FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on June 25, 2025, 03:10:09 PM

Title: நானும் நிலவும் !
Post by: joker on June 25, 2025, 03:10:09 PM
இரவு சற்றே விழித்ததும்,
உலகம் தனது கலகலப்பை
மறந்ததும்,
இரவின் பரிதாபத்தில்
பிரபஞ்சம் தன்னைக் கண்டுகொள்ள
மறந்தபோது,
மேகங்களுக்கு இடையே தோன்றினாள்.
தோழியாக

தவிக்கின்ற
தனிமையின்
நிழலாக,
நிசப்தமாய்
அவளை நோக்கி
நானும்

அவளோ
வானத்தில் பயணிக்கிறாள்,
நீள்கிறாள், விலகுகிறாள், மறைகிறாள்
எனக்குள் மட்டும்
தனிமை நின்று கொண்டே இருக்கிறது.

எங்களுக்குள்
ஒரு மெளனமான
உரையாடல்

உன் ஒளி
இரவில் பயணிக்கும்
பலருக்கு
உதவுகிறது என்றேன்

அது எனதில்லை
சூரியனிடமிருந்து
கடன்வாங்கிய ஒளி
என்கிறாள்

அதிர்ஷ்டசாலி நீ
உன்னை சுற்றி பல லட்சம்
விண்மீன்கள் இருக்கிறதே
என்றேன்

அட அவை இருப்பது
மிக மிக தொலைவில்
உன் கண்ணுக்கு -அருகில்
இருப்பது போல தெரிகிறது
என்கிறாள்

அவளே தொடர்கிறாள் ..
இதோ என்னை சிறிது நேரம் மறைக்கும்
இந்த மேகத்தை போல தான்
உன் வாழ்வில் தோன்றும்
துன்பங்களும்

அதை எண்ணி சோகம் கொள்ளாதே
நீ நீயாக இரு
உனக்கான காலம் வரும்
அதை யாரும் தடுக்க முடியாது
அதுவரை பொறுமையாய் இரு
என்றாள் அவள்

நிலவு தரும்
அந்த அமைதி…
உள்ளத்தில்
ஒரு புதிய வானத்தை உருவாக்குகிறது

இதோ அவளை
மறைத்த மேகம்
விலகுகிறது
உடன் என் மனத்திரையும் விலக
முழுமதி என்னை பார்த்து
சிரிப்பதாய் உணர்கிறேன்



***JOKER****
Title: Re: நானும் நிலவும் !
Post by: சாக்ரடீஸ் on July 03, 2025, 12:17:37 PM
ஜோக்கர் மச்சி 🤩

நிலவு தரும்
அந்த அமைதி…
உள்ளத்தில்
ஒரு புதிய வானத்தை உருவாக்குகிறது

அருமையான கற்பனை 🍀