கிறது.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்தப் பேரழிவுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையைத் தருகிறது. சுற்றுச்சூழல் அமைப்புகள் ஒரு முறை அழிந்துவிட்டால் நாம் என்ன செய்தாலும் அதை உடனடியாக மீட்டெடுக்க முடியாது. மீண்டும் காலநிலை பழையபடி திரும்பப் பல காலம் ஆகலாம்" என்கிறார்கள்.
இப்போது அழிப்பு மற்றும் கார்பன் வெளியேற்றம் அதிகரித்து வருவதால், 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் மீண்டும் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் பூமி நிரந்தரமாக அழிவின் பாதையிலேயே செல்லும்.