(https://i.imgur.com/DA7dYTY.jpeg)
கப்பல்களில் பயணிக்கும் பலர் தங்களுடன் பூனைகளையும் கூட்டி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பண்டைய எகிப்தில் பூனைகளை தெய்வமாக வணங்கியுள்ளனர். திறமை வாய்ந்த விலங்குகள் என்ற பெயர் பூனைகளுக்கு இருக்கிறது. அத்துடன் புத்திசாலித்தனமான மற்றும் நல்லூழை தேடி தரக்கூடிய விலங்குகளாகவும் பூனைகள் கருதப்படுகின்றன. எனவே கப்பல்களில் பலரும் பூனைகளையும் அழைத்து செல்கின்றனர்.
மோசமான வானிலைகளில் இருந்து கப்பல்களை பாதுகாக்கும்
அதிசய திறமை பூனைகளுக்கு இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது.
பூனைகள் தும்மினால் மழை வரப்போகிறது என்பது கப்பல் பயணங்களை மேற்கொள்பவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதே சமயத்தில் பூனைகள் சுறுசுறுப்பாக இருந்தால், காற்று பலமாக வீசும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. வானிலையில் ஏற்படும் மாற்றங்களை கணிக்கும் திறன் பூனைகளுக்கு உள்ளது என்று கப்பல் பயணங்களை மேற்கொள்பவர்கள் நம்புகின்றனர்.
இவை அனைத்தையும் முழுமையாக மூட நம்பிக்கை என்று நம்மால் ஒதுக்கி விட முடியாது. ஏனெனில் இந்த நம்பிக்கைகளில் ஓரளவிற்கு உண்மை இருக்கவே செய்கிறது.
வானிலையில் ஏற்படக்கூடிய சிறிய மாற்றங்களை கணிக்கும் திறன் உண்மையில் பூனைகளுக்கு உள்ளது. அவற்றின் உணர்திறன் மிக்க காதுகளே இதற்கு காரணம். அத்துடன் குறைந்த வளிமண்டல அழுத்தத்தை உணரும்போது, பூனைகள் அமைதியற்றவையாக இருக்கும். அதாவது பதற்றமாக ஓய்வில்லாமல் இருக்கும்.
புயல் காலநிலைக்கு முன்னால் இப்படி நடக்கலாம். இதன் காரணமாக மோசமான வானிலையில் இருந்து கப்பல்களை பாதுகாக்கும் சக்தி பூனைகளுக்கு உள்ளது என்ற நம்பிக்கை உருவாகியிருக்கலாம். ஆனால் பூனைகளை கப்பல்களில் அழைத்து செல்வதால், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நன்மை ஒன்று கப்பல்களுக்கு இருக்கிறது.
எலிகளை கொல்வதுதான் அந்த நன்மை.
இதில், எலிகளை பிடிப்பது முக்கியமான காரணம். எலிகளால் கப்பல்களுக்கு நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. கப்பல்களில் உள்ள கயிறுகள் மற்றும் மரப்பாகங்களை எலிகள் கடித்து சேதப்படுத்தி விடும். அத்துடன் மின்சார வயர்களும் எலிகளால் சேதப்படுத்தப்படுகின்றன. மேலும் கப்பல்கள் கொண்டு செல்லும் சரக்குகளுக்கும் கூட எலிகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்தான். குறிப்பாக தானியங்கள் போன்ற சரக்குகளை கப்பல்கள் கொண்டு சென்றால், எலிகளால் இழப்பு ஏற்படலாம். எலிகள் தானியங்களை சாப்பிட்டு விடுவதால், உணவுகளுக்கு பஞ்சம் ஏற்படும். மேலும் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கான உணவுகளையும் எலிகள் சேதப்படுத்தி விடும். மேலும் எலிகள் நோய்களையும் பரப்பக்கூடியவை. நீண்ட காலம் கடலில் இருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். இப்படி கப்பல்களுக்கும், கப்பல்களில் பயணம் செய்பவர்களுக்கும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடிய எலிகளை தாக்கி கொல்லும் திறனை பூனைகள் இயற்கையாவே பெற்றுள்ளன.
ஒரு வகையில் கப்பல்கள் வெற்றிகரமாக பயணத்தை முடித்து கொண்டு கரை திரும்புவதற்கு பூனைகளும் ஒரு காரணமாக உள்ளன. எனவே பூனைகள் நல்லூழை தேடி தரக்கூடியவை என்ற எண்ணம் கப்பல் பயணம் மேற்கொள்பவர்களிடம் உருவாகியிருக்கலாம்.
அத்துடன் புதிய சூழல்களுக்கு பழக்கப்படுத்தி கொள்ளும் திறனும் இயற்கையாகவே பூனைகளுக்கு உள்ளது. எனவே பூனைகளை கப்பல்களில் அழைத்து செல்வது எளிமையான ஒரு விசயமாக இருக்கிறது.
அத்துடன் மனிதர்களிடம் நட்பாகவும் நடந்து கொள்ளும் தன்மையும் பூனைகளுக்கு உள்ளது.
நீண்ட காலம் வீட்டை பிரிந்து, கப்பல் பயணம் செய்பவர்களுக்கு இந்த வகையிலும் பூனைகள் நன்மை அளிக்கின்றன. இதன் மூலமாக வீட்டில் இருப்பது போன்ற உணர்வு, அவர்களுக்கு ஏற்படலாம். ஆனால் தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், அனைத்து கப்பல்களிலும் பூனைகளை அழைத்து செல்வதில்லை. குறிப்பாக பெரும்பாலான உல்லாச கப்பல்களில் பூனைகளை காண முடியாது. ஆனால் இன்றளவும் பல்வேறு தனியார் கப்பல்களில் பூனைகளை கொண்டு செல்கின்றனர்.
பூனைகளுக்கு என தனியாக கூண்டு இருக்கும் கப்பல்களும் கூட இருக்கவே செய்கின்றன...