FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on April 18, 2012, 09:30:53 AM

Title: லெட்டூஸ் சாப்பிட்டா 'லப் டப்' சரியா இருக்கும்
Post by: kanmani on April 18, 2012, 09:30:53 AM
லெட்டூஸ் சாப்பிட்டா 'லப் டப்' சரியா இருக்கும்

சாலட் கீரைகளில் அரசனாய்த் திகழ்வது லெட்டூஸ் என்னும் இலைக்கீரை. இது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் கார்போஹைடிரேட் அடங்கியுள்ளதால் இது காய்கறி போன்றே பயன்படுகிறது.

லெட்டூஸ் கீரையின் தாயகம் இந்தியாதான். இக்கீரையில் 6 இனங்கள் காணப்படுகின்றன. எகிப்துநாட்டில் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகளில் இக்கீரையின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களைப் போலவே பண்டைய கிரேக்கர்களும், மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் லெட்டூஸ் கீரையைப் புத்தாண்டு தினத்தன்று தவறாமல் சேர்த்துக் கொள்கின்றனர். அன்றைய தினம் இக்கீரை இடம் பெறுவது தனிச் சிறப்பு என்று கருதுகின்றனர்.

அடங்கியுள்ள சத்துக்கள்

கரப்பான் ஏற்படாமல் தடுக்கும் கீரை இது. சாதாரண உணவு போல் பயன்படுகிறது. இதில் உயர்ந்தரக ஆரோக்கியச் சத்துகள் அடங்கியுள்ளன. காரப்பொருள், முக்கியமான பொருளாகவும், அதே நேரத்தில் அதிகமாகவும் இக்கீரையில் இருக்கிறது.

லெட்டூஸ் கீரையில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், வைட்டமின் சி தயாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது. வைட்டமின் ‘இ' 'கே’ போன்றவையும் அடங்கியுள்ளன. இதில் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன.

நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.

இதயத்தை காக்கும்

மருத்துவக் குணங்கள் நிரம்பிய இக்கீரை உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் தரமான முறையில் புதுப்பிக்கிறது. இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தமாகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகிறது. மூளை சுறுசுறுப்பாகிறது. உடலும் தொடர்ந்து அரோக்கியத்துடன் இருக்கும்.

இக்கீரையில் அதிக அளவு மக்னீசியம் உள்ளதால் மூளையின் இயக்கம், நரம்புகளின் இயக்கம், தசைகளின் இயக்கம், இதயத்தின் இயக்கம் ஆகியவற்றிற்கு மக்னீசியம் தேவை. எனவே, நன்கு பச்சையாக உள்ள கீரைகளை மிக்ஸி மூலம் அரைத்துப் சூப் போல குடித்தால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பலம் பெறும்.இதே சாறு நுரையீரல்களையும் பலப்படுத்தும். மனத்திற்கு உற்சாகத்தையும், உடலுக்குக் குளிர்ச்சியையும் இக்கீரை தருவதால் காலையில் இக்கீரைச்சாற்றை அருந்துவது நல்லது.

சமைத்து சாப்பிடலாம்

இக்கீரையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி பச்சையாகவே சாப்பிடலாம். நன்கு பச்சை நிறத்தில் உள்ள கீரைகள்தாம் சிறந்தவை. தேவைக்கு ஏற்ப இலைகளைப் பறித்து உடனே சமைத்தால் அதிக அளவு வைட்டமின்கள் நமக்குக் கிடைக்கும்.

கீரையை நன்கு கழுவிய பிறகே சமைக்க வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் சமைக்க வேண்டும். அதைப் பொரியல் செய்து சாப்பிடலாம். பருப்பு வகைகள் சேர்த்து பச்சடியாகச் சமைக்கலாம். இந்தக் கீரை கால் வேக்காடு வெந்தாலே போதும். அதற்கு மேல் வேக வைத்தால் தாது உப்புகளும், வைட்டமின்களும் அழிந்துவிடும். எனவே, பத்து நிமிடத்துக்குள்ளேயே கீரையை அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும். ஆஸ்துமா, மூச்சுத்திணறல், வாய்வுத் தொந்தரவு ஆகியன நீங்க இத்துடன் பருப்புச் சேர்த்துச் சமைத்து உண்ணவேண்டும்.

நீரிழிவு குணமாகும்

இக்கீரையில் செல்லுலோஸ் அதிக அளவில் இருக்கிறது. அதனால் உணவு, குடற்பகுதிக்குள் செல்ல எளிதில் வழி கிடைக்கிறது. குடலும் சுத்தப்படுத்தப்பட்டு மலச்சிக்கல் பூரணமாக நீங்குகிறது. நீண்டகாலமாய் மலச்சிக்கலால் அவதிப்படுவோர் ஒரு வாரத்துக்கு இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் அதிக அளவு நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் உடலிலும், மனத்திலும், புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாய்ச் செயல்படுவார்கள். இதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதால் நீரிழிவுக்காரர்களுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாத உணவு இது.

ஆழ்ந்த தூக்கம்

இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் லெட்டூஸ் கீரைச் சாற்றை அருந்தினால் போதும். இக்கீரையில் ‘லெக்ட்டு கேரியம்’ என்னும் பொருள் இருக்கிறது. இது தூக்கத்தை வரவழைக்கக் கூடியது.

தலைவலி ஏற்பட்டால் ரோஜா எண்ணெயுடன் இக்கீரைச் சாற்றைக் கலந்து நெற்றியில் தடவினால் ஐந்து நிமிடங்களில் குணமாகிவிடும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

இதில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது. அதிக அளவில் இரும்புச்சத்து உள்ள லெட்டூஸ் கீரை இரத்தசோகை நோயாளிகளுக்கு மிக உயர்ந்த டானிக் ஆகும். கீரை உடனே செரிமானம் ஆகிவிடுவதால் இரத்த சோகை நோயாளிகளுக்கு இரத்தவிருத்தி ஏற்படுகிறது.

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இரத்த சோகையையும் லெட்டூஸ் கீரை குணப்படுத்துகிறது. கர்ப்பம் தரிப்பது முதல் தாய்பால் தரும் வரை இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. இதனால் அபார்சன் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்படுகிறது.