FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thenmozhi on June 17, 2025, 12:44:15 AM
-
:blank:கரிக்கட்டி பிணங்கள் கருகிய எம்மனங்கள்...
ஏர் இந்தியா போயிங் விமானமும், எரிந்துபோன கனவுகளும்❤️
எரிவது விமானம்
என்று சொல்லாதே
உயிர்கள் என்று சொல்
எத்தனை தேசங்கள்
எத்தனை கடவுள்கள்
மனிதர்களைக் காப்பாற்ற
ஒரு கடவுளும் இல்லை
என்று சொல்
கர்ப்பிணிப் பெண் சாம்பலாய்
கைக்குழந்தை சாம்பலாய்
சிறுவர்களும் சாம்பலாய்
முதியவர்களும் சாம்பலாய்
கனவுகள் அனைத்தும்
சாம்பலாகி விட்டன
என்று சொல்...
இலண்டனில் குடியேறுவது
வாழ்நாள் இலட்சியம்
இலட்சங்களில் சம்பாதிக்கும்
என்ஜினியர் ஒருவர்
தனது மனைவி
மூன்று குழந்தைகளுடன்
சந்தோசமாக செல்பி எடுத்து
இந்தியாவிற்கு விடை கொடுக்கிறார்
சில கணங்களில்
உலகமோ அவருக்கு
விடை கொடுக்கிறது
வாழ்க்கை ஒரு
புரியாத புதிர்
என்று சொல்
நட்சத்திரங்கள் பொய்
சடங்குகள் பொய்
பதினோரு பொருத்தங்களோடு
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
திருமணம் செய்து
தேனிலவு சென்றவர்கள்
அந்தரத்தில் செத்துவிட்டார்கள்
ஜாதகம் பொய்யென்று
உரக்கச் சொல்
இலட்சங்களில் ஆசை
கோடிகளில் ஆசை
டாலர்களில் ஆசை
ஒத்தை ரூபாய் வைக்க
நெத்திகூட இல்லையென்று சொல்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கைநொடிக்கும் நேரத்தில்
எல்லாம் முடியுமென்றால்
விஞ்ஞான வளர்ச்சி
வீணென்று சொல்
தொன்னூற்று ஒன்பது
சதவிகிதப் பாதுகாப்பு
நூறு சதவிகிதப் பாதுகாப்பு
எல்லாம் ஏமாற்று வேலை
என்று சொல்
சாம்பல் கூட
மிஞ்சாத வாழ்க்கை
என்னவென்று சொல்
என்னவென்று சொல்
சரித்திரத்தில் படிந்த
கறுப்புக் கறை
இந்த நாளென்று சொல்
எல்லாம் சாம்பல்..!
-
அருமையான வரிகள் தேன்மொழி மனதில் உள்ள வலிகளை வேதனைகளுடன் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளது உங்கள் கவிதையின் வரிகள்
-
உயிரின் மதிப்பே உயரம் என்பதைக் காட்டிய நிகழ்வு,
கண்ணீரில் கரைந்த கனவுகள் சுமக்கும் இழப்புகள்,
வார்த்தைகளில் போகாத வலி இது,
அழியாத சுவடுகளாய் நெஞ்சில் நிற்கும்..!
மொழி பிரெண்ட் கவிதை அருமை 🍀
-
தேன்மொழியின் கவிதை
சக மனிதனின் குமுறல்
என் விமானம் பற்றிய முந்தைய கிறுக்கலில் சொன்னது போல
"விமானம்
வாழ்வு உள்ளவரை
அழியா நினைவுகளை தருகிறது
அது
எப்படிபட்ட நினைவுகள்
என்பது காலத்தின் கையில்"